கல்யாண காதல்
பதின் பருவ சலனங்கள் யாவும்
பகல் பொழுது பனியாய் மறையும்
பார்த்திரா பாவை உன் நினைவால்!
கற்ப்பை பொதுவில் வைத்த
பாரதி வழி வந்த வித்து
முப்பது தாண்டியும் என்னில்
கற்பு நெறி காக்க வைக்கும்...
நீர் தேக்கும் அணையாய்
நெஞ்சம் தேக்கும் உன் நினைவு!
கூந்தல் கொஞ்சம் குறைவு
வாய் நீளம்
பல் சற்று எடுப்பு
படிப்பு அதிகம்
பணவசதியில்லை
நிறம் கம்மி
ஆயிரம் காரணம் அடுத்தவர்
உன்னை சாட
எனக்கோ அன்பென்னும்
ஒற்றைக் காரணம்
உன் சரணம் பாட!
மூன்று முடிச்சிட்டு
உன் கழுத்தில் நான்
அணிந்தது தாலியல்ல
தாய் தந்த என்
தேகத்தை தான்!
உன் சிரம் சுற்றி
உச்சி நெற்றியில்
என் கரம் வைத்தது
குங்குமத்தை அல்ல
என் நெஞ்சத்தை தான்!
உன் கால் சிணுங்கும் மெட்டி
அது என் உயிர் பாடும்
சிருங்கார ராகம்!
காதல் கல்யாணம் இல்லை
இது கல்யாண காதல்!!