கல்லூரி என்றாலே காதலா

திரையில் கண்ட காட்சிளை எல்லாம் சாட்சியாய் வைத்து தன் வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றக்கூடிய இளைஞர்களும் உள்ளார்கள் என்பது தான் வருத்தம். இப்படி தவறான வழித்தடத்தில் தவறாமல் சென்று வாழ்வை வீணாக்கிய ஸ்ரீதர் எனும் இளைஞனின் வாழ்வியல் சித்திரம் தான் இது.
பசுமையான கிராமத்தில் வசித்து வருபவர்கள் தான் அன்பு மற்றும் லதா. அன்பு என்பவர் அவரது பெயரிற்கு ஏற்றவாறு அளவின்றி அன்பை காட்டுவார். அவருடைய மனைவி லதா தன் குடும்பத்தில் மிகுந்த அன்பை காட்டினாலும் சந்தேகம் என்பது அவள் மனதில் சிறிது படிந்திருந்தது. அவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு வருடமாகி விட்டது. ஆனாலும் குழந்தை இல்லாமல் இருந்தனர். பின் அவர்கள் மருத்துவரை ஆலோசித்ததன் பயனாக ஒரு ஆண் குழந்தை பெற்றனர். இந்த செய்தியை கேட்ட நேரம் தான் என்னவோ அன்பிற்கு நகரத்தில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அதை தன் மகன் பிறந்த நேரம் என்று சொல்லி பெரிமைப்படுவதும் உண்டு.
பின்பு இருவரும் தன் கைக்குழந்தையுடன் நகரத்தில் ஒரு அபார்ட்மெண்டில் குடியேறினர். தான் தவமிருந்து பெற்ற மகன் என்பதால் அவனுடைய பெயர் சூட்டும் விழாவை கூட ஆடம்பரமாக வைத்து செலவு செய்தான். இப்படி ஒவ்வொன்றையும் தன் மகனுக்கு என்றே செய்து வந்தான். பெயர் சூட்டும் விழாவில் தன் மகனுக்கு ஸ்ரீதர் என்ற பெயரிட்டனர். அப்போது ஐயர் மகனின் காதில் பெயரை மூன்று முறை சொல்ல சொன்னார்.
அன்பு தன் மகனின் காதில் ‘ஸ்ரீதர், ஸ்ரீதர், ஸ்ரீதர்’ என்று கூறினார்.
இவ்வாறு சென்ற வாழ்க்கையில் ஸ்ரீதர் பள்ளிக்கு செல்லும் வயது வந்தது. அன்பு தன் மகனை அங்குள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சேர்த்தார். அவர் தினமும் காலையில் பணிக்கு செல்லும் போது தன் மகனை பள்ளியில் விட்டு விட்டும் மாலையில் தன் வேலை முடிந்த்தும் பள்ளியில் இருந்து வீட்டிற்கு கூட்டி வருவதும் என வழக்கப்படுத்திக் கொண்டார். ஸ்ரீதரும் தன் பெற்றோர் தன் மீது வைத்திருக்கும் அன்பை உணர்ந்து நன்றாக படித்தும் அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும் வளர்ந்து வந்தான். ஸ்ரீதர் படிக்கும் பள்ளி இருபாலரும் படிக்கும் பள்ளி என்றாலும் ஆண்கள் தனி வகுப்பிலும் பெண்கள் தனி வகுப்பிலும் படித்து வந்தனர். பள்ளி இடைவேளை கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனி நேரங்களில் வைக்கப்பட்டிருந்தன. அந்த முறையோ என்னவோ ஸ்ரீதரின் மனதில் துளி கூட கள்ளம் இல்லாமல் வளர்ந்து வந்தான். தன் பெற்றொரின் அன்பே உலகம் என இருந்தான்.
ஒரு நாள் தன் வீட்டில் டிவி ஓடிக்கொண்டிருந்தது. அன்பு செய்தி சேனல் பார்த்துக்கொண்டு இருந்தார். தன் மகன் வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவன் வீட்டில் இருந்தாலே பாட்டு சேனல் தான் ஓடும். அதனால் அவன் உள்ளே நுழையும் போதே பாட்டு சேனலை போட்டுவிட்டார். அந்த நேரமோ நாடகம் ஓடக்கூடிய நேரம் என்பதால் தன் மனைவி லதா நாடகம் போடுமாறு கேட்டாள்.
அதற்கு, ‘நீ நாள் புல்லா வீட்டில தான இருக்க கொஞ்ச நேரம் என் மவன் டிவி பாக்கட்டும்’ என்றார்.
