காணமல் போன பொன் வளையல்கள்

மாலை நேரம்.

கிருத்திகா தன் படுக்கையறையில் டீ.வீ. ஸ்டான்ட் மீது பல பொருள்கள் வைத்திருப்பதைக் கண்டு, அனாவசியமான பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பிளாஸ்டிக் பைக்குள்ளும், அவசியமான பொருள்களை எடுத்து கட்டில் அருகில் இருக்கும் திறந்த அலமாரியில் வைத்துக்கொண்டிருந்தாள்.

காதைக் குடைந்த ஜான்சன்ஸ் காட்டன் பட்டைக் கண்டதும், எதைஎதை டீ.வீ. மீது வைப்பது என்ற விவஸ்தைகூட தன் கணவனுக்கு இல்லையே என்று மனம் நொந்துகொண்டாள். சிலசமயம் கிருத்திகாவின் கணவன் அதை கீழே வீசி எறிந்துவிடுவதுமுண்டு. தவழ்ந்து செல்லக் கற்றுக் கொண்ட அவளுடைய இரண்டாவது மகன் மகேஷ் கண்ணில் கண்டுவிட்டால் போதும். எடுத்து வாயில் வைத்துக்கொள்ளும் பருவம் அவனது.

கிருத்திகாவுக்கு தன் கணவன் மீது சிறிது கோபம் வந்தது.

அவள் கணவன் நாதன் கழற்றி போட்டிருந்த ஜீன்ஸ், சட்டையையும், குளித்து விட்டு ஈரமான டவலையும் உறங்கும் சிறுபிள்ளைக் கட்டில் மீதிருந்து எடுத்துச்சென்று வாஷிங் மெஷின் அருகில் வைத்துவிட்டு, டீ.வீ. மீதிருந்த தூசியைத் துடைத்துக் கொண்டிருக்கும் நேரம், அவள் சிலநாள் முன் டீ.வீ. மீது தன் தங்க வளையல்கள் இரண்டைக் கழட்டி வைத்திருந்தது நினைவு வரவும்,

"அம்மா .. அம்மா" என்று குரல்கொடுத்தாள். சமையல் அறையில் மும்முரமாக வேளையில் ஈடுபட்டிருந்த கிருத்திகாவின் தாய் சிவகாமியின் செவிகளில் அவள் குரல் கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் கிருத்திகா குரல் கொடுத்த அதேநேரம் கேசடுப்பில் வைத்திருந்த குக்கர் தொடர்ந்து விசில் கொடுத்தது. கிருத்திகா மீண்டும் "அம்மா .. அம்மா" என்று கூப்பிட்டாள். இம்முறை அவள் தாய் அவள் குரல் கேட்டு, "நீ டீ வேனும்ம்னு கேட்டியே .. அதைத்தான் போட்டுண்டு இருக்கிறேன். இதோ கொண்டுவரேன்னு சம்பந்தமில்லாத சங்கதியை சொல்லவும், "டீ அப்பறம் பாத்துக்கலாம். இங்கே நான் ரெண்டு வளையல்களை வைத்திருந்தேனே. அதை எடுத்து பீரோவில் வைத்துவிட்டீர்களா?" என்று கேட்கவும், டீயுடன் அறைக்குள் நுழைந்தாள். "வளையலா .. அன்னிக்கு ஒருநாள் நான் பார்த்த நினைவு இருக்கு. ஆனா நேத்திக்கு அதை டீ.வீ. மேல பாத்ததா ஞாபகம் இல்லை. ஒருவேளை, நீ அதை அலமாரில எடுத்து வெச்சுட்டாயோ ன்னு நினைத்தேன்" என்று பதில் கூறும் முன், "நான் எடுத்து வைக்கல்லைம்மா" என்று கூறியபடியே அலமாரியைத் திறந்து, அவள் நகைகள் வைத்திருக்கும் டிராயரைத் திறந்து வளையல்கள் வைத்திருக்கும் பெட்டியைத் திறந்தாள். நான்கு வளையல்களில் இரண்டு மட்டுமே அதில் இருந்தன. இதுல ரெண்டுதான் இருக்கு. ரெண்டு வளையல்கள் காணோம்" என்றாள் அவள். "காணோமா .. நல்லா பாரு". வேறு ஏதாவது டப்பாக்குள்ள போட்டிருக்கலாம். எல்லா டப்பாவையும் திறந்து பாரு" என்று சொல்லி சிவகாமியும் கிருத்திகாவும் சேர்ந்து ஒவ்வொரு டப்பாவாகத் திறந்து பார்த்தார்கள். எதிலும் அந்த வளையல்கள் இருக்கவில்லை. "கடந்த என் பிறந்தநாளுக்கு பரிசாக நாதன் வாங்கி தந்தது. ஒவ்வொரு வளையலும் பதினஞ்சு கிராம் எடையுள்ளது. அவருக்குத் தெரிந்தால் போதும். என்னை கன்னாபின்னா ன்னு திட்டித் தீர்த்துவிடுவார். அய்யோ முருகா .. எங்கே வெச்சேன்னு தெரியல்லையே" ன்னு முனுமுனுத்தாவாறே, அடுக்கி வைத்திருந்த துணிகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து எதற்கடியிலாவது வளையல்கள் ஒளிந்திருக்குமோ என்று தேடும் படலம் தொடங்கியது. அவளுக்கு ஆத்திரம் சுனாமி அலைகள் போல எழுந்தது. அலமாரிகள் இரண்டும் தேடிவிட்டார்கள். வளையல்கள் தென்படவில்லை.

