தமிழன் ஏன் தமிழகத்தின் முதல்வராக இயலவில்லை

தமிழன் ஏன் தமிழகத்தின் முதல்வராக இயலவில்லை

காலத்தால் மூத்த உலக மொழிகளில் இன்றளவும், பேச்சு, எழுத்து, இலக்கண இலக்கியச் செழுமை என்னும் கூறுகளை உள்ளடக்கி செம்மொழி என்னும் அங்கீகாரம் பெற்றது ‘தமிழ்’. அம்மொழியைப் பேசுவோர் ‘தமிழர்’ என்றழைக்கப்படுகின்றனர். யார் இந்தத் தமிழர் என்ற வினாவிற்கு ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி’ என ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பாமாலை விடை பகர்கிறது.

மானுட சமூகம் தழைத்தோங்கிய நிலையில், ஒலிக் குறிப்புகளைக் கொண்டு தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அத்தகு மானுட சமூகத்தில், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி தங்களுக்கென ‘தமிழ்’ என்னும் செப்பமான மொழியை பேசவும் எழுதவும் துவங்கியிருப்பர் என மானுடவியலாளர்கள் ( Anthropologists ) வரையறுக்கிறார்கள். மொழி திருத்தம் பெறவேண்டுமானால் அவர்கள் தங்களின் நடத்தைகளால், பழக்க வழக்கங்களால், பண்பாட்டுக் கூறுகளால் தங்களைச் செப்பனிட்ட முறையில் வாழ்வியலை நடத்தியிருக்க வேண்டும்.

அத்தகு வாழ்வியலின் வெளிப்பாடுகளுள் ஒன்றாக,
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! (புறநானூறு - 192)
( எல்லா ஊரும் எம் ஊர்; எல்லா மக்களும் எம் உறவினரே; நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை; துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை; சாதல் புதுமை யில்லை; வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை; வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை; பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆதலினால், பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை; பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை ) என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலைக் கருதலாம்.

கலையில் ( திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தூண்களில் ஏழு சுவரங்கள் ஒலிக்கும் வகையில் நிர்மாணித்தது ), கவிதையில் ( சங்கப்பாடல்கள் துவங்கி இன்றைய துளிப்பா ( ஹைக்கூ ) படைப்பது), கட்டுமானத்தில் ( கரிகாலன் கட்டுவித்த கல்லணை, கோயில்கள் ), கடற்பயணங்களில்
( நாவாய்களின் (கப்பல்கள்) வகைகளைக் கொண்டு ) என அனைத்துத் துறைகளிலும் தமிழனின் பெருமையை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே,
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறநானூறு 312)
என சங்ககாலப் பெண்பாற் புலவர் பொன்முடியார் வகுக்கும் கடமைகளைப் பெரிதென்றெண்ணி தாயும், தந்தையும், மன்னனும், மக்களும் வாழ்ந்து வந்த சிறப்பு மிக இனம் தமிழினம்.

முதலாம் இராஜராஜன் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று ""ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்"" என இயம்புகிறது. இராஜராஜன் மதுரையை அழித்தார் என்றும், கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவருடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றும் கூறப்படுகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, இன்றைய சூழ்நிலையை ஒட்டிப் பார்க்கிறபோது, உலகையே வென்ற தமிழன், தமிழகத்தின் முதல்வராக முன்னிறுத்தப்படத் தகுதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டதேன்? என்ற வினா எழுகிறது.

தமிழரின் இன்றைய இழிநிலைக்குக் காரணமாக, தொலைநோக்கின்மை, கோழைத்தனம், தாழ்வு மனப்பான்மை, தலைமை வழிபாடு, திரைப்பட மோகம், சுயசிந்தனை இன்மை, இனவெறுப்புக் கொள்கை, அறியாமை, போலி அறிவியல் வாதம், மொழிவழி பண்பாட்டு அழிவு, சாதிமத பேதம், தாய்வழிக் குடிமுறை ஓய்ந்தமை, தமிழகத்தில் கலப்பினங்கள் உருவானது, வரதட்சணைக் கொடுமை, மொழிவழி அழிவு எனப் பல்வேறு காரணங்களைத் ‘தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ என்ற நூலில் பட்டியலிடுகிறார் க.ப.அறவாணன்.

