காதல் என்பது - 10

அவனின் வீட்டில்
அமைதி நிலவியது

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
ஒன்றுக்கொன்று

சமரச முயற்சிக்காக
பாடு பட்டுக்கொண்டிருந்தன

என் விருப்பம் சொல்லி விட்டேன்
அதில் உறுதியாய் நின்றுவிட்டேன்

இருப்பது நான் மட்டும்
உடன் பிறந்தார் யாருமில்லை

நீங்களும் ஆமோதிப்பீர்
என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்

உங்களை விட்டு விலக மாட்டேன்
என் அவளை விடவும் மாட்டேன்

அன்பானவள், அழகானவள்,
பண்பானவள், பாசமானவள்

நெளிவு சுளிவு தெரிந்தவள்
அனுசரித்து செல்பவள்

மரியாதை கொடுப்பவள்
மானத்தை காப்பவள்

என்னையும் ஈர்த்தவள்
என் மனதில் அமர்ந்தவள்

நன்கு படித்தவள்
நற்பெயர் பெற்றவள்

உலகம் அறிந்தவள்
உள்ளம் நெகிழ்பவள்

காதலில் வீழ்ந்து விட்டேன்
என்னை நான் மறந்து விட்டேன்

அவளைப் பற்றி சொல்லி விட்டேன்
என் மனம் திறந்து விட்டேன்

உங்கள் பதில் வேண்டுகிறேன்
மௌனம் தவிர்க்கச் சொல்லுகிறேன்

கொட்டித் தீர்த்து விட்டான்
தீர்ப்பை எதிர்பார்த்தான்


தாம் பெற்றெடுத்த புதல்வன்
நம் முன்னே நிற்கிறான்

எம் விருப்பம் கேட்காமல்
தம் விருப்பம் சொல்கிறான்

நல்ல விதமாய் வளர்த்தோம்
நம்பிக்கை வைத்தோம்

சிறு துளி சந்தேகம்
இவன் மீது வரவில்லை

எங்களுக்கும் யாருமில்லை
இவனை விட்டால் வேறு வழியில்லை

இக்கட்டான சூழலில்
எம்மை கொண்டு வந்து விட்டான்

உள் மனதில் நடுக்கம் உண்டு
இனி வரும் காலத்தைக் கண்டு

எங்கு தவறு செய்து விட்டேன்
இவன் தடம் புரண்டு போவதற்கு

அலைபாயும் மனமும்
அனலாய் கொதிக்கிறது

என்ன பதில் தருவது
என பதட்டத்துடன் யோசித்தாள்

இந்த தவப்புதல்வனை
ஈன்றெடுத்த சராசரி தாயும்தான்

முடிவுக்கு வர முடியாமல்
தன் கணவனை பார்த்திட்டாள்


இதுவரை வாழ்ந்த வாழ்க்கை

இன்பமாய் நகர்ந்த நாட்கள்

அவள் மனம் நோகாமல்
காத்த தருணம்

இவை யாவும் மனதில் தோன்ற

தன் மனைவியை
நிமிர்ந்து நோக்கி
கண்களால் அமைதிப்படுத்தி

உள்ளத்தால் தைரியமூட்டி
கலங்காமல் இருக்கச் சொன்னார்

மனம் பதறாமல் இருக்கும்படி
தன் செய்கையால் உணர்த்தி விட்டு

தன் திருவாய் மலர்ந்தார்


எத்தனை நாள் பழக்கம் இதுவோ

உன் எண்ணங்கள் சொல்லிவிட்டாய்

எம் உணர்வை அறிய மறந்து விட்டாய்

உன் எதிர்காலம் நீ
வகுத்து விட்டாய்

எம்மீது நம்பிக்கை இழந்து விட்டாய்

எம் எதிர் காலம் யோசித்தாயா

நீ தான் எங்கள் பலம்
இன்று பலவீனமாய் நிற்கின்றாயே

இளம் ரத்தம் தாறுமாறாக ஓடுகிறது
தன் நிலை மறக்கிறது

தாயின் தவிப்பு நீ அறியவில்லை
உன்னை வளர்த்த பயனை
நாங்கள் பெறவுமில்லை

இது சுயநலம் தான்
உன்னை பொறுத்த மட்டும்

எங்களை பொறுத்த மட்டில்
எங்கள் வாழ்வாதாரம் இது

அந்தப் பெண்ணைப் பற்றி
இவ்வளவு சொன்னாய்

அவள்.....

குல கோத்திரம்,

ஜாதி மதம்....

ஏன் சொல்ல மறந்தாய்

எங்களையும் பாதுகாப்பாய்
அவளை விடவும் மாட்டாய்

இது முள் மேல் நடப்பது போல்
வாழ்க்கை அத்தனை சுலபமில்லை

எதற்கு இந்த பொல்லாத வேலை
மறு பரிசீலனைக்கு இடம் கொடு

கட்டாயப் படுத்தவில்லை
சற்று சிந்தித்துப் பார்க்கச்
சொன்னேன்

வாழ்க்கையில் ஒரு பகுதி
காதல் இருக்கும்
பின் மெதுவாக அதுவும்
கடந்து போகும்

உள்ளதை உள்ளபடி சொல்லி
விட்டேன்
இதை உணர்ந்து கொண்டு
அடுத்த அடி எடுத்து வைப்பாய்

என்று முத்தாய்ப்பாய்
சொல்லி விட்டு
அவரும் நகர்ந்தார்

தம் மனைவியை சைகையால்
அழைத்துக் கொண்டு


(தொடரும்)

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (31-May-16, 3:34 pm)
பார்வை : 124

மேலே