ஓணம் திருநாள்
அதிகாலையில் எழுந் து விண்ணவனைத் தொழுது கையில் ஒரு பையுடன் வெளியில் சென்றாள் ஒரு பெண். வண்ண வண்ண மலர்கள் பலவும் கொய்து வாயிற்படி யருகில் பூக்கோல மிட்டு நெஞ்சம் பூரித்து நிமிர்ந்த அவ்வேளை ..
கண்முன் நிற்கக் கண்டாள் பாரோர் போற்றும் மாவெலி மன்னன். காண்பது கனவோ என்றெண்ணி அவளிரு கண்கள் ஒருமுறை கசக்கக் கண்ட மாமன்னன் "மங்கையே ! உன் கண்கள் கலங்கக் காரணம் மென்ன ? பூவின் மகரந்தத் துகள்கள் வீழ்ந்தனவோ. உன் அழகிய கண்களில் ? என்நாட்டு மக்கள் கண்கலங்கக் கண்டால் என்மனம் நோகுமென அறியாயோ பெண்ணே" என்று வினவினன்.
ஆம் . மன்னா ! பூவின் மகரந்தம் வீழ்ந்திருக்கலாமென்றே தோன்றுகிறது. சற்று என்னருகில் வந்து, ஒருமுறை இருகண்களிலும் ஊதினால் பறந்துவிடும் என்றாள் அவள். கலகல வென்று நகைத்து மாமன்னன் அவள் கண்களில் "பூ" வென்று ஊதவும், "வேந்தரே ! பல்லாண்டுகளாக என் மனதில் ஒரு சந்தேகம் உள்ளது. அதை உம்மால்தான் தீர்த்துவைக்க முடியும். ஆட்ஷேபனம் இல்லையென்றால் கேட்கலாமா என்று வினவ, "மக்கள் குறைகளை தீர்ப்பதே ஓர் மாமன்னனின் கடமை. அச்சமின்றி கேள் பெண்ணே" என்று சொல்லவும், அவள் தொடர்ந்தாள்.
பரசுராமர் பரசுவை வீசியதால் தோன்றியதே கேரளம் என்று சொல்கிறார்கள். அது உண்மையென்றால் மகாவிஷ்ணுவின் வாமன அவதாரத்திற்குப் பிறகு தானே பரசுராமன் அவதாரம் வருகிறது. அப்படியென்றால் எந்த கேரளத்தை நீவீர் ஆட்சி செய்திருந்தீர் அக்காலம் என்று கேட்கிறேன். வாழ்ந்திருந்த நாட்களில் வாரி வாரி வழங்கியே வாழ்விழந்தீரேன் வேந்தரே ! மூன்றடி நிலம் வேண்டுமென்று வாமனனும் கேட்டபோது, சற்றும் மாமன்னருக்கு மனதில் சந்தேகம் வரவில்லையா ? தங்களின் ராஜா குரு சுக்கிராச்சாரியார் தடுத்ததையும் பொருட்பட்டுத்தாமல் மூன்றடி நிலம் கொடுத்தீரே ! அது எப்படி என்று சொல்லும் என்றதும் மாவேலி மன்னன் மாயமாகிவிட்டான்.