புது நாளைத் தொடர்வது ஆனந்தமே
இரவு, வெளிச்சத்தை
விழுங்கிக் கொண்டிருக்கிறது
வானத்தையே போர்வையாக்கி!
தன்னையிழந்து
பகல் இரவுக்குள் மூழ்கிக்
கொண்டிருக்கிறது!
ஆந்தைகள் அலறியபடி
தங்கள் இரையை வயல்வெளிகளில்
வேட்டையாடுகின்றன!
நட்சத்திரங்கள் வானில்
பட்சமுடன் ஒளியை வாரித் தெளித்து
கண்களைச் சிமிட்டுகின்றன!
முழுநிலவும் தன் பங்கிற்கு ஒளி சிந்தி
கனவுலகில் தேவதையுடன் உல்லாசமாய்
ஆடிப்பாட எனை அழைக்கிறது!
தவளைகள் இப்பூமியில் ஒரு குழுவாகத்
தாளமிட்டு இசையோடு பண்ணிசைத்து
தங்கள் இன்ப உலகில் தாலாட்டுகின்றன!
எண்ணிலடங்கா வௌவால்களும்
வான்வெளியில் நர்த்தனம் புரிந்து
ஆனந்தக் களிப்படைகின்றன!
குளிருக்குத் தப்பிக்க நாங்கள்
நெருப்புக் கணப்பில் நிதானமாக
உறக்கமின்றி ஓய்வெடுக்கிறோம்!
இருள் நீங்கி நிதானமாய்
விடியலைத் துவங்கும் கள்ளமிலா
அதிகாலைச் சூரியன்!
ஆனந்தம்! ஆனந்தம்!! ஆனந்தமே!!.
ஆண்களும் பெண்களும் இன்றொரு
புது நாளைத் தொடர்வது ஆனந்தமே!