அதீதம்
"அதீதம்"
=========
கடவுள்தான்
சபித்து அனுப்பினான் பூமிக்கு
கடவுள் தான்
ஆசிர்வதித்தான் பூமியில்
உப்பரிகை மாடத்தின்
நெளிந்துருக்கிய பாலுஸ்ட்ரேடின் மேல்
கிடத்தப்பட்டவர்களாக நாம்
ஆண் பெண் கருணை செய்யும்
உறவினைப்பற்றி
விசுவாசம் இருக்கவேண்டாம்
கொஞ்சம் கால் இடறினால்
விழுந்து இறந்து போவோம் என்னும்
உறுதியுள்ள மலை உச்சியில்
தடித்த வெண்மை வண்ணமுள்ள
கயிறு சுற்றி ஏறும்போது
மரணத்தின் விளிகேட்கும்
அதுதான் நம்மை வாழவும் தூண்டும்
எதிர்பாராமல் அந்த கயிறுவிடும் என்றும்
ஒற்றை தலை முடியின்
கனமும் இல்லாமல்
அந்த ஆழத்தோடு விழக்கூடும் என்றும்
யாருக்கும் பயம் வேண்டாம்
இதோ கட்டவிழ்க்கிறேன்
வாழ்க்கை நம் எல்லாரோடும்
மிகப்பெரிய களியாட்டம்
நடத்திக்கொண்டே இருக்கும்
முன்பு எப்போதும் இல்லாத
புதிதாய் ஈர்ப்பும் இல்லாத
ஒரு ரோகம் தோன்றும்
அது மெது மெதுவாய் ஊடுருவி
புற்று நோயாய் மாறி
யாரோ முன்னால்
நம்மை கொண்டு நிறுத்தும்
அதிலிருந்து விடுபடும் முன்னால்
அதனினூடே மிக தூரம் பயணித்திருப்போம்
ஒரு பந்துபோல சாதாரண நிலைக்கு
துள்ளித் திரும்பியபோது
சம லட்சணமுள்ள நூறுக்கணக்கான
நம் போலுள்ள ரோகிகளின்
வேதனைகள் அங்கே காணக்கூடும்
அங்கிருந்துதான் வாழ்வினோடுள்ள
மதிப்பும் ஆசையும் அறியப்பெறுவோம்
ரோகத்திலிருந்து சகஜத்திற்கு மாறியபோது
மனதினுடைய மதில்சாடிய
ஓர் அனாதைப் பூனையைப்போல
சுற்றியிருந்த எல்லாவற்றையும்
இழந்துவிட்டிருப்போம்
கடைசியாய்
சிறுவயது நண்பன் ஒருவனுக்கு
விரல் மோதிரத்தை
அவிழ்த்துக் கொடுத்துவிட்டு
அவனை வழியனுப்பி வைத்தது மட்டும்
என் தரப்பில் உள்ள ஞாபகம்
யாரோவுடைய நிழற்படவிகள் முன்னில்
ஒளியில் விரிந்த பூக்கள் போல
யாதொரு வீரியமும் இல்லாத
சங்கல்ப பாத்திரங்களாவோம்
விசித்திர கற்பனைகளாவோம் நாம்
இதேபோல எத்தனையோ ஞாபகங்களோடு
சகஜ நிலைக்கு திரும்பாத
எத்தனையோ ரோகிகளின்
விழிநீரின் விளிம்பில்
நிழலாடும் போக்கற்ற பயணம்
"அதீதம்"
"பூக்காரன் கவிதைகள்"