இவையனைத்தும் இருந்த காலத்தில்தான் ‘பச்சைத் தமிழர்’ எனப் பெரியாரால் அழைக்கப்பட்ட காமராசர் முதல்வராக இருந்தார். ஆனால், இன்று,
தமிழன் சரத்குமார் - நாடார் சமூகம்
தமிழன் அன்புமணி - வன்னியர் சமூகம்
தமிழன் திருமாவளவன் - தாழ்த்தப்பட்ட சமூகம்
தமிழச்சி தமிழிசை - இந்து மதம்
சீமான் - தமிழர் ஈழம் பற்று
கார்த்திக் - தேவர்
எனத் தமிழர்களாக உள்ளவர்கள் ஏன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படக்கூடாதா? ஏன் ஜாதிச்சாயம் பூசுகிறார்கள்? இவர்களுக்கு இந்த ஜாதி ஒட்டு தான் என முடிவு செய்வது மக்களா? அரசியல் கட்சியா? ஏன் நாம் தமிழரை முன்மொழிய வெட்கப்படுகிறோம்? இந்த மண்ணின் மைந்தர்கள் என்ன தவறு செய்தார்கள்? ஒரு இந்துக்கு பிறந்ததா? ஒரு தமிழனாய் பிறந்ததா? என்னும் ஏராளமான கேள்விகள் எழுந்து நிற்கின்றன.

ராமசாமி நாயக்கராகவும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாராகவும், சுந்தரம் ஐயங்காராகவும், வரதராசுலு நாயுடுவாகவும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராகவும், காமராசர் நாடாராகவும், ஆர்.கே.சண்முகம் செட்டியாராகவும், மாணிக்க வேலு நாயக்கராகவும், ராமசாமி படையாச்சியாகவும் சாதிப் பெயர்களின் அடையாளத்தோடுதானே மக்கள் பணியாற்றினர்; அரியணை ஏறி, ஆட்சி பீடத்தை அலங்கரித்து மக்கள் பணிபுரிந்தனர். சாதிகளை பெயருக்குப் பின்னாலே வைத்திருந்தார்களே தவிர, சாதி வெறியர்களாக அவர்கள் இல்லை. ஆனால் இன்றைய நாளில். . . .?

அவ்வாறிருக்க, மேற்கண்ட வினாக்களுக்கான விடைகளைத் தேடுகிறபோது உலகப் பொதுமறை தந்த வள்ளுவர் நமக்கு வழிகாட்டுகிறார்.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு( திருக்குறள் 190)
என்ற குறளின்வழி நம்மை நாமே சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாடார் சமூகத்திற்கான மெர்கண்டைல் வங்கியை மீட்கப் புறப்பட்டு, அதனை அரசியலாக்கியவர் சரத்குமார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கிடைக்க வேண்டி, வன்னியர் சங்கம் துவங்கி அதனை அரசியலாக்கியவர் மருத்துவர் இராமதாஸ்.. அவரது மகன்தானே அன்புமணி..

வன்னியர்கள் தங்களை பலப்படுத்திக் கொண்டுவிட்டனர்.. ஆதிதிராவிடர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பில்லை.. அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என களத்தில் இறங்கியவர்தானே திருமாவளவன். இந்திய தேசம் இந்துக்களுக்கே என்ற வாசகத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லும் அரசியலில் இருப்பவர்தானே தமிழச்சி தமிழிசை..

இங்குள்ள தமிழர்கள், ஈழத் தமிழ் அகதிகள் நிலையே கவலைக்கிடமாக இருக்கிற நிலையில் ஈழத் தமிழர்களைக் குறித்து பேசுவதால் என்ன பயன்..? அமைதியும், அகிம்சையும் போதித்த மண்ணில்.. ஈழத் தமிழர்களா? இராஜீவ் காந்தி கொலையா என எடைபோடுகிறபோதும்,.. 51 விழுக்காடு.. இராஜீவ் கொலைக்குக் காரணமானவர்களை ஆதரிக்கும் சீமானை எதிர்க்கத்தானே செய்வார்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பார்வார்டு பிளாக் கட்சியை நடத்தினார் என்பதற்காகவே தேவராகிய நானும் அந்தக் கட்சியைத் தாங்கிப் பிடிப்பேன் என்ற ஒற்றை நிலைப்பாட்டோடு செயல்படும் கார்த்திக்கு மக்கள் ஆதரவு எங்ஙனம் கிட்டும்?

