கர்மயோகம்
கர்மயோகம்.- உபயம் :- சத்சங்கம்.
வினைப்பயன் காரணமாக நரக லோகத்தில் கஷ்டப்படுபவர்களையும், துர்மரணம் ஏற்பட்டு முக்தி அடையாமல் அல்லாடுபவர்களையும் கடைத்தேற்ற பகவத் கீதையின் கர்ம யோகம் துணை புரியும். இந்தத் தகவலைச் சொல்லும் ஒரு கதை பத்ம புராணத்தில் உள்ளது. அந்தக் கதை இதுதான்
ஜடன் எனும் கௌசிக குலத்தைச் சேர்ந்த அந்தணன், ஜனஸ்தானம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். குல வழக்கத்துக்கு மாறாக வியாபாரத்தில் ஈடுபட்டு, பொன்னும் பொருளும் சேர்ப்பதில் குறியாக இருந்தான் ஜடன். நாளுக்கு நாள்...பணம் சேர்ந்ததுடன், தீயவர்களது சகவாசமும் ஏற்பட்டது. விளைவு... மது, மாது, சூது என மூழ்கினான் ஜடன்!
பிறகு, அவனது செல்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் துவங்கியது. ஒரு கட்டத்தில் அனைத்து செல்வத்தையும் இழந்தான். எனவே, மீண்டும் பொருள் ஈட்டுவதற்காக வடக்கே சென்றான். அங்கு சிரமப்பட்டு உழைத்தவன், நிறைய பணம் சம்பாதித்தான்.
சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்கிற ஆசை வர, பயணப்பட்டான். வழியில், இருட்டத் துவங்கியதால் மரத்தடி ஒன்றில் கண்ணயர்ந்தான்.
அப்போது அங்கு வந்த கொள்ளையர், அவனைக் கொன்று விட்டு அவனிடம் இருந்த பணத்தைத் கொள்ளையடித்துச் சென்றனர். அங்கேயே உடல் அழுகி, துர்நாற்றம் வீசியபடி, அநாதையாகக் கிடந்தது ஜடனின் பிரேதம்!
ஜடனுக்கு ஒரு மகன்! வேதம் மற்றும் தர்ம சாஸ்திரங்களைக் கற்றறிருந்தவன். வெகு நாளாகியும் தந்தை திரும்பி வராத நிலையில், அவரைத் தேடிச் சென்றான். வழியில்... தந்தைக்கு வேண்டிய ஒரு நபரைச் சந்தித்தான். அவர் மூலம், தந்தை இறந்த விவரம் அறிந்தான். துக்கித்து நின்றான்.
பின்னர், தந்தையின் ஈமச் சடங்குகளை காசியில் செய்வது என்று தீர்மானித்தான். தகுந்த ஏற்பாடு களுடன் காசிக்குப் புறப்பட்டான். வழியில் மரத்தடி ஒன்றில் தங்கினான். அது... அவன் தந்தை ஜடன் இறந்து கிடந்த அதே இடம்!
தனது நித்தியப்படி கடமைகளை முடித்ததும், கீதையில் உள்ள மூன்றாம் அத்தியாயமான கர்ம யோகத்தை வாசித்தான். துர்மரணத்தால், பேயுடல் கொண்டு அலைந்த ஜடனது செவிகளில், மகனின் கீதை பாராயண சத்தம் விழுந்தது. இதனால், அவனது பேயுடல் மறைந்து, திவ்ய சரீரமும், விமானமும் ஜடனுக்குக் கிடைத்தன.
இதனால் மகிழ்ந்த ஜடன் தன் மகனிடம், ''எனது ஈமச் சடங்குக்காக நீ காசிக்குச் செல்ல வேண்டாம்.கீதையின் மூன்றாம் அத்தியாயத்தை நீ வாசித்ததால், இங்கேயே எனக்கு நற்கதி கிடைத்து விட்டது. நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியம் உண்டு. பாவத்தின் காரணமாக நரகத்தில் வாடும் நம் மூதாதையர்களும் வைகுண்டம் அடைய வேண்டும். அவர்களுக்காகவும் கீதையின் 3-வது அத்தியாயத்தை பாராயணம் செய்!'' என்றான்.
பிறகு, விமானத்தில் ஏறி வைகுண்டத்தை அடைந்தான்.
அதன்படி, மூதாதையர்களுக்காக கீதையின் 3-ஆம் அத்தியாயமான கர்ம யோகத்தை பாராயணம் செய்தான் ஜடனின் மைந்தன். இதனால் கிடைக்கும் பயனை, பித்ருக்களுக்குத் தானம் செய்தான்.
இதன் விளைவாக எமதர்மனிடம் சென்ற விஷ்ணு தூதர், ஜடனின் பித்ருக்களை வைகுண்டம் அனுப்பும்படி உத்தரவிட்டார். அதன்படி ஜடனின் மூதாதையரும் வைகுண்டம் சென்றடைந்தனர்.