ஆனந்த அழுகை
என் மனதிற்குள் நீ வந்து
உட்கார்ந்த நாள் தொட்டு
பூப்பூத்தக் காகிதங்களில் வண்டுகள்
கவிதை குடித்துப் போயின
ஓவியமாய் மாட்டி வைத்த உன்
அழகைக் குறிப்பெடுத்துப் போகும்
வண்ணத்துப்பூச்சிக் கூட்டங்கள் உன்னை
வண்ணங்களின் பல்கலைக்கழகம் என்கின்றன
நீ விழிகளைத் திறந்து கொண்டு
வயலோரம் நடப்பதைத் தவிர்த்துக் கொள்
மீனென்று கொத்திப் போக
தவமிருக்கின்றன கொக்குகள்
இப்போதெல்லாம் நேரம் காலம்
தெரியாமல் கூவுகின்றன குயில்கள்
பூத்துக்குலுங்கும் உன்னைப் பார்ப்பதால்
வசந்தகாலம் என்று எண்ணியிருக்கலாமவை
நீ ஆடைகளுக்கு மேலாக
அணிந்து செல்கின்ற மௌனத்தை சற்றே
வார்த்தை சலவைக்கு அனுப்பிவை. உதடுகள்
எனக்கான சம்மத வெள்ளைத் தரட்டும்
குத்துக் கல்லாட்டம் கிடக்கும் உன்னை
குத்துவிளக்கேற்ற வரவேற்கிறது என் வாசல்
நீ வந்தால் மட்டும் போதும்
குத்துவிளக்கில்லாமலும் ஒளிரும் மனசு.
தயக்கங்களின் பசை தடவிய பாதையில்
மயக்கங்களுடன் நடந்து போகும் மனதை
காதலின் ஈர்ப்பு விசை நிரம்பிய
என் கண்களோடு சற்றே பேசவிடு
காதலின் புழுவை மாட்டிய தூண்டிலுடன்
காத்துக் கிடக்கிறது பருவக்கனவு
மீனாக நீவந்து மாட்டிக் கொள்ளும்
நாளுக்காய் ஆனந்தமாய் அழுகின்றேன் நான் .
மெய்யன் நடராஜ்