தாழ்த்தப்பட்ட இனத்தின் தலைவன் என்ற நிலையில், கூட்டணியோடு வந்தாலும் தோற்கடிக்கப்படுவது உறுதி.. தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் நான் என மற்ற சாதிகளை அவமதித்து தான் சார்ந்த சாதிப்பலத்தை மட்டுமே நம்பி நின்றாலும் தோற்பது உறுதி.. இது முறையே காட்டுமன்னார் குடியிலும், பென்னாகரத்திலும் அனைத்து சாதிகளைச் சார்ந்தோர், மேற்குறித்தவர்கள் சார்ந்த சாதியைக் கொண்ட, ஆனால் சாதி சாராத பொதுத் தளத்தில் இயங்கும் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்ததை உணர வேண்டும். முந்தைய தேர்தல்களில் வென்றோமே என வினா எழுப்பினால், இன்னொரு கட்சியின் தோளில் ஏறிக் கொண்டு வெற்றி பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும்.

சாதிகளின் பெயரால், மதங்களின் பெயரால் அரசியலை முன்னெடுக்கும்போது மாற்று சாதிகளை, மதங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கான பாதுகாப்பைத் தேடி எங்கு செல்வர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சமூகப்பணிக்கு, பொதுப்பணிக்கு, சமுதாய நலம்சார்ந்த அனைத்துக் கூறுகளுக்கும் என களம் இறங்குகிற நிலையில், எளிமையும் நேர்மையும் அவசியம் என்பதை உணர வேண்டும்.

ஊழலையும், இலஞ்சத்தையும் ஒழிக்கப் புறப்பட்ட நிலையில், தங்களின் கட்சியை நடத்த ஊழல் பணத்தையும், இலஞ்சத் தொகையையும் அன்பளிப்பாகப் பெறுவது எந்த வகையில் நீதி?

மாற்று அரசியலாக நாங்கள் முன்நிற்கிறோம் என்ற நிலையில், முந்தைய அரசியல் கட்சிகளைப் போலவே, சாலைமறித்து மேடை அமைப்பதும், பொதுமக்களின் பாதைக்கு இடையூறு விளைவிப்பதும், பொது மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் திருடி, கூட்டங்கள், மாநாடுகள், மின்விளக்கு அலங்காரங்கள் அமைப்பது, விதிகளை மீறுவது என்பன எந்த வகையில் நியாயம்?

குடும்ப அரசியலை ஒழிக்கப் போகிறேன் என்ற எண்ணத்தில் குடும்பதோடு வருவது சரிதான்.. ஆனால், குடும்பத்திலுள்ளவர்களுக்கும் கட்சிகளில் பொறுப்பு என்ற நிலைப்பாட்டோடு வருவது எந்த வகையில் நேர்மையாகும்?

ஆளுயர உருவப்படங்கள், கண்கவர் வண்ணப்பதாகைகள், ஒளிரும் விளக்குகள், கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆள்சேர்ப்பது போன்ற அவலமும் தொடர்வது எந்தவகையில் எளிமையாகும்?

நில ஆக்கிரமிப்பாளர்களையும், கந்துவட்டிக்காரர்களையும், கட்டபஞ்சாயத்து செய்பவர்களையும், அடிதடி நடத்தும் அநியாயக்காரர்களையும் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட வைப்பது நீங்கள் மற்ற கட்சிகளிலிருந்து எந்த வகையில் மாறுபடுகிறேன் என்று மார்தட்ட முடியும்?

கூட்டணியில் இருக்கும்போது எடுக்கப்படும் நிலைப்பாடும், கூட்டணியிலிருந்து விலகும் போது எடுக்கப்படும நிலைப்பாடும், மீண்டும் தேர்தல் வந்தால் கூட்டணி அமைப்பதும், தேர்தல் முடிந்த நிலையில் பிரச்சனைகளை மறப்பதும், எதையும் காதில் போட்டுக் கொள்ளாத அவலமும் எந்த வகையில் அடங்கும்?

