இது கிராமியக்காதல்

தன் தாயோடு வசித்துவரும் ஒரு விவசாய கிராமியக்காளை, அந்த கிராமத்திலுள்ள ஒரு பெண்ணை மனதார நேசிக்கிறான். அவளுக்கும் அந்தக் காளை மீது நேசம்தான். நெருங்கிப்பேச வாய்ப்பில்லாத அந்த கிராமத்து கட்டுப்பாடுகளின் பிடியில் இவர்களின் நேசம் வெறும் தூரப்பார்வைகளிலும், கண் பேச்சுகளிலிலும்தான் ஓடிக்கொண்டிருந்தது.

வழக்கம்போல் சந்தைக்கு செல்லும் அந்தப் பெண்ணின் தாய்க்கு, உடல் நிலை சரியில்லாததால் தன் மகளை சந்தைக்கு அனுப்புகிறாள். விட்டுவிட்டு மழை பெய்ந்துகொண்டிருக்கும் காலம் என்பதால் விரைவாக சந்தை சென்று திரும்பும் எண்ணத்தில், குறுக்குப்பாதையில் சந்தை செல்கிறாள் அந்த கிராமத்து மயில். எதேச்சையாக அதே குறுக்குப்பாதையில், தான் விளைவித்த துவரைகளை பருப்பாக்கி, அதை சாக்கு மூட்டையில் கட்டி, தன் கூட்டுவண்டியில் போட்டு, சந்தை செல்கிறான் அந்தக் காளை. இவர்கள் இருவரையும் இயற்கை அழகு நிறைந்த கிராமியத்துக் குறுக்குப்பாதை இணைக்க, மற்றவை இந்தப் பாட்டில்.


தொவரப்பருப்பு மூட்டை கட்டி, துடியலூரு சந்த போறேன்..
அவரப்பூ நெறத்தழகி, சேர்ந்துபோவோம் நீ வாரியா..?

சேத்துவயலக் கலக்கும்போது, அலைஅலையா உஞ்சிரிப்பு.
நாத்துவயலப் பாக்கும்போது, அத்தனையும் உன் நெனப்பு.

கறுக்கருவா கண்ண வெச்சு, காள மனசை சாய்ச்சிட்டயே..!
கறுத்தகாள மனசுக்குள்ள, இப்போ கரும்புச் சாறா இனிக்கறயே..!

மேக்கால மலையோரம், மேகமெல்லாம் தெரளுதடி.
தெக்கால வயலோரம், தவக்களையுங் கத்துதடி.

கூட்டுவண்டியில் எடமிருக்கு, குளுகுளுனு காத்தடிக்குது.
மாட்டுமணி சத்தமெல்லா, எம்மனச செதறடிக்குது.

எளநீர் மனசழகி, எதுக்கு இந்த எளஞ்சிரிப்பு.
பதநீர் குடிச்சதுபோல், இனிக்குமடி நீ வந்தா.

(வண்டிக்குள் வந்து சிறு சிரிப்போடு அமர்கிறது அந்த பெண்மயில்)

செழுமரமா எம்மனச, சும்மா ஜிவ்வுனுதா இழுக்கறேயே.
முழுநெலவா வண்டிக்குள்ள, வந்து நீயும் சிரிக்கிறயே...

அலையடிக்குது விசிலடிக்குது, ஆசையில எம்மனசு.
தலகுனியுது, தள்ளிப்போகுது, வெக்கத்துல உன் உசுரு.

செவளக்காள ரெண்டையும் நா, சீக்கிரமா வெரட்டட்டுமா..?
பவளத்துல பாசி வாங்கி, உங்கழுத்தில் மாட்டட்டுமா..?

மேட்டுப்பாதையுந் தாண்டியாச்சு, பதிலச்சொல்ல வாயில்லயா..?
கூட்டுப்பாதையும் வந்திடுச்சு, வேகமா நா வெரட்டட்டுமா..?

மெதுவாப் போகச்சொன்னா, முத்துப்பல்லு உதிந்திடுமா..?
பொதுவாப் பேசிவந்தா, பேயேதும் அடிச்சுடுமா..?

சந்த போற வழியெல்லா, சாமந்திப்பூ பூத்திருக்கு
சேந்து போற சொகமெல்லாம், சம்பங்கியா மணக்காதா..?

போறவழி ரண்டு பக்கம், ஓடையெல்லா நெறஞ்சிருக்கு.
காதவழி கடக்கலியே, உம்மொகம்பாத்து தாமரையா பூத்திருக்கு.

எல்லச்சாமி கோயில் தாண்டி, எறங்கி நாமும் நடப்போமா..?
முல்லப்பூ கொடி உன்ன, எந் தோள்சாய்ச்சு அணைச்சிக்கவா..?.

கட்டிப்புடுச்சு நடக்கலயே, எங் கைகூட சேரலயே...
காட்டுக் கத்தல் கத்தி நீயும், கலவரமா ஆக்குறயே.

புல்லட்டு பைக்கி சத்தம், உங்கப்பனேதான் மறஞ்சு நில்லு.
மல்லுக்கட்ட நேரம் இல்ல, புல்லுக்காட்டுல எறங்கி நில்லு.

கூட்டுவண்டிய எடுத்து வாரேன்.. உள்ள ஏறி உக்கி போட்டுக்க
கொட்டுமழ பேயுமுன்னே, சந்த போயி திரும்பிடலாம்.

நாலுமூட்டை தொவரையுமே, நல்ல வெலைக்கு வித்திடுவேன்.
நாலு காசு சம்பாரிச்சு, நாயமாத்தான் நடந்திடுவேன்.

தூண்டாத வெளக்கப் போல, வாழ்க்கையில வெளிச்சமில்ல.
வேண்டாத சாமியில்ல, நீ வெளக்கேத்தி எணஞ்சிருக்க.

ஒட்டி இருக்க நீ நெனச்சா, ஒலகமெல்லாம் நானாவேன்.
வெட்டி வுட்டு நீ போனா, ஒத்தையா நா கரைஞ்சிடுவேன்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (20-Jul-16, 6:41 pm)
பார்வை : 729

மேலே