கீதை கூறும் பற்றின்மைக் கொள்கை

வாழ்க்கைச் செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது எதிலும் பற்று வைக்காதிருப்பது. நீ உலகத்திற்குள் இருந்தாலும், அதிலிருந்து நீ முற்றிலும் வேறானவன் என்பதை நினைவில் கொள். நீ எதைச் செய்தாலும் உனக்காகச் செய்யாதே அப்படி உனக்காகச் செய்யும் செயல் நீ சுமப்பதற்கான விளைவுகளைக் கொண்டு வந்தே தீரும்.
நீ செய்வது நற்செயலாக இருந்தால் நல்ல விளைவுகளையும் தீய செயலாக இருந்தால் தீய விளைவுகளையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். ஆனால் நல்லதோ கெட்டதோ எந்தச் செயலையும் உனக்காகச் செய்யவில்லை என்றால், அது உன்மீது எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது.
இந்தக் கருத்தைத் தெளிவாக உள்ளடக்கிய வாக்கியம் ஒன்று நம் சாஸ்திரத்தில் இருக்கிறது: தனக்காகச் செய்யவில்லை என்பதை முற்றிலும் உணர்ந்தவன் பிரபஞ்சம் முழுவதையும் கொன்றாலும் (தான் கொல்லப் பட்டாலும்) அவன் கொன்றவனோ கொல்லப் பட்டவனோ ஆகான்.
அதனால் தான் கர்மயோகம் உலகத்தைத் துறக்காதே உலகத்திலேயே வாழ்; அது தரும் அனுபவங்களை உன்னால் முடிந்த அளவு ஏற்றுக் கொள்; ஆனால் அது உனது இன்பத்திற்காக என்றால் அவற்றை ஒரு போதும் செய்யாதே என்று கற்பிக்கிறது அனுபவிப்பது லட்சியமாக இருக்கக் கூடாது முதலில் சிறிய நான் என்பதைக் கொன்றுவிடு. பின்னர் உலகம் முழுவதையும் நீயாக ஏற்றுக்கொள்
முற்காலக் கிறிஸ்தவர்கள் சொல்வது போல் பழைய மனிதன் சாக வேண்டும் பழைய மனிதன் என்று அவர்கள் குறிப்பிடுவது இந்த உலகம் நமது சுகத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது என்னும் சுயநலக் கருத்தையே முட்டாள் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஓ தேவனே! சூரியனை எனக்காகப் படைத்தாய் சந்திரனையும் எனக்காகத்தான் படைத்தாய் என்று கூறிப் பிரார்த்திக்கக் கற்றுத் தருகிறார்கள் குழந்தைகளுக்கு இவற்றை எல்லாம் படைத்துத் தருவதைத் தவிர கடவுளுக்கு வேறு எந்த வேலையும் இல்லாதது போல் இருக்கிறது. இவர்களின் கூற்று குழந்தைகளுக்கு இத்தகைய முட்டாள்தனங்களைச் சொல்லித் தராதீர்கள்.
இன்னொரு விதமான முட்டாள்கள் சிலர் உள்ளனர். நாம் கொன்று தின்பதற்காகவே விலங்குகள் எல்லாம் படைக்கப்பட்டதாகவும், அனுபவிப்பதற்காகத்தான் இந்த உலகம் படைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்கள் போதிக்கிறார்கள் இவையெல்லாமே முட்டாள் தனம் தான்.
மனிதன் எனக்காகவே படைக்கப் பட்டுள்ளான் என்று ஒரு புலி நினைக்கலாம்; ஓ பகவானே! இந்த மனிதர்கள்தான் எவ்வளவு கொடியவர்கள் தானாக வந்து எனக்கு இரையாகாமல் உன் சட்டத்தை மீறிக் கொண்டிருக்கிறார்களே என்று பகவானிடம் பிரார்த்தனை கூடச் செய்யலாம் உலகம் நமக்காகப் படைக்கப்பட்டிருக்குமானால் நாமும், உலகத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறோம் நமது சுகத்திற்காகவே உலகம் படைக்கப்பட்டிருக்கிறது. என்று கருதுவது நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்ற கொடிய எண்ணமாகும்
இந்த உலகம் நமக்காக இல்லை லட்சக்கணக்கானோர் ஆண்டுதோறும் இந்த உலகத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கிறார்கள். உலகம் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை ,லட்சக்கணக்கானோர் அந்த இடத்தில் நிரப்பப்பட்டு விடுகிறார்கள் இந்த உலகம் நமக்காக எவ்வளவு அமைந்திருக்கிறதோ நாமும் உலகிற்காக அவ்வளவு அமைந்திருக்கிறோம்.