மேலும், நல்லியல்புகளோடும், நற்பண்புகளோடும் திகழ்ந்த தமிழன்,
உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியரும் உண்டலுமிலரே முனிவிலர்
துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மையானே (புறநானூறு 182)
( தமெக்கென முயலாது பிறர்க்கென முயலும் பெரியோர் உளராதலால் இவ்வுலகம் உளது. இன்றேல், இது மண்புக்கு மாயும் என்ற கருத்தால் - தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; இந்திரர் அமிழ்தம் கிடைப்பதாயினும் அதனைத் தனித்திருந்து உண்ணார். யாரையும் வெறார். பிறர் அஞ்சுவ தஞ்சுவர். அஞ்சி அதனைத் தீர்த்தற்கண் சோம்பார். புகழ் பொருட்டுத் தம் உயிரையும் ஈவர். பழியால் உலக முழுதாளும் உயர்வு வரினும் வேண்டார். மனக் கவலையும் கொள்ளார். இவ்வியல்பினோடு பிறர் நலம் பேணும் பெரியோர் உளர். அவரால் இவ்வுலகம் உளதாகின்றது ) என்பன போன்ற உலகு போற்றும் உயர் கொள்கைகளோடு வாழ்ந்தவன் தமிழன் என கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கூறும் சங்ககாலத் தமிழனின் நிலைப்பாடு, வாழ்வு இன்றுள்ள மேற்சொன்ன தமிழர் தலைவர்களிடத்தில் உள்ளதா?

5 முறை முதல்வராக இருந்த பல்வேறு நீதி நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய பெரியவர் கருணாநிதியிடமும் இல்லை; 6-வது முறை முதல்வராக பதவியேற்றிருக்கிற அம்மையார் ஜெயலலிதாவிடமும் இல்லை என்பது வேறு கதை.. அப்படி இருந்திருந்தால், இவர்கள் தொடர்ந்து முதல்வராக அல்லவா இருந்திருக்க வேண்டும்?

தமிழையும், தமிழினத்தையும் உயர்த்திப் பிடிக்கிற நிலையிலுள்ள மாற்று மொழியாளர்கள் எனக்கருதுகிற, கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த் பின்னணியில் எத்தனையோ தமிழர்கள் அணிவகுத்து நிற்கின்றனரே. . எதனால்?

ஒரு நாட்டை ஆள வந்தநிலையில், மக்கள் சேவைக்கு இறங்கிய நிலையில், பொதுப்பணிக்கு புறப்பட்ட சூழலில், தமிழன்தான் தமிழகத்தின் முதல்வராக ஆசைப்பட வேண்டுமென்பதில்லை.. உலகின் மூத்தமொழியாம் தமிழ்மொழியின் பிள்ளைகளான, தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும், மராத்தியும், குஜராத்தியும், சௌராஷ்டிரமும், பேசும் சாதி வெறி அல்லாமல், மொழிபேதம் பாராமல், நேர்மையும், எளிமையும், சமூகச் சிந்தனையும், மக்கள் நலனும் கருதுகிற எவரும் தமிழகத்தின் முதல்வராக வருவதில் என்ன தவறு இருக்கிறது?

தீயணைப்பு வீரர்கள் வந்து அணைக்கட்டும் என எரிகிற வீட்டுக்காரன் நினைப்பானா? வீட்டுக்குள் சாக்கடை வந்துவிட்டது.. கழிவுநீரகற்று வாரியப் பணியாளர்கள் வரட்டும் எனக் காத்திருப்பார்களா?..

உலகமயமாதலும், தாராளமயமாதலும், தனியார்மயமாதலும் என பூமிப்பந்து விரிவடைந்த நிலையில், முதல்வராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிற தமிழர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்.. பிறகு முதல்வர் பதவிக்கு ஆசைபடட்டும்..
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா; (புறநானூறு - 192)
என்ற உயர்தகுச் சிந்தனையோடும்,
"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"" (திருக்குறள் 656)
என்னும் நேர்மை நெறியோடும் நின்றால்.. ( இவை இரண்டும் தமிழர்கள் உலகுக்குச் சொன்னது ) தமிழன் முதல்வனாக முன்னிறுத்தப்படுவான்.. மக்களும் தேர்ந்தெடுக்க வெட்கப்பட மாட்டார்கள். சாதிச்சாயம் பூச மாட்டார்கள். பொதுமக்களின் பேராதரவோடு வாகைசூடி வலம் வரலாம்.. மக்களும் நலம் பெறுவார்கள்.
-----

ச.பொன்முத்து, சுவாமி என்கிளேவ், 15-டி. பாரதி சாலை, பெரம்பூர், சென்னை-600011 9444710223 தமிழ்நாடு, இந்தியா

எழுதியவர் : ச.பொன்முத்து, சுவாமி என்கி (7-Jun-16, 7:27 pm)
சேர்த்தது : ச. பொன்முத்து
பார்வை : 200

மேலே