ஒரு மயிலிறகால்
வைகறை வானிலே முத்தமிடும் கதிரவனே...
யமுனையின் நீராய் நெஞ்சம் துள்ளுகிறேனே...
வையகம் ஆள்கின்ற நாயகனை நீகாண்பாயா?...
மையல் கொண்டாள் மங்கையென்று சொல்வாயா?......
மிதந்து வரும் குளிர்ந்த தென்றலே...
மிளிர்கின்ற என்னவன் அழகினைக் காணாது
கண்கள் இரண்டும் கனலில் வாடுகிறதென்று
கார்முகில் வேந்தனிடம் என்மொழிகள் சேர்ப்பாயா?......
கண்ணா உன்வாய் மலரும் குழலிசைதான்
பெண்ணிவள் கேட்டு மயங்கும் இன்னிசை...
பிருந்தாவனத்தில் துள்ளியோடும் உன்றன் கால்கள்
வருந்தி வேண்டும் எனைத்தேடி வாராதோ?......
என்னை வசீகரித்த யசோதையின் மைந்தனே...
உன்னை நினைத்தே நாளுமிந்த நங்கை
உலையில் அரிசியென உள்ளுக்குள் துடிக்கின்றாளே...
இலையின் நரம்பென இளமேனி இளைக்கின்றாளே......
மயிலிறகு சூடி நிற்கும் மாதவனே...
மயிலின் மனம்வருடிய மன்னவன் நீதானே...
தடாகம் பூக்காத இந்தத் தாமரையை
மாலையிட்டு மணந்து செல்வாயா மாயவனே......