ஆசிரியப் பெருந்தகை

அழகான புன்சிரிப்பு, அன்பான அரவணைப்பு
அன்னை, தந்தையர்க்கு அடுத்த இடமிவர்க்கு
தெய்வம் இல்லையெனும் பகுத்தறிவு வாதிகளும்
தெய்வமாய் காணுகின்ற ஆசிரியப் பெருந்தகையே

வரலாறு படைத்திடவே, வாழ்க்கை கொடுத்தோரை
வாழ்த்த வயதில்லை, வார்த்தை கிடைக்கவில்லை
ஏணியாய் இருந்திங்கு, எம்மை ஏற்றுவோர்க்கு
என்னால் இயன்றதெல்லாம் எளிமையாய் இக்கவிதை

எம்வாழ்வு ஒளிபெறவே தம்வாழ்வைத் திரியாக்கி
கல்வியுடன், அனுபவத்தை கச்சிதமாய் வழங்கியிங்கே
சிறப்பான சிந்தனையும், சித்தாந்த அறிவுரையும்
நடைமுறை பயிற்சியையும் நயமாக வழங்கியவர்

மூச்சை அடக்கி முத்துக் குளித்திங்கே
முழுமையாய் உம்வாழ்வை முத்தாக அளித்தாயே
முத்தான மாணாக்கர் பலரும் உருவாக
முழுமதியாய் இருந்தாலும் முழுதாகத் தேய்ந்தாயே

எம்வாழ்வு வளம்பெறவே தம்வாழ்வை அற்பணித்து
எம்மைச் சான்றோனாய் மாற்றிடவே எருவானீர்
எருவை மறக்காத எம்மவரின் மனங்கனிந்த
அன்புதனை தான்கலந்து அருங்கவிதை சமைத்திட்டேன்...

எழுதியவர் : டிஜிட்டல் சரவணன் (15-Sep-16, 6:27 pm)
சேர்த்தது : டிஜிட்டல் சரவணன்
பார்வை : 266

மேலே