"ரெண்டு நாளுக்கு முந்தி கூட வளையல் இங்குதான் இருந்தது. எடுத்து உள்ளே வைக்கவேண்டுமென்று நினைத்தபொழுது மகேஷ் அழுதுகொண்டிருந்ததால் அவனுக்கு பாலூட்டச் சென்றுவிட்டேன். பிறகு அதை மறந்துவிட்டேன். நீ பாத்தேன்னு சொன்னியே. அப்பவே எடுத்து பீரோல வெச்சுருக்கலாமே" ன்னு அம்மாவைக் குறைகூறினாள்.

"ஆமாண்டி .. தப்பெல்லாம் நீங்க செய்யுங்கோ. எதையாவது காணும்னா என் மீது குற்றம் சுமத்துங்கோ" என்று சிவகாமி சிடுசிடுத்தாள்.

"உன்னை குற்றம் சொல்லல்லேம்மா. தப்பு என்னோடது தான்" என்று தாயை சமாதானம் செய்ய முயன்றாள் கிருத்திகா.

"நம்மைத் தவிர வேறு யாரும் இங்கு வருவதில்லை. யாராவது அதை எடுத்ததிருக்க முடியுமா" என்று கிருத்திகா கேட்கவும், "குழந்தையை தூக்கம் செய்ய கமலி நேற்று அரைமணி நேரத்திற்கு மேல் இங்கு வந்து அமர்ந்திருந்தாள். ரூம்ல ஏ.சி. போட்டிருந்ததால கதவை வேறு சாத்தி வெச்சிருந்தேன். ஒருவேளை வளையலை அவள் கண்டிருப்பாள். ஞாபகம் இருக்கா .. போனவாரம் அவள் பிள்ளைகளின் ஸ்கூல் செலவுக்கு பணம் வேணும்ன்னு இருபதாயிரம் ரூபாய் கடன் கேட்டிருந்தாள். மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆயிரம் ரூபாய் வீதம் கழித்துக் கொள்ளுங்களம்மா" ன்னு சொன்னாளே. அவ்வளவு பெரிய தொகை எல்லாம் தரமுடியாது .. கமலி ன்னு கூறி நீ அவளுக்கு மூவாயிரம் ரூபாய் கொடுத்தாய். யாரு கண்டா வளையலைக் கண்டதும் அவள் புத்தி இழந்து திருடிக் கூட இருக்கலாம்" என்றாள்.

வீட்டில் பணிபுரியும் வேலைக்காரி கமலியின் மீது சந்தேகம் எழுந்தது.

கமலி கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் அவர்கள் வீட்டில் பணிபுரிந்து வருகிறாள். அவளுக்கு சம்பளம் போக, தினமும் காலையில் டிஃபன், காஃபீ. மதியம் உணவு இவை தவிர, கூடுதலாக செய்யும் பணிகளுக்கு அவ்வப்போது எக்ஸ்ட்ரா பணமும் அவளுக்குக் கொடுப்பது வாடிக்கை.

மாலை சூரியன் மறைந்து, மெல்ல மெல்ல இருள் கவிழத் தொடங்கியது. ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்த கிருத்திகாவின் கணவன் நாதன் வீடு திரும்பினான்.

