நாய்க்குட்டி

'சங்கர், இந்த நாய்க்குட்டிகளை எங்காவது கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திடுடா" என்றாள் அம்மா.

" ம்மா, நாமளே வளக்கலாம்மா ! அழகா இருக்கு" என்று கெஞ்சினான் சங்கர்.

வெள்ளையும் கருப்புமாக மூன்று நாய்க்குட்டிகள் பந்தாக சுருண்டுக் கிடந்தன. தாய் நாயை ஆளையே காணோம்!

"உங்கப் அப்பாவுக்கும், பாட்டிக்கும் நாய் பூனைன்னா அலர்ஜி, ப்ளீஸ் செல்லம் ! கொண்டு போய் இந்த தெருமுனையில் கோவில் மைதானம் இருக்கே ...அங்கப் போய் இதுகளை விட்டுடு...அங்கேதான் யாரும் வரமாட்டாங்க" என்ற மரகதத்தை நிமிர்ந்து பார்த்தான் சங்கர், நாய்க்குட்டிகளை அள்ளிச் சென்றான்.

சிறிதுநேரம் கழித.து வீடு வந்த சங்கரிடம் , " என்னப்பா நான் சொன்னது போல மைதானத்துலதானே விட்டே? என்றாள் மரகதம்.

' இல்லம்மா இரண்டு தெரு தள்ளி ஒரு டீக்கடையும், மட்டன் ஸ்டாலும் இருக்கற இடத்ல விட்டுட்டு வந்தேன். டீக்கடைக்கு வரவங்க இரக்கப்பட்டு டீயோ பன்னோ போடுவாங்க. மட்டன் ஸ்டால்லகிட்ட போடுற எலும்பும் நாய்க்குட்டிகளுக்குக் கிடைக்கும். அதனால்தான் " என்ற மகன் சங்கரை அணைத்து முத்தமிட்டாள் அம்மா.

எழுதியவர் : செல்வமணி (24-Jun-16, 8:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 225

மேலே