கவிதை 104 கண்மூடி கிடைக்கையிலே

தென்றல் தழுவியதும் தாயின்கரம் உணர்கின்றேன்
கார்மேகம் திரண்டதும் வேகமாய் நடக்கின்றேன்
மழைத்துளி பட்டதும் கண்மூடி சிரிக்கின்றேன்
ஓடைநீர் தொட்டதும் மெய்மறந்து ரசிக்கின்றேன்

மண்மணம் எட்டியதும் சிலிர்த்து போகின்றேன்
மலர்மணம் நுகர்ந்ததும் கனவுலகில் திளைக்கின்றேன்
கனிச்சுவை ரசித்ததும் புன்னகையில் மிதக்கின்றேன்
இலைசருகு அசைந்ததும் வேகமாய் ஓடுகின்றேன்

குயில்ஓசை கேட்டதும் படைப்பினை வியக்கின்றேன்
வண்ணமயில் ஆடியதும் ஆனந்தம் அடைகின்றேன்
தாவும்முயல் பார்த்ததும் ரசித்து நிற்கின்றேன்
துள்ளும்மான் கண்டதும் பிடிக்க விழைகின்றேன்

விழிஅசைவு பார்த்ததும் என்னையே மறக்கின்றேன்
மழலைசொல் கேட்டதும் இறைவனை நினைக்கின்றேன்
சின்னஞ்சிறு நிகழ்வுகளில் பொழுதினை கழிக்கின்றேன்
கண்மூடி கிடைக்கையிலே எனக்குள் சிரிக்கின்றேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (20-Jul-16, 7:55 pm)
பார்வை : 73

மேலே