காலில் இருந்த காலணிகளை வாயிற்கதவருகில் கழற்றி வைத்துவிட்டு, கைபேசியில் யாருடனோ பேசியபடிக்கி உணவருந்தும் மேஜைமீதிருந்த பாட்டிலைக் கையில் எடுத்து, மூடியைத் திறந்து மடமடவென்று அரைபாட்டில் தண்ணீர் குடித்துவிட்டு, "செம சூடுரா வெளில" என்று கூறினான்.

சமையலறையில் இருந்த நாதனின் மாமியார் சிவகாமி, "டீ போடடுட்டுமா குடிக்க" என்ற கேட்டதிற்கு, "டீ வேண்டாம். பசிக்குது. தோசை சுட்டுக்கொடுங்க" என்றான். சிவகாமி கேசடுப்பில் தோசை சுடுவதற்கு வைத்திருந்த கல்லில் மாவை ஊற்றியதும், சுர்ர்ர்ரென்ற சத்தம் கேட்டது.

நாதன் படுக்கையறைக்குள் சென்றான். அறை அலங்கோலமாக இருப்பதையும் துணிமணிகள் அங்கும் இங்கும் சிதறிக் கிடப்பதையும் கண்டு, மனைவி எதையோ தேடுகிறாள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

கிரிப்பில் இருந்த மகேஷ் எழுந்து நின்றுகொண்டு, தன் பிஞ்சுக் கரங்களை நீட்டி அப்பாவைப் பார்த்து, "ப்பா ..ப்பா" என்று சொன்னதை நாதன் கண்டுகொள்ளவில்லை.

அந்நேரம், தட்டில் இரண்டு தோசைகளை கொண்டு உணவருந்தும் மேஜை மீது வைத்து விட்டு, மிளகாய்ப்பொடி இட்டு அதற்கு எண்ணையை ஊற்றி, "தோசை சாப்பிட வாங்கோ" என்றாள்சிவகாமி. நாதன் தோசை உண்பதற்கு இருக்கையில் அமர்ந்துகொண்டே, தயிர் வேண்டும் என்றான். சிவகாமி காலையில் உறைய வைத்திருந்த தயிர் கொண்டுவந்து மேஜையில் வைத்தாள். எந்த வகை உணவாயினும் சரி, தயிர் இல்லாமல் அவனுக்கு வயிற்றுக்குள் இறங்காது.

கிருத்திகாவிற்கு மாலையில் கொடுத்த டீயை அவள் குடித்திருக்கவில்லை. அது ஆறிக்குளிர்ந்து அவலாய்ப் போயிருந்ததால், டீவைத்திருந்த கப்பை தாயிடம் நீட்டி, "அம்மா கொஞ்சம் சூடாக்கி கொடம்மா" என்றாள்.

டீ ரொம்பவே ஆறிப்போச்சு. புதுசா போட்டுத்தரேன் என்று சொல்லி டீக்கப்பை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டு மீண்டும் சமயலைறைக்குள் பிரவேசித்தாள்.

நாதனின் எதிர்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்ட கிருத்திகா, "டீ.வீ. மேல என் வளையல்களை நீ பார்த்தாயா" என்று கேட்டாள். வாயிலிட்ட தோசையை விழுங்கியவாறே, "இல்லையே .. ஏன்" என்றான். "மகேஷின் பிறந்தநாளன்று நண்பர்களுக்கு ஹோட்டலில் விருந்து கொடுத்துவிட்டு வீடு திரும்பி வந்தபோது என் கைவளையல்கள் இரண்டையும் டீவீ மீது வைத்திருந்தேன். இரண்டு நாட்கள் முன்கூட அவைகள் அங்கு தான் இருந்தன. இன்று காண்பதற்கில்லை" என்று மிகுந்த கவலையுடன் ஈனஸ்வரத்தில் மொழிந்தாள்.

நாதனும் பொருளை ஓரிடத்தில் வைத்துவிட்டு, வீடு முழுக்கத் தேடும் குணமுடையவன். தன் பொருள்களை எங்கு வைத்தோமென்று கூட நினைவிருக்காது. அவனிடம் போய் வளையல்களைப் பார்த்தாயா என்று கிருத்திகா கேட்டது தவறுதான்.

"எந்த வளையல்கள்" என்று நாதன் கேட்கவும், "போன வருடம் என் பிறந்த நாளுக்கு ஜி.ஆர்.டி.யில் இருந்து வாங்கித் தந்தாயே நான்கு வளையல்கள்" என்றாள்.

