அந்தீ
அந்(தி)த முகம் -
--------------------;----;
-திருமூர்த்தி
பொன்னந்தி பழுத்து
மஞ்சள் சிந்துகிறது...
மல்லிகை குலுங்கும்
தென்றலில் மிதந்து
வருகிறாள்...
வெறுமை குழைத்து
முகத்தில் தடவி
கடக்கிறேன் அவளை...
அந்த ஓடையில்
யாரோ பாடியவண்ணம்
இருக்கிறார்கள்...
சட்டென நின்று
மூழ்கிவிடுகிறேன்
அதன் தாளகதியில்...
நானும் அந்தக் கூழாங்கற்களை
எடுத்து வாயில் போட்டுக்கொண்டு
நீரள்ளிப் பருகி பாடுகின்றேன்...
நழுவும் சுருதியில்
அஸ்தமிக்கிறது தூரத்து
வீட்டுச் சாளரத்தில்
நுழையும் அந்தி...
இருள் மலரும்
அந்த மருள்மாலையில்
அவள்மட்டும் அந்தியாகவே
தெரிகிறாள் மீண்டும்
அவள்முகத்தை நினைவின்
தாழ்வாரத்தில் இருந்து
தூசிதட்டிப் பார்க்கும்போது..
-திரு