‘நாள் புல்லா வீட்டில இருந்தாலும் வீட்டு வேளை பண்றதுக்கும், உங்க பையன ரெடி பண்றதுக்குமே நேரம் சரியா இருக்கு’ என்றாள் லதா.
காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் ‘அவ அப்பிடி தான் நீ பாருடா செல்லம்’ என்றார் அன்பு.
ஸ்ரீதரும் பாட்டை கேட்டுக் கொண்டும் சத்தமாக பாடிக்கொண்டும் இருந்தான்
(காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
காத்தா செல்லுதே உந்தன் பின்னாலே......... என்றான்.)
அன்பும் தன் மகனின் ஆனந்த்ததை கண்டு சந்தோஷத்தில் புல்லரித்தான்.
இப்படி தன் மகன் மீது அன்பை அளவில்லாமல் வைத்து கொண்டிருந்தான். தன் மகனின் பிறந்தநாள் வந்தது. அன்பு ஸ்ரீதரின் நண்பர்களை அழைத்து தன் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்தான். தன் மகனும் அப்பா தன் மீது வைத்திருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் உடைக்காமல் படித்து வந்தான்.
அப்போது தான் ஸ்ரீதர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தருணம் வந்தது. பொற்றோரின் பெயரையும், அவர் தன் மீது கொண்ட நம்பிக்கையை காப்பதற்காகவும் அயராது படித்து தேர்வு எழுதினான். இறுதியாக தேர்வு முடிந்ததும் நண்பர்களுடன் மையடித்து விளையாடிவிட்டு சினிமாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினான். தேர்வு முடிவுகள் வெளிப்படும் தருணம் கம்பியூட்டர் சென்டரில் தன் தேர்வு எண்ணை கூறி நின்றான். அந்த சிறு கணம் அவனை தூக்கி போட்டது. தன் முடிவை கேட்டு அதிர்ந்து நின்றான். வந்த முடிவில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றான். சந்தோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தந்தையிடம் ஓடி தன் நிலையை கூறி நின்றான்.
‘உனக்காக நான் செய்த எதுவும் வீண்போகல டா செல்லம்’ என்று கூறி தன் மகனை அணைத்துக் கொண்டார்.
தன் வெற்றியை பாராட்டி பள்ளி ஸ்ரீதருக்கு பரிசுகளும் பாராட்டுகளையும் அளித்தது. அதை கண்ட மகிழ்ச்சியில் அன்பு மற்றும் லதா தன் மகனை அணைத்து முத்த மழையிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர். அதே பள்ளியில் தன் படிப்பை மேலும் தொடர பல சலுகைகளுடன் அவனுக்கு சீட்டு கிடைத்தது. தைக் கொண்டு அவன் பள்ளியில் பயாலஜி படித்து வந்தான். அங்கு அவன் மேலும் சாதிக்க சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. அதையெல்லாம் எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பில் நடைபெற்ற பொதுத் தேர்வில்மாவட்ட அளவில் முதலிடம் பெற்றான். அந்த ஆண்டு முடிவு அவனுக்கு கம்பியூட்டர் சென்டர் போகாமலேயே வீட்டிற்கு காலையில் வரும் செய்தித்தாளில் கண்டு பூரிப்படைந்தான். இவ்வாறு தன் பெற்றோருக்கு பெருமையையும் புகழையும் சேர்த்தவன் தன் மேல் படிப்பிற்காக கல்லூரியில் காலடி எடுத்து வைத்தான்.
தன் வீட்டிலிருந்து ஒரு மணி நேரம் பேருந்தில் பயணிக்கும் அளவிற்கு அதாவது 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் துறையில் சேர்ந்தான். அங்குள்ள ஆசிரியர்கள் அவனுக்கு பல உதவிகள் செய்தனர். அவனும் ஆசிரியர் அறிவுரை கேட்டு நடந்தான். அவன் வாழ்வை புரட்டி போட்ட தருணம் வந்தது. முதலாமாண்டு மாணவர்களுக்கு அவர்களுடைய சீனியர்கள் ‘வெல்கம் பார்ட்டி’ வைத்தனர். இதுவரை ஆண்களோடு படித்தவன் இன்று பெண்களோடு ஒரே வகுப்பில் ஒன்றாக படிப்பது அவனுக்கு புதிதாக இருந்தது. அந்த பார்ட்டியில் சீனியர் கூறிய அறிவுரையோ கல்லூரியில் ஆண்கள் பெண்கள் எனும் வேற்றுமையை உடையுங்கள் என்றதுதான்.