"நான்குமா காணாவில்லை" என்று நாதன் திரும்பிக்கேட்கவும், "நாலில் இரண்டு வளையல்கள் மட்டுமே அன்று அணிந்திருந்தேன். அந்த இரண்டு வளையல்களைத் தான் காணாவில்லை" என்றாள்.

"எப்படி காணாமல் போயிருக்க முடியும் ? யாராவது எடுத்திருப்பார்கள் என்று சந்தேக்கப் படுகிறாயா"? என்றதற்கு "வேறு யாரு எடுத்திருக்கமுடியும் .. கமலி மீது தான் சந்தேகம்" என்று கூறி அவள் இருபதாயிரம் ரூபாய் கடன் கேட்டதும், அவளுக்கு கடனாக மூவாயிரம் ரூபாய் கொடுத்த கதையெல்லாம் அவனுக்கு ஏற்கனவே தெரிந்த்திருந்தாலும், மீண்டும் அதையெல்லாம் நினைவுபடுத்தி, பிள்ளைகளின் ஸ்கூல் பீஃஸ், யூனிபாஃம், புத்தகங்கள் எல்லாம் வாங்குவதற்கு பணம் தேவை என்பதால் கமலி களவாடியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். நாளைக்கு வேலைக்கு அவள் வரட்டும். நேரில் கேட்டுவிட்டுகிறேன்" என்றாள்.

நடந்தவற்றை எல்லாம் அருகிலிருந்த அறையிலிருந்தவாறே கேட்ட, கிருத்திகாவின் தந்தை மாசிலாமணி உணவருந்தும் மேஜை அருகில் வந்து, மனைவியைப் பார்த்து "எனக்கும் கொஞ்சம் டீ தா" என்று சொல்லிவிட்டு, மகளைப்பார்த்து, "நீ கேட்டா கமலி, "ஆமாம்மா .. வளையலை நான் தான் திருடினேன்" என்று சொல்லுவாளா" என வினவினார்.

உடனே நாதன், "திருடுபவர்கள் ஒருநாளும் அவ்வாறு கூறுவதில்லை. இருப்பினும், அவளுடைய பாடி லாங்குவேஜில இருந்து அவள் திருடியிருப்பாளா மாட்டாளா என்பதை ஒருவாறு யூகித்துக் கொள்ளமுடியும்" என்றான். அவள் நான் எடுக்கவில்லையென்று கூறிவிட்டால், அப்படியே விட்டுவிடுங்கள் .. போனால் போகட்டும்" என்றான் நாதன்.

கமலியின் குணத்தைப் பற்றி பல கருத்துக்கள் பரிமாறிக்கொண்டார்கள் அவர்கள் நால்வரும். இறுதியில், கமலியிடம் நேரில் கேட்டுவிடுவது என்று தீர்மாணிக்கப்பட்டது.

மறுநாள்.

பதிவுபோல் ஒன்பதரை மணியளவில் கமலி வந்தாள். வீட்டு வேலைகள் எல்லாம் ஒன்றின்பின் ஒன்றாக செய்தாள். மதிய உணவு அருந்தியபின் அவளுக்கும் உணவு வழங்கப்பட்டது. அவள் சமயலறையில் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்த பொழுது, கிருத்திகா அங்கு வந்து அவளிடம், என் இரண்டு பொன் வளையல்கள் காணாமல் போயிருக்கின்றன. டீவீ மீது வைத்திருந்தேன். வீட்டை பெருக்கி மொழுகும் போது அவை எங்காவாது தென்பட்டனவா" என்று கேட்டாள்.

"நான் பார்க்கவில்லையெம்மா" என்று சொல்லும்பொழுது வாயிலிருந்து அன்னப்பருக்கைகள் ஒருசில அவள் உணவுத்தட்டில் தெறித்து வீழ்ந்தன. அவள் குரலில் எந்தவிதப் பதட்டமும் இருபதாக கிருத்திகா உணரமுடியவில்லை.

"டீவீ மேல, பின்னால எல்லாம் நேத்திக்கித் தான் தூசி துடச்சே ம்மா" . அங்கும் என் கண்ணுக்குத் தென்படல்லம்மா" என்று சொல்லிக்கொண்டே கைவிரல்களில் ஒட்டியிருந்த சோற்றை தன் பெருவிரலால் துடைத்துவிட்டாள்.