எனவே நாம் உரிய முறையில் செயல்புரிய வேண்டுமென்றால், பற்று வைப்பதை முதலில் விட வேண்டும் இரண்டாவது இந்த உலகின் குழப்பத்தில் கலந்துகொள்ளாமல் சாட்சியாக இருந்து வேலை செய்துகொண்டே போக வேண்டும்.
உங்கள் குழந்தைகளை ஒரு தாதியின் மனப்பான்மையோடு பாருங்கள் என்பார் என் குருதேவர். அவள் உங்கள் குழந்தையைத் தன் குழந்தை போலவே கைகளில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுவாள். பற்றாக இருந்த அனைத்தும் அவளுக்கு மறந்து போய்விடும் உங்கள் குழந்தையை விட்டுவிட்டு இன்னொரு குழந்தையைச் சீராட்டுவதில் அவளுக்குச் சிறிதும் வருத்தம் ஏற்படுவ தில்லை இத்தகைய மனப்பான்மைதான் உங்களுடையது என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் அனைத்திடமும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
உங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இருக்குமானால் இந்த உலகத்தில் உங்களுடையது என்று கருதுகின்ற எல்லாமே உண்மையில் அவருடையது என்று நம்புங்கள். மிகப் பெரிய பலவீனங்கள், சில வேளைகளில் மிகப் பெரிய நன்மையாகவும் சில வேளைகளில் மிகப் பெரிய வலிமையாகவும் வேடம் தரித்து வருகின்றன. நம்மை எதிர்பார்த்துச் சிலர் வாழ்கிறார்கள்.
நாம் ஒருவருக்கு நன்மை செய்ய முடியும் என்று எண்ணுவது பலவீனம் இதுவே நம்முடைய பற்றுக்கள் அனைத்திற்கும் பிறப்பிடம். இந்தப் பற்றின் மூலமே நமது துன்பங்கள் எல்லாம் வருகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவர் கூட நம்மை எதிர்பார்த்து வாழவில்லை என்பதை நாம் நம் மனத்திற்கு எடுத்துக் கூற வேண்டும். ஒரு பிச்சைக்காரன் கூட நம் தானத்தை எதிர் பார்த்து வாழவில்லை .
ஒரு ஜீவன் கூட நம் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை நம் உதவியை எதிர்பார்த்து ஓர் உயிர்கூட வாழவில்லை. அனைவருக்கும் இயற்கையே உதவி செய்கிறது. நம்மைப் போல் லட்சக்கணக்கான மனிதர்கள் இல்லாவிட்டாலும் இயற்கை உதவிக் கொண்டுதான் இருக்கும் உங்களுக்காகவும் எனக்காகவும் இயற்கையின் போக்கு நிற்காது.
பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாம் பண்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகின்ற மிகப் பெரும் பேறு என்பதை முன்பே கூறினேன். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம் இது இதை முழுமையாக அறிந்து கொண்டால் நாம் துயருறவே மாட்டோம்;
சமுதாயத்தில் எங்கும் எவரோடும் சேர்ந்து வாழலாம். அதனால் தீங்கு நேராது. மனைவி, கணவன், வேலைக்காரர் பட்டாளம், அரசாள நாடுகள் என்று நீ பெற்றிருக்கலாம் ஆனால் இந்த உலகம் உனக்காக அல்ல, நீ இருந்தே தான் ஆகவேண்டும் என்ற தேவையும் உலகிற்கு இல்லை என்ற கருத்தின் அடிப்படையில் நீ செயல் படுவாயானால் இவற்றால் உனக்கு எந்தத் துன்பமும் வராது.
-சுவாமி விவேகானந்தர்.