புரட்சிக்கவியின் வழியினிலே --- ஒருவிகற்ப இன்னிசை வெண்பாக்கள்
பாரதியின் தாசனெனப் பார்போற்றும் பக்குவத்தில்
சீரதிகம் பெற்றோங்கிச் சிந்தை சிறக்கவே
பாரதனில் பெண்ணுரிமைப் பற்றியும் பாக்களை
ஊரதனில் கேட்கு முலகு .
பெண்ணுரிமை மீது பெருமையைச் சேர்க்கவே
எண்ணரியக் கொள்கையை ஏற்றமுடன் சொல்லியு
முண்ணுசுவைச் சொற்க ளுலகத்தை ஆண்டிடவும்
மண்ணுலகில் சொன்னார் மதித்து .
சஞ்சீவிப் பர்வதத்தின் சாரல் வழிநின்று
வஞ்சியற்கு நன்னெறிகள் வாய்நிறையப் பேசுத
லஞ்சாமல் பெண்டிரெல்லா மாடவற்கு நேர்நிற்க
விஞ்சுதிற லாவர் விதந்து .
வீரத்தாய்க் காப்பியத்தில் விந்தையினைச் செப்பிடுவான்
சூரத்தாய் வந்துச் சுவையாய்ச் சுதந்திரத்தைப்
பாரினிலும் பெற்றிடவும் பாவும் வனைந்திட்டான்
வீரனென சாதித்த வில் .
குடும்பத்தின் குத்து விளக்கெனப் பெண்ணை
நெடும்பாடல் நீளவும் நேயமுடன் சொல்வான்
தொடும்பணிகள் யாவினிலும் தூண்போல நிற்பாள்
மடுவதனில் தள்ளாதீர் மாண்பு .
கல்வியறி வில்லையெனில் காசினியை வென்றிடார்
புல்லொருகால் வந்திடலாம் புன்னகையும் மாற்றிடுவார்
கல்வியறி வுள்ளவராம் காப்பியத்தில் வீற்றிருப்பார்
நல்லறிவர் தோன்றல் நவின்று .
சமுதாயம் சீராக சாற்றும் கவிதை
சமுதாயம் வாட்டுகின்றச் சாதிப்பேய் நீங்க
அமுதான நற்பாக்க ளாக்கியும் வைத்தான்
நமதன்புக் காட்டிடுவோம் நன்று .
தன்பெண்டு தன்பிள்ளை தானே நினைத்திட்டச்
சின்னதொரு உள்ளத்தான் சீறியும் பாய்ந்திட்டான்
தன்னலமே இல்லாதத் தாயுள்ள முண்டிங்கு
நன்னலமே வேண்டுமென நாடு .
இவ்வகையாய்ப் பெண்கல்வி இச்சகத்தில் நின்றிடவே
எவ்வகையில் பார்த்தாலும் ஏதமின்றி ஏற்றிடவும்
தெவ்வோரை மாற்றிடும் தென்றலென சொல்லிய
செவ்வியதோர் பாவேந்தர் சென்று .