முது கவிஞனின் அருமை - மறு பதிவு
அதோ தெரிகிறது நீலவானம்,
உங்கள் பசுமையான எண்ணங்களின்
தகவறிந்து உங்கள் அறைசன்னல்
கதவுகளைத் திறந்து வைத்து இருக்கிறேன்!
எதிரே பூத்துக் குலுங்கும் மரங்கள்,
சலசலத்து ஓடும் தெளிந்த நீரோடை,
சன்னலை ஒட்டி நீங்கள் எழுதும் மேசை,
நீங்கள் அமரும் நாற்காலி காத்திருக்கிறது!
பளிச்சென்ற மேசை விரிப்புடன்
மேசையில் கணினி காத்திருக்கிறது,
குறிப்புகளைக் குறித்துக் கொள்ளவும்
அருகிலேயே சிற்சில காகிதங்கள்! பென்சில்!
சுவற்றில் வண்ண வண்ண ஓவியங்கள்,
அடுக்குகளில் நீங்கள் வா(ர)சிக்கும்
எண்ணற்ற புதுமைப் புத்தகங்கள்,
கவிதை வடிக்க ரம்மியமான சூழல்!
உங்கள் கற்பனைகள் என்றென்றும்
வானத்திலேறி சந்திர மண்டலம்
சென்று வரட்டும்; எழில்மிகு
புத்தம்புது கவிதைகளைத் தாருங்கள்!
இளைப்பாறும் நேரங்களில் உங்கள்
களைப்பைப் போக்கிப் புத்துணர்ச்சி பெற
பக்கத்திலேயே நொறுக்குத் தீனியும்
கோப்பையில் தேனீரும் உண்டு!
முது கவிஞனின் அருமை அறிந்த
வாழ்க்கைத் துணைவி நான் – நீங்கள்
வேண்டுவதைக் குறிப்பறிந்து செய்வேன்
வேறு ஒன்று நான் அறியேன்!