திசை மாறிய பறவைகள்

பத்து மணி வரை
புரண்டு படுக்கும் கட்டில்...
நள்ளிரவு வந்தாலும் சாப்பிடாமல்
விழித்திருக்கும் அம்மா...
திட்டினாலும் பாக்கெட்டில் பணம்
வைத்து செல்லும் அப்பா...
எப்போதும் சீண்டியே
அடி வாங்கும் தங்கை...
நள்ளிரவு வரை நீளும்
அரட்டை கச்சேரிகள்...
ஊரையே திரும்பி பார்க்க
வைக்கும் பைக்...
மச்சான் நீ தான் என் உலகம்
எனும் நண்பன்....
...............
தீபாவளி பொங்கல்
ரம்ஜான் கிறிஸ்துமஸ்...
கோவில் திருவிழா
என எதுவுமில்லை ...!

நாங்கள் எல்லாம்
அன்னிய தேசத்தில்
அறியா முகங்களுடன்
புரியா மொழியில்
போராடிக்கொண்டிருக்கும்...
திசை மாறிய பறவைகள்...!

வாழ்வின் சந்தோஷங்களை இழந்து
அம்மாவின் ஆசை ...
அப்பாவின் கனவு ..
என் லட்சியம்...
என ஏதோ ஒரு உந்துதலால் ...
வெளிநாடு வந்த வேடந்தாங்கல் பறவைகள்....!

சமையலின் பெயரில்
கரண்டியின் சூடுகளும்....
எண்ணெய் கொப்பளங்களும்...
பருப்பு போட மறந்த சாம்பாருமாய்...
அப்பப்பா...
எத்தனை கஷ்டங்கள்..?

ஒவ்வொரு முறை
ஊருக்கு செல்லும் போதும்...
திரும்ப வரக்கூடாது
என தான் எண்ணுவோம்....

அக்காவின் சீமந்தம் ...
தங்கையின் திருமணம்...
தம்பியின் படிப்பு ...
வீடுகட்டும் ஆசை...
என ஏதேனும் காரணங்கள்
ஒவ்வொருவர் பின்னும்...
அடுத்த பயணத்தின்
விமான டிக்கெட்டை உறுதிபடுத்த...!

முன்னொரு காலத்தில்
என் காதலியாக இருந்தவள்...
ஒரு குழந்தைக்கு தாயான செய்தி
சற்று தாமதமாகவே
என் செவிகளில் சேர்கிறது ...!

ஒவ்வொரு கடமையாய்
நிறைவேற்றிக்கொண்டிருக்க...
ஏனோ...
முப்பது வயதை நெருங்குவதை
உணர முடியவில்லை...!

ஊருக்கு கிளம்ப
நினைக்கையில்
மறுக்கப்படும் விடுமுறைகள்...
என் மனக்குமுறலை
சற்றே தூண்டிவிடுகிறது...
களைபுற்ற நேரம் வரும்
அம்மாவின் அழைப்பில்
கொஞ்சம் இளைப்பாறுகிறேன்...!

எப்ப ஊருக்கு வருவ ?
எத்தனை நாள் லீவு ??
என கேட்கும் அம்மாவின் குரலில்
வரும் ஏக்கம்...
கண்கள் கசிய சொல்கிறேன்...

அடுத்த மாசம்..ம்மா
லீவு இல்லை ....
நிரந்திரமாக...!

நிம்மதியுடன் பயணிக்க
தொடங்கினேன்....
ஊருக்கு ...
"கனவில்"

( அன்னிய தேசத்தில் பணியாற்றும் சகோதரர்களுக்காக....)

- கீதா பரமன்

எழுதியவர் : Geetha paraman (21-Jun-16, 10:04 pm)
பார்வை : 685

மேலே