சாயாவாகிய நான் -ஒரு பக்க கதை- கவிஜி
சாயாவாகிய நான் -ஒரு பக்க கதை- கவிஜி
இப்டி அவன பார்ப்பேன்னு நான் நினைக்கல... ஆனா பாத்துட்டேன்.... மனசுக்குள்ள என்னமோ பண்ணுது.... அவன் இப்ப என்கிட்ட வந்து பேச போறான்... என்ன பேசுவான்.. எப்டி ஆரம்பிப்பான்... ஒன்னும் புரியல....ஆமா நான் எப்டி அவன அடையாளம் கண்டு பிடிச்சேன்....முதல்ல கை காட்டினான்...அப்புறம் தலை ஆட்டினான்.. அப்புறம் சிரிச்சான்... எனக்கு புரியல....யார்டா இவன்னு பாத்துடே இருந்தேன்.
அப்போ தான்... கையில குத்திருந்த பச்சைய காட்டினான்... சாயானு இருந்த என் பேரு... எல்லாத்தையும் ஞாபக படுத்திருச்சு... எனக்கு ஒரு கணம் பின்னால போன ஞாபகத்துல... சட்டுனு எல்லாமே திரும்ப ஒரு சினிமா மாதிரி மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சிடுச்சு.
இந்த மனசு..... வாழ்க்கை...காலம்.....உடம்பு எல்லாமே ஒரு மாதிரி ஒரு மாயம் போலதான இருக்கு.. நான் அப்டிதான் நினைச்சுக்குவேன்..... எல்லாருமே அப்டித்தான நினைச்சுக்குவாங்கனும் நினைச்சுக்குவேன்...அவன் கூட அப்டிதான் நினைப்பானோ...என்னவோ...?-சம்பந்தமே இல்லாம இப்பெல்லாம் இந்த மாதிரிதான் நான் யோசிக்கிறேன்... இப்பவும் அப்டி யோசிக்க தோனுச்சு...
அவன் என் கிட்ட வர முயற்சி பண்ணி கூட்டத்தை விலக்கினான்...
அவனுக்கு ஏதோ போன் வந்த்ருக்கு போல. போனை எடுத்து பேசிட்டே என்கிட்டே 'ஒரு நிமிஷம்'ங்கற மாதிரி ஜாடை காட்டிட்டு கொஞ்சம் ஒதுங்கி அதே இடத்தில நின்னு பேசினான். எனக்கும் அவனுக்கும் ஒரு 20 அடி தூரம் இருந்துச்சு... இப்போ ஒவ்வொரு தடவையும் இருவது தடவை என் இதயம் துடிக்கற மாதிரி நினைச்சுகிட்டேன். இந்த சந்திப்பு... இது மறுபடியும் நடக்கவே நடக்காதுன்னு நம்பிய ஒரு நாளை அவனே ஒரு நாள் வடிவமைச்சு குடுத்திருந்தான்.
சரியா 14 வருசத்துக்கு முன்னால .... ஒரு 14 வயசு சின்ன பையனா என் முன்னால வந்து நின்னு "நான் உன்னை காதலிக்கிறேன்.. ஐ லவ் யூ.."ன்னு சொல்லிட்டு ஓடிட்டான்.
அதுக்கப்றம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தன்னோட காதலை வேற வேற மாதிரி விவரிச்சான்...
'டேய் லூசு.. நான் உன்ன விட ஆறு வயசு மூத்தவ... அதும் உன்ன தம்பி மாதிரிதானே நினைச்சேன்.. லூசு மாதிரி உளராத... இனியும் இப்டி பேசின... உங்க வீடல் வந்து சொல்லி குடுத்துருவேன்...'ன்னு மிரட்டினேன்.
கிட்டத்தட்ட சோர்ந்து போயிருந்த அவன் "அதுக்கு தேவையே இல்ல.. எங்கப்பாக்கு டிரேன்ஸ்பர்....நாங்க மதுரைக்கு போறோம்... எனக்கும் 20 வயது ஆகும்....போது வந்து சொல்லுவேன்... அப்போ ஓகே சொல்லு"ன்னு சொல்லிட்டு போய்ட்டான்...
காலத்தோட படியில எனக்கு வயசு ஏறாதுங்கறது அவனோட நம்பிக்கையா இருக்கலாம். அதுக்கப்றம் எப்பவாவது காதலோட சாயங்கள் என் மேல படறதா தெரிஞ்சா அவன நினைச்சுக்குவேன்..ஏனோ அவன் ஞாபகம் வரும்....அவன் அப்போ இன்னும் அழகா தெரியுவான்...ஆழமா தெரியுவான்...ஏன்னு எனக்கு தெரியல. தெரிஞ்சாலும் சொல்ல தெரியல... இப்போ வளர்ந்திருப்பான்லன்னு எப்பவாவது யோசிப்பேன்... சிரிக்க தோணும். ஒரு பொக்கிஷம் போல அவன் நினைப்பு.....காரணமேயில்லாம...மனசோட மூளைக்குள்ள ஒரு மூலையில தேங்கிட்டாதாதான் தோனுது.
அவன் பேசி முடிச்சு என் கிட்ட வந்தான்... அதே சிரிப்பு... அதே நடை.... ஆனா மீசை எல்லாம் வெச்சு... வேற மாதிரி இருந்தான்...நல்ல உயரம்.. உடம்பு போட்ருக்கான்...
"ஹை சாயா எப்டி இருக்கீங்க..." என்று தொடங்கி ஏதேதோ பேசினான்... நான் அவனையே பார்த்துட்டு இருந்தேன்... அப்டிதான் பாக்க தோனுச்சு....
"ஓகே சாயாக்கா..."ன்னு 'க்கா'வை அழுத்தமா சொல்லிட்டு எல்லாத்துக்கும் ஒரு வெட்க சிரிப்பை காட்டிட்டு அவன் கார்டை என் கையில திணிச்சிட்டு போயே போய்ட்டான்.. அவசர வேலையாம்.
சட்டுன்னு 20 வயசுல அங்கயே நின்னு ஒரு மாதிரி வெறுமைக்குள்ள போற மாதிரி இருந்துச்சு... எனக்கும் அது தேவைங்கற மாதிரி நம்பினேன். பேச்சுக்கு கூட அந்த காதலைப் பத்தி அவன் பேசவே இல்லை... என்னைப் பத்தி எதுவுமே விசாரிக்கல. என் மனசு முழுக்க ஒரு மாதிரி என்னென்னவோ தேங்கி வழியுற மாதிரி இருந்துச்சு. ஏன் இவனை இத்தனை வருசத்துக்கு அப்புறம் பார்த்தேன்..... ஏன் என் மனசு இப்டி இவ்ளோ வேகமாக அசை போடுது. ஏன் இவனை இன்னும் சுமக்கறேன். ஒன்னுமே புரியாம வீட்ட பார்த்து நடக்க ஆரம்பிச்சேன்...
அவன் 14 வயசுல இருந்து 20 வயசுக்கு உயர்ந்துட்டு இருந்தான்... நான் 20 வயசுல இருந்து 14 வயசுக்கு இறங்கிட்டு இருந்தேன்.
காலத்தோட நிறை குறைகள கொஞ்சம் மாத்திட முடிவு செஞ்ச நினைவுக்குள்ள... சட்டுன்னு வந்துட்டு போச்சு...... குடிச்சுட்டு காரை புளிய மரத்தில மோதி செத்து போன என் புருசனோட ஞாபகம்.
கவிஜி