விபரீத விளையாட்டு
விபரீத விளையாட்டு
*************************
ஒருத்தனுக்கு
ரெண்டு பொண்டாட்டி...
மூத்தவ செத்த
ஒரு வருசம் கழிச்சி
ரெண்டாந்தாரமா ஒருத்தி
அவனுக்கு வாக்கப்பட்டா...
அவ கொஞ்சம் கோவக்காரி...
அப்பப்ப ஒரு வார்த்தை சொல்லுவா
அவன பார்த்து...
"எங்கம்மா பேச்சக்கேட்டு
மாடிவீட்டுக்காரனுக்கு
வாக்கப்பட்டது தப்பா போச்சி"ன்னு
இவனுக்கு கல்யாணத்துல
விருப்பம் இல்ல தான்...
இவனோட அம்மா சொல்லும்...
"ஏன் டா...
கடைசிவரைக்கும் இப்படி
மொட்டப்பயலா இருக்கப் போறியா...
கையில் ஒரு
பிள்ளைய கொடுத்துட்டு
அவ போய்ட்டா...
இத பாத்துக்க
ஒருத்தி வேண்டாமா"ன்னு...
வேற வழியில்லாம
வேறொருத்திய
தனக்கான ஒருத்தியா கட்டிக்கிட்டான்...
மூத்தவளுக்கு பிறந்தது
ஆம்பள பிள்ளை...
இளையவளுக்கு பிறந்தது
பொம்பள பிள்ளை....
ரெண்டுக்கும்
மூணு வயசுதான் வித்யாசம்...
இப்ப
அவனுக்கு எட்டு வயது...
அவளுக்கு ஐந்து வயது...
வீடு
ஊருக்கு ஒதுக்குப்புறம் என்பதால்...
இவர்களுக்கு விளையாட
துணைக்கு யாருமில்ல...
வேற வழியில்ல
ரெண்டு பேரும்
சேர்ந்துதான் விளையாடனும்...
இன்றைய விளையாட்டு...
கொஞ்சம் விபரீதமான விளையாட்டு...
அண்ணன் சொல்றான்
தங்கைய பார்த்து..
"நான் பண்றத
நீ பண்ணிடுவியா..."
"ம்ம்ம்ம்....
பண்ணிடுவேனே..."
"இங்க இருந்து
குதிக்கனும்..."
எப்பொழுதும் அவர்கள்
விளையாடும் இடம் தான்...
இருந்தாலும்
கொஞ்சம் உயரம் தான்
தங்கைக்கு...
அவர்கள்
விளையாடி விளையாடி...
அவர்களுக்கு அந்த இடம்
பழகிவிட்டது...
அந்த இடமும்
அவர்களிடம் பழகிவிட்டது...
ஒருநாள்
விளையாடவில்லையென்றாலும்
அவர்கள் வராத ஏக்கத்தில்
வெறிச்சோடிக் கிடக்கும்
அந்த இடம்...
"நான் திரி சொல்லுவேன்...
நீ குதிக்கனும்..."
"ம்ம்ம்ம்...."
ரெடி...
ஒன்...
டூ...
திரி என்பதற்குள்...
சித்திக்காரி
அவ பிள்ளைய தூக்கிட்டு போய்ட்டா...
"சண்டாளப் பாவி..
எம்பிள்ளைய கொல்ல பாக்குறியா"ன்னு...
இவனும் அழுதுகிட்டே
வீட்டுக்குள்ள போய்ட்டான்...
யாருமில்லா அந்த இடத்தில்...
அவன் திரி சொல்லுவான்...
இவள் குதிப்பாள்
என்று...
நம்பிக்கையுடன் காத்திருக்கிறது...
அவர்கள் விளையாடிக்கொண்டிருந்த
அந்த வீட்டு
முன் வாசலின்
மூன்றாவது படிக்கட்டு...
எங்கும் செல்லாமல்
அதே இடத்தில்...
பல வருடங்களாக...
இவண்
✒க.முரளி (spark MRL K)