உயர்வு உன்கையில்

உழைத்து முன்னேற வேண்டுமடா தம்பி
உண்மையை மதித்திட வேண்டுமடா
உன்மேல் நம்பிக்கை வைத்திடடா தம்பி
உள்ளது இரண்டு கைகளடா

கொடுக்கின்ற மனிதர் கோடியில் ஒருவர்
கும்பிடும் தெய்வம் ஆவாரடா மண்ணில்
நாலும் தெரிந்து நடந்து கொண்டாலே
நன்மைகள் உன்னை நாடுமடா

கொடுப்பவர் செல்வம் குறைவது இல்லை
கோபுரம் போன்றே உயருமடா அதைத்
தடுப்பவர் வாழ்க்கை தரங்கெட்டுப் போகும்
தரித்திரம் வந்தே சேருமடா

வீட்டுக்குள் என்றும் முடங்கிக் கிடந்தால்
விபரங்கள் அதிகம் தெரியாதடா தினம்
வெளியில் தெருவில் உலவி வந்தாலே
வேதனை மனதில் குறையுமடா

வரவும் செலவும் கலந்து இருப்பதே
வாழ்க்கை என்ற பாடமடா இங்கு
வரவினில் சிரிப்பதும் செலவினில் அழுவதும்
பரம்பரையாய் வரும் பழக்கமடா

மண்ணுக்கு உள்ளே சென்றிடும் யாவும்
மட்கியே எருவாய் போகுமடா நீ
மரத்தின் விதையினை புதைத்துப் பாரு
மண்முட்டி எழுந்தே வளருமடா

உயர்வும் தாழ்வும் உன்கையில் உண்டு
உணர்பவன் தானே மனிதனடா உன்
நித்திரை குறைத்து நெடுந்தோள் உயர்த்து
நெருங்கிடும் உன்னை வெற்றியடா

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : சொ. பாஸ்கரன் (22-Jul-16, 5:45 pm)
பார்வை : 69

மேலே