கவிதைச் சாரல்

மழை முகில் தோகையில்
வண்ண வண்ண இதழ்கள்
வாசம் செய்திட...
மன்னவன் உடை வாள்கள்
பிறை மதியில்
எதிரெதிராய் பாய்ந்தோடுதே......


பிரிந்தே இருப்பினும்
சேர்ந்தே அது கொடுக்கும்...
வனத்தில்
துள்ளிடும் மான்களின் சொந்தமோ?...
நீரோடையில்
நீந்துகின்ற மீன்களின் இனமோ?...
தாமரை மடலினுள்
தக தகவென
தரளமிரண்டு ஒளிர்கின்றதே......


முந்திரி விதையோ?...
கிளியின் அலகோ?...
காற்றினைத் தன்னுள் கடத்த
இருபுறமும் விரிந்ததே
பறவையின் சிறகுகள்......


மின்னொளியாய்
மின்னுவது
நூலில் கோர்த்த
முத்து மணிகளோ?...
பாலில் ஊறவைத்த
பன்னீர் பூக்களோ?...
வரிசையில் வனப்பூட்டுதே......


இதனின்
காவலாய் இருப்பதோ?...
உதிரம் போல் சிவந்திருக்கும்
உதிராது மலர்ந்திருக்கும்
முட்செவ்வந்தியோ?...
இல்லை...
பார்த்ததும் பருகத் துடிக்கும்
காய்க்காமல் கனிந்தே இருக்கும்
கோவையோ?...
மதுரசம் ததும்புகின்றதே......


ஆழ்கடலில் மூழ்கி
அனலில் குளித்த
வெண் சங்கின் கீழ்
விளைந்திருப்பது...
முள் கொண்ட மாதுளங்கனியோ?...
இல்லை...
முல்லை நில பூங்கொடியின் மேல்
மூடி வைத்த மாங்கனியோ?...
மோகம்
வாசம் செய்கின்றதே......


ஆதியும் இல்லாது
அந்தமும் இல்லாது
அங்கு தெரிவதென்ன?...
நிலவின் நகலா?...
நிலவினது துகளா?...
தங்கம் பூசப்பட்டு மிளிர்கின்றதே......


பக்கம் இரண்டிலும்
பக்குவமாய் முளைத்து
உருக்கி எடுத்த
வெள்ளிக் கிரீடம் சுமந்து
நிற்கின்றதே...
குறுத்தோலையில் வாழைப் பூக்கள் ......


எப்படி இருக்குமோ?...
நீண்டத் தசைத் தண்டுகள்...
வைரம் கலந்த நிலைப் போன்றோ?...
துளிர் விடும் இலைப் போன்றோ?...
தெரியவில்லையே......


இள மயில் இறகோ?...
இலவம் வெடிதப் பஞ்சோ?...
பூமியின் நெஞ்சைத்
தொட்டுத் தொட்டுச் செல்கின்றதே......


செதுக்கப்பட்டச் சிற்பமாய்...
தீட்டப்பட்ட ஓவியமாய்...
சிந்தையில் நுழைந்து விந்தைகள் புரிந்து
நித்தமும் சித்தம் பித்தம் ஆனதே......

எழுதியவர் : இதயம் விஜய் (20-Jun-16, 7:03 am)
Tanglish : kavithaich saaral
பார்வை : 105

மேலே