கல்யாணம்
"காயத்ரி உன்னோட செலக்ஷன் ரொம்ப சரியா இருக்கும் போல; உன்னோட வீட்டுல உடனே ஒத்துக்கிட்டாங்க" என் தோழி பிரியா என்னிடம் இரண்டு நாட்களுக்கு முன் கேட்ட கேள்வி. அன்று தான் கணேஷை என் அப்பாவிடம் அறிமுக படுத்தி எங்கள் காதலைப் பற்றி கூறினேன்.
கோபப்பட்டாலும் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உடனே கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பித்தார் என் அப்பா.
அம்மா அன்று முதல் என்னிடம் பேசவேயில்லை. ஆனாலும் திருமண ஏற்பாடுகளில் என் அம்மாவின் ஆதிக்கம் தான்.
இன்னும் சரியாக ஒரு வாரத்தில் காயத்ரி கோபாலனாகிய நான் காயத்ரி கணேஷாக மாறப் போகிறேன்.மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் இருக்கிறேன். என்னவன் என் கழுத்தில் தாலி கட்டும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.
"அடியே காயத்ரி, இங்க வாடி உன்னோட கொஞ்சம் பேசணும்; வேகமா வா" என் அம்மாவின் குரல் காதில் ரயில் போல ஏறியது.நானும் சென்றேன்.
கையில் உப்பு மற்றும் வத்தல்களை கையில் பிடித்த படி நான் வருவதை பார்த்துக் கொண்டிருந்தார் என் அம்மா.
அருகில் சென்றதும் திருஷ்டி சுத்தி போட்டார்.பின் எனக்கு தலை வாரி விட்டார்.தலை வாரும் போது அவர் கூறிய வார்த்தைகள் என் மகிழ்ச்சியை மயானமாக்கியது.
"அனேகமா இது தான் கடைசி தடவையா இருக்கும் என்னோட மகளுக்கு தலை வாரி விடுறது.
அடுத்த வாரத்துல இருந்து இன்னொருத்தனோட பொண்டாட்டி ஆயிடுவா; நீ சின்ன பிள்ளையா இருக்கும் போது என்னோட முந்தானைய பிடிச்சுக்கிட்டே தா தூங்குவ தெரியுமா?;
காலம் போறதே தெரியலை, உனக்கு கல்யாணம் ஆகப் போகுது; என்னோட பிள்ளை ஒரு பிள்ளைக்கு தாயாகுறத பாக்குற வரைக்கும் நான் இருப்பேனோ என்னமோ?" என புளம்பிக் கொண்டே தலை வாரினார்.
என் அம்மா பேச பேச என் கண்கள் மேலாடையை ஈரமாக்கியது.நான் அழுவதை பார்த்து என் அம்மா என்னை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.
நேரம் கரைந்தது.சூரியன் மறைந்து நிலா சிரித்தது.
என் மனதில் பழைய ஞாபகங்கள் அருவியாய் கொட்டின.அப்பாவின் சவரக்கத்தியை வைத்து சவரம் செய்தது,அம்மாவின் சேலை கட்டி முதன் முதலாக வெட்கபட்டது, அப்பாவுடன் சைக்கிளில் ஊர் சுற்றியது, அம்மா கைபிடித்து கடைவீதி சென்றது என ஞாபகங்கள் என் கல்யாணக் கனவுகளை கரைத்தன.
என் வீட்டு வாசல் என்னை விரட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தது.என் வீட்டு தோட்டத்தில் நான் வளர்த்த பூச்செடிகள் கோபித்துக் கொண்டு பூக்க மறுக்கின்றன.
நான் என் கல்யாணத்தையே வெறுக்கும் மனநிலைக்கு வந்து விட்டேன்.நான் கல்யாண ஆசை கொண்டது பாவமா? அல்லது பெண்ணாய் பிறந்தது பாவமா?
நான் மட்டும் ஆணாக பிறந்திருந்தால் என் வீட்டை விட்டு பிரிய வேண்டாம்,என் பெற்றோரை பிரிய வேண்டாம், என் பூச்செடிகளை பிரிய வேண்டாம். ஆனால் நான் தான் பெண்ணாய் பிறந்து விட்டேனே; என்ன செய்ய முடியும்?