வைரமே வைரம்
செட்டிநாட்டில் திருமணம் என்றால் வைரம் இல்லாமல் இருக்காது.. ஆமாம் காதுக்காவது வைரத் தோடு போடுவார்கள். மேலும் வைர மூக்குத்தி, மாப்பிள்ளைக்கு வைர மோதிரம் உண்டு. எங்கள் ஐயாக்கள் வைரம் நன்கு பார்ப்பார்கள். வைரம் பார்க்க ஒரு கண்ணாடி அணிந்து கொள்வார்கள். அதன் தரம், நீரோட்டம், விரிசல் இல்லாமல் இருக்கிறதா எனவும் வைரத்தின் தரமும் பார்ப்பதை வைரம் பார்த்தல் என்பார்கள். தற்போது ஆண்கள் மட்டுமே கோலோச்சும் இத்தொழிலில் ஒரு பெண்ணும் இருக்கிறார். அவர் பெயர் வைர மீனு.
ப்ளூஜாகர் வைரமும், பெல்ஜியம் கட்டிங்குமே கண்டிருப்பீர்கள். இப்போதெல்லாம் பாம்பே கட்டிங்தான் ஃபேஷன். சூரத் , பாம்பே போன்ற நகரங்களில் வைரங்கள் வாங்கித் தரம் பிரிக்கப்படுகின்றன.
நெக்லஸ் வகையில் கூட பூச்சரம், கண்டசரம், மங்கலச் சரம், வைர அட்டியல் , மினி நெக்லஸ் என வைரத்தின் அளவுக்கும் தரத்துக்கும் ஏற்ப வகைகள் உண்டு. என் திருமணத்தின் போது எல்லாம் 75 ஆயிரம் ரூபாய்களில் செய்யப்பட்ட வைரப் பூச்சரங்கள் இன்று கிட்டத்தட்ட 2 அல்லது 2 1/2 லட்ச ரூபாயில் செய்யப்படுகின்றன. பொதுவாக வைரமும் செண்ட் , காரட் என்ற அளவுகளால் அளக்கப்படுகிறது. 3 செண்ட் கல், 5 செண்ட் கல், 7 செண்ட் கல் போன்றவை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. சிலர் ஒரே போல 10 செண்ட் கல், 20 செண்ட் கல்லில் நகைகள் செய்வார்கள். ஒரு உறவினர் போட்டிருந்த ஒற்றைக்கல் மூக்குத்தியின் விலை 70,000. யம்மாடியோவ் என்றிருக்கிறதல்லவா..100 செண்ட் சேர்ந்தது ஒரு காரட். 3 1/2 காரட்டில் ஒரு பூச்சரம் செய்யலாம். இது எல்லாம் எகனாமிக் அளவு.
வளையல்களிலும் இரட்டை வரிசைக் காப்பு, இலைக்காப்பு, ஏணிப்படிக் காப்பு, கம்ப்யூட்டர் டிசைன் காப்பு என வகைகள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் பட்ஜெட்டுக்கும் ஏற்ப நகைகள் செய்யலாம் இது 6 காரட்டிலிருந்து செய்யப்படுகிறது. திருமணப் பெண்களுக்கு வைரத்தில் தாலியும் அணிவிப்பார்கள். அது கிட்டத்தட்ட 12 காரட்டுகளில் மினிமம் செய்வார்கள். தங்கத்தின் விலைதான் தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது. இப்போது மிக அதிகமாக வைர ப்ரேஸ்லெட்டுகள் அணிகிறார்கள் திருமணமான இளம் யுவதிகள். எங்கள் பாட்டி காலத்தில் எல்லாம் சேலையை பின் செய்து கொள்ள வைர ப்ரூச்சுகள் , தங்க ப்ரூச்சுகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். தலைக் கொண்டைக்கு வைரச் சிட்டி எனப்படும் க்ளிப்புகளையும் அணிந்திருக்கிறார்கள். இப்போது இவை எல்லாம் அருகி விட்டன.
பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்து பின் லாபம் பார்ப்பது போல அல்ல வைரத்தில் முதலீடு செய்வது. இன்னும் ரீசேல் வேல்யூ என்ன என்று தெரியவில்லை. ஏனெனில் அநேகர் தங்கள் சொந்த உபயோகத்துக்கு புதிதே செய்வதால் மறு விலை மிகக் குறைவாகத்தான் இருக்கும். இருந்தும் வைரத்தின் விலையும் ஏறிக்கொண்டேதான் போகிறது. முன்பு எல்லாம் ஒரு காரட் 36,000 என இருந்தது இப்போது 45,000 வரை அதிகரித்துள்ளது. அதுவும் சமீபகாலமாகத்தான். எல்லாரும் தங்களுடைய ராசிக்கு ஒத்து வந்தால்தான் வைர நகை அணிவார்கள். ஆனால் செட்டிநாட்டுப் பகுதிகளில் மட்டும் அனைவரும் அணிகிறார்கள். இந்த வைர வியாபார நிமித்தம் வந்து தங்கி செட்டி நாட்டார் போலே தங்கள் பேச்சை மாற்றிக் கொண்ட சேட்டு மக்களையும் அதிகம் காணலாம். கலாச்சார கிராமம் என்ற வகையில் செட்டிநாட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த வைர வியாபாரிகளையும் சந்திக்காமல் போவதில்லை.
வைர நகை ஒரு கௌரவ அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒரு விழாவிலேயே காலை, மாலை வேறு வேறு வைர செட் நகை அணிபவர்களைப் பார்க்கலாம். சொலவடையாகக் கூடச் சொல்வார்கள், “ அவர்கள் வீட்டிலே வைரத்தை உழக்கிலே அளக்கலாம் “ என்று.
இதைப் பராமரிப்பதும் எளிதுதான். ஆனால் கவனம் தேவை. பொதுவாக ஓபன் டைப்பில் நகைகள் செய்யப்படுவதில்லை. க்ளோஸ்டு டைப்தான். எனவே நம்முடைய வியர்வை, செண்ட், பாடி ஸ்ப்ரே போன்றவை பட்டால் வைரம் கருக்கும். காதில் போடும் தோடுகள் எண்ணெய்க் குளியலின் போதோ அல்லது தலைக்கு எண்ணெய் தடவும் போதோ கழற்றிப் பின் குளித்தபின் போட்டுக் கொள்ளவும். நம் உடலில் உள்ள சல்பர் பட்டாலும் கூட கறுக்கும் என உறவினர் ஒருவர் சொன்னார்.
இப்படிக் கறுத்த வைர நகைகளை சுத்தம் செய்ய ரோஸ் டி என்ற சாக் பவுடர் பயன்படுகிறது. அதையும் பொற்கொல்லர் தான் தடவி கொஞ்சம் காட்டன் வைத்து நன்கு பிரஷ் போல் அழுத்தித் துடைத்துக் கொடுக்கிறார்.. "போயே போச்சே .. போயிந்தே.. இட்ஸ் கான்" மாதிரி அந்தக் கரை போய்விடுகிறது. பின் இன்னும் பளபளப்பு தேவைபட்டால் கழுவி சுத்தம் செய்து தருவார்கள். எலக்ட்ரோ ப்ளேட்டிங்கும் செய்துகொள்ளலாம்.
அப்புறம் பராமரிப்பு பற்றி இன்னும் டிப்ஸ். பொதுவா எல்லா அலங்காரங்களும் முடிந்த பின் வைரம் அணிந்து கொள்ள வேண்டும். செண்ட் , வியர்வை, பாடி ஸ்ப்ரே போன்றவை வைரத்துக்கு விரோதி, சல்ஃபர் எக்ஸ்ட்ராக்ஷன் அதிகம் உள்ள உடம்புக்காரர்களுக்கு கறுக்கும். அப்புறம் நம்மைப் போல ஷாம்பூ வெந்நீர்க் குளியல் கொடுக்க வேண்டாம். நான் சிந்தூரப்பொடி மற்றும் நாய்த்தோல் போட்டுத் துடைப்பேன். அதெல்லாம் செய்ய தேவையில்லை. அது எல்லாம் தங்கத்துக்கு மட்டுமே.
நகையை கழற்றி வைக்கும் போது நல்ல தண்ணீரை ஒரு பவுலில் ஊற்றி அதில் அமிழ வைத்து ஒரு முறை கழுவி எடுத்து இன்னொரு முறையும் கைகளால் நீவிக் கழுவி எடுத்து பின் ஒரு எட்டுமுழ வேஷ்டித் துணியில் துடைத்துக் காயவைத்து. இன்னொரு 8 முழ வேஷ்டித் துண்டால் கவர் செய்து மர நகைப் பெட்டியில் வைக்கவேண்டும். அலமாரி லாக்கர், வங்கி லாக்கரில் வைப்பதாலும் நகை கறுக்கிறது. எனவே நீங்க ஆசையோடு வாங்கின வைரத்தை வைரம் போல பாதுகாத்து அணிந்து கொள்ளுங்கள்