"இரண்டு நாள் முன்கூட என் இரண்டு பொன் வளையல்கள் டீவீ மீது இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இன்று அதைக் காணவில்லை. இந்த வீட்டில் உன் ஒருத்தியைத் தவிர வெளிமனிதர்கள் வேறு எவரும் கடந்த இரண்டு நாட்களில் வரவில்லை. எனவே தான் உன்மீது ஒரு சந்தேகம். உன் மீது சந்தேகப்படுவது சரியா தவறா என்று தெரியவில்லை" என்றாள் கிருத்திகா.

"நான் ஏழைதாம்மா .. வீடுகளில் வேலை செய்து பிழைப்பது ஒன்றுதான் எனக்குத் தெரியும். என் புருஷன் மேல சத்தியமா சொல்லறேம்ம .. நான் எடுக்கல்லேம்மா" என்றாள்.

கிருத்திகா தன் மனதிற்குள், "புருஷன் மேல சத்தியம் செய்யறா. ஆறு மாசம் முன்னால அவள் சம்பாதித்துக் கொண்டுவந்த பணத்தைத் திருடி, குடித்துவிட்டு வீட்டில் வந்து கலாட்ட செய்தது, அவள் முகத்தில் ஓங்கிக் குத்தியதில் முகவீக்கம் குறைய பத்து நாளாச்சு. அவள் கணவன் மீது பொய் சத்தியம் செய்யப்போய் அவன் செத்தாலும் நல்லதுதான் என்று ஒருவேளை நினைத்திருப்பாளோ என்னவோ" என்று எண்ணிக்கொண்டாள்.

திருடியவர்கள் ஒருபொழுதும் திருட்டை ஒத்துக்கொள்வதில்லை. போலீஸு, கேசு, கோர்ட்டு என்றெல்லாம் செல்வதால் காணாமல் போன வளையல்கள் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. கால விரையம் தான் கண்கூடாகக் காணமுடியும் என்றெண்ணிவாறே, "சரி .. நீ சாப்பிடு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் கிருத்திகா.

எஞ்சியிருந்த உணவில் ஓரிரு கவளங்கள் உண்டபின், தட்டைக் கழுவைத்துவிட்டு சமையலறையிலிருந்து வெளிவரும் நேரம் கிருத்திகா அவளிடம் சென்று "நாளை முதல் நீ வேலைக்கு வரவேண்டாம்" என்றுவிட்டாள்.

அதற்கு பதிலேதும் கூறாமல் கமலி, சமையலறையின் பின்புறமுள்ள இடத்தில் சேகரித்து வைத்திருந்த குப்பைப் பைகளை கைகளில் எடுத்துக்கொண்டு, கிருத்திகாவிடம், "கதவை சாத்திக்கொள்ளுங்கள்ம்மா" என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

வீட்டிற்கு வெளியிலிருந்த குப்பைத்தொட்டியில் குப்பைகளைப் போட்டுவிட்டு, பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். அவள் மனம் எண்ணியது. ஒரு வளையல் தானே எடுத்தேன். ஆனால் இரண்டு வளையல்கள் காணோம் என்கிறாளே அந்த அம்மா. அப்போ இன்னொருவளையல் எங்கபோச்சு. ஒன்றை இரண்டாக்கி சொல்லும் இந்தப் பணம் படைத்தவர்கள் எல்லாம் பேராசைக்காரர்களே" என்று பணம்படைத்தவர்களைப் பற்றி அவள் கருத்தை மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

கமலி களவாடியது ஒருவளையல் தான் என்றாலும், காணாமல் போனது இரண்டு பொன் வளையல்கள் தான். மற்றொருவளையல் என்னாயிற்று என்று உங்களுக்கும் கேட்கத் தோன்றுகிறதல்லவா ? நியாயம் தான்.

மற்றொருவளையல் டீவீயின் அதிர்வலைகளில் சிக்கி வழுக்கி அதன் பின்பாகக் கவரோடு கவராக ஒட்டியிருக்கிறது. இன்னும் ஆறுமாதம் சென்றுவிட்டால் கிருத்திகாவின் குடும்பம் புதிதாக கட்டிவரும் பெரிய இல்லத்திற்கு சென்றுவிடுவார்கள். அப்பொழுது அந்தப் பொன்வளையல் அவளுக்குக் கிடைக்குமா அல்லது பேக்கேர்ஸ் அண்ட் மூவர்ஸ் ஊழியர் கைகளில் சிக்குமா என்று இப்பொழுது சொல்லமுடியாது. .

= முற்றும் =

எழுதியவர் : (15-Jun-16, 5:32 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 279

மேலே