தன் வகுப்பு நண்ப்களோடு சினேகம் கொள்ள தொடங்கினான். தன் நண்பர்களோடு நேரத்தை ஒதுக்கத் தொடங்கிய ஸ்ரீதர் தன் பெற்றோரின் அன்பிலும் சந்தோஷத்திலும் இருந்து விலகி நிற்க தொடங்கினான். வீட்டில் தனிமையை மட்டுமே நாடினான். தன் நண்பர்களோ காதல் என்னும் வலையில் வழுந்து கிடந்தனர். அதனால் தன் நண்பர்களை பார்க்கும் போது அவனுக்கும் ஆசை வந்தது. அது மட்டுமல்லாமல் அவர்களும் ஸ்ரீதரை தூண்டி விட தொடங்கினர்.
‘மச்சா நீ யாரடா லவ் பண்ற’ என்று தன் நண்பன் ஒருவன் கேட்டான்.
அவனோ, ‘நா யாரையும் லவ் பண்ணல மாப்ள, அதெல்லாம் என்னோட அப்பா அம்மாக்கு பிடிக்காது’ என்றான்.
என்ன மச்சா படிக்குறது கெமிஸ்ட்ரி அதுவே உங்கிட்ட இல்லனா எப்பிடி டா’ என்று அவன் நண்பன் கேட்டான்.
இன்னொருவன் காதல் கவிதை எல்லாம் கூறி அவனை தூண்டி விட்டான்.
உடனே ‘மச்சி அங்க பாருடா அந்த பொண்ணு உன்னையே பாக்குதுடா என்றான்.
ஸ்ரீதரும் தன் ஆசையை அடக்க இயலாமல் காதல் கொள்ள தொடங்கினான்.
அவனை சுற்றி இருந்த நண்பர்கள் உடனே ‘மாப்ளே ட்ரீட் என்றனர்.
‘அட பாவிகளா இனி செலவு செஞ்சு ஓயாதே’ என்று புலம்பினான் ஸ்ரீதர்.
தன் தந்தையிடம் சென்று பணம் கேட்டான். தன் மகன் மீது நம்பிக்கை கொண்ட அன்பு ஏன் எதற்கு என கேட்காமல் பணம் கொடுத்தார். அதை அட்வாண்டேஜ் ஆக எடுத்துக் கொண்டு தன் தந்தையிடம் பொய் சொல்லி பணம் வாங்க தொடங்கினான். திரைப்படத்தில் பார்த்து எப்பொழுதும் காதல் மயக்கத்தில் கிடந்தான். அவனின் செயலைக் கண்டு லதா சந்தேகிக்க தொடங்கினாள்.
ஸ்ரீதரின் நண்பர்களோ ‘மச்சா நாளைக்கி பிப்ரவரி 14, டா போய் ப்ரப்போஸ் பண்ணுடா மாப்ள’ என்றான்.
அவனும் திரைப்படத்தில் கண்டவாறு கையில் கிரீட்டிங்ஸ் கார்டும், ரோஜாவையும் வைத்துக் கொண்டு தன் காதலை கூறினான்.
அந்த பெண்ணோ, உனக்கு எல்லாம் அறிவில்லயா, உங்க அப்பா அம்மா இதுக்காகவா உன்ன காலேஜ்-ல சேத்தி விட்டாங்க’ என திட்டினாள். ‘இனிமேல் என் கூட பேசிறாத’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
இதுவரை அன்பை மட்டுமே கண்டவன் காதல் என்னும் வலையில் விழுந்ததால் ஆறாத ரணத்தைப் பெற்றுக் கொண்டான். இரவு முழுவதும் கண்ணீரிலேயே என்ன செய்வதென்று தெரியாமல் எலி மருந்தைக் குடித்து உயிரை விட்டான். இரண்டு வருடம் குழந்தை இல்லாமல் தவமாய் தவமிருந்து பெற்ற தாய் தந்தையை பற்றி சிறிதும் யோசிக்காமல் தவறான வழியில் சென்று உயிரிழந்தான். திரைப்படத்தில் கண்ட காட்சிகளை வைத்து கல்லூரி என்றாலே காதல் என முடிவு செய்கின்றனர் இளைஞர்கள். ஆனால் உண்மையில் கல்லூரி என்பது உலகிற்கே உன்னை அறிமுகப்படுத்தும் புனித ஆலயம். இதை உணர்ந்தவன் உயர்கிறான், மறந்தவன் மறைகிறான்.

“நண்பர்களோடு கலந்திருங்கள்
ஆனால்,
கரைந்து விடாதீர்கள்
பெண்ணையும் பொன்னையும்
விரும்பாமல்,
உன்னை ஈன்றெடுத்த
மண்ணையும் அன்னையையும்
விரும்பு
வெற்றி என்றுமே உன்னை
விரும்பும்…….!!!”

*******

எழுதியவர் : கௌதம் (22-Jun-16, 6:57 pm)
சேர்த்தது : கௌதம் கு பி
பார்வை : 199

மேலே