சூப்பி
![](https://eluthu.com/images/loading.gif)
ஜெயபாலசுப்பிரமணியம் என்பது அவனுடைய நீண்ட பெயர். ஜெயா, பாலா, மணி என்று அவனைச் சுருக்கமாக கூப்பிடுவதை விட எல்லோரும் “சூப்பி” என்று தான் பட்டப்பெயர் வைத்து கூப்பிடுவார்கள். அதற்கு காரணமும் உண்டு. யாழ்ப்பாணத்தில் பட்டப் பெயர் வைத்து அழைப்பது கலாச்சாரமாக நிலவி வருவது வழக்கம். சிலருக்கு பட்டப்யெர் சொல்லி கூப்பிட்டால் கோபம் வரும். உதாரணத்துக்கு எதற்கு எடுத்தாலும் எதாவது குறை சொல்லுவதையே வழக்கமாக கொண்ட நடராஜா என்பவரை நொட்டை நடராசா என்று அழைப்பர்கள்;. அப்படி கூப்பிட்டால் அவருக்கு படுகோபம் வரும். சபாபதியார் வீட்டு வளவில் பல விதமான பலா மரங்கள் இருந்ததினால் அவருக்கு மக்கள் சூட்டிய பெயர் பிலாக்காய் சபாபதி. சைக்கிலில் கொழும்புத்துறையில் இருந்து வந்து மீன் விற்பவனின் கண்கள் எப்போதும் சிவந்திருந்ததினால் இரத்தக் கண்ணன் என்ற பட்டப்யெரை அவனுக்குச் சூட்டினார்கள் அவனது வாடிக்கையாளர்கள். அவனது உண்மைப் பெயர் என்னவென்று பலருக்குத் தெரியாது. தரமுள்ள மீன்களை நெருப்பு விலையில் அவன் விற்றதும அந்தப் பெயர் வரக் காரணமாகும். அளுத்கடையில் கூலி வேலிசெய்து பின்னர் ஊரோடு வந்து சண்டியனாக மாறியவனுக்கு “அளுத்கடைச் சண்முகம்” என்ற நாமம் சூட்டப்பட்டது. கிடைத்த பட்டப்பெயர்களை ஒரு அடையாளக் குறியாகப் பலர் விரும்பினர்.
சூப்பி என்னோடு கூடவே கிராமத்துப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு முதல் படித்தவன். அவனுடைய அப்பா வேல்முருகு ஒரு முருகபக்தர். புகையிலைத் தரகு அவர் தொழில். கல்யாணயாணமாகி பல வருடங்களாகியும் பிள்ளைகிடைக்காததால் பல முருகன் கோயில்களுக்கு பிரதட்டனைக் காவடி எடுத்தவர் வேல்முருகு. யாரோ ஒரு சன்னியாசியின் ஆலோசனைப்படி கதிர்காமத்துக்குப் பாதையாத்திரை செய்து வந்ததின் பயன் தான் மூன்றாம் மாதமே மனைவி கருத்தரித்தாள். ஜெயபாலசுப்பிரமணியன் என்று தனது குலம் தளைக்கப் பிறந்த ஒரே பிள்ளைக்குப் பெயர் வைத்தார் வேல் முருகு. பிறந்த போது சுப்பிரமணியன் கொழு கொழுவென்று கை நிறைந்த குழந்தை. ஆனால் அவன் பார்வையிலோ எதையோ இழந்துவிட்டவன் போன்று ஒரு ஏக்கம். பிறந்து அடுத்தநாளே பெருவிரலைச் சூப்பத் தொடங்கினான். தாய்ப் பால் குறைவாக்கும் அது தான் அவன் கை சூப்புகிறான் என்றாள் வேல்முருகுவின தாயார். “அதில்லை அவன் வயறு நிறம்ப, உவள் பால் கொடுக்கிறாள் இல்லை” என்று குறைப்பட்டாள் வேல்முருகுவின் மாமியார். வளர்ந்ததும் உந்தப் பழக்கம் வளர்ந்ததும் சரியாகிவிடும் என்றனர் அனுபவத்தை வைத்துச் சில கிழவிகள்.
சுப்பிரமணி குழந்தை சுபாவம் கொண்டவன். வீட்டில் பல வருடங்களுக்குப் பிறகு பிறந்த ஒரே பிள்ளையென்பதால் அவனுக்கு செல்லம் அதிகம். வயது பதினாறு அூகியும்; அவன் தாய்க்கருகில் தான் படுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பான். அதுவும் தாயின் பழைய சேலை ஒன்றை கன்னத்தில் ஒத்தனம் கொடுத்தபடி கை சூப்பியபடி தூங்குவான். ஒரு நாளாவது தூங்கும் போது அந்த மிருதுவான பருத்திச் சேலை இல்லாமல் தூக்கம் அவனுக்கு வராது. சில சமயம் கட்டிலோடு சீறு நீh கூட கழித்துப்போடுவான். பாவம் தாய் காந்திமதி. எல்லாவற்றையும் மகனுக்காக பொறுத்துக்கொள்வாள்.
சுப்பிரமணிக்கு சிறுவயது முதற்கொண்டே இடது கை பெருவிரல் சூப்பும் பழக்கம் இருந்தது. சிறுவயதில் அதை நிறுத்த தாய் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாள். அவன் கேட்கவில்லை.
“என்னடா ராசா விரல் சூப்புவதை எப்ப நிறுத்தப் போறாய். ஸ்கூலிலை உன்னை பகிடி பண்ணமாட்டினமே என்றுச் சொல்லிப் பார்த்தாள் காந்திமதி. அவன் கேட்டபாடாக இல்லை. பெருவிரலுக்குத் துணி சுத்திப் பார்த்தாள் காந்திமதி. ஆதுவும் சரிவரவில்லை. வேப்பெண்ணையை பூசிப்பாhத்தாள்;. அது மாற்றாக அமையவில்லை. ஊரில் மகனைப்பற்றி விசாரித்தவர்கள் முதலில் “என்ன காந்திமதி சுப்பிரமணி கைசூப்புவதை விட்டிட்டானே. வழக்கத்திலை பிள்ளையள் ஏழு எட்டு வயதுக்கு மேலே கைசூப்புவதை விட்டிடுங்கள். உவன் வயது பதினாறு ஆகியும் விடாமல் சுப்பிறான். அவன்டை பல்லுக் கூட மிதந்து கொண்டு வருகுது போல கிடக்கு” வக்கனை சொல்வது காந்திமதிக்கு எரிச்சலைக் கொடுத்தது. காந்திமதிதான் என்ன செய்வாள்? பாவம் இருப்பதோ ஒரே பிள்ளை. அதுவும் தவம் இருந்து பெற்ற பிள்ளை. உள்; நாட்டு வைத்தியரிடம் கொண்டு போய்க் காட்டினாள். அவர் உதுக்கு மருந்து கிடையாது. அவனாகவே பலர் பகிடி பண்ணத் தொடங்க விட்டுவிடுவான் என்றார். பல் மிதக்கவும் கூடும் இந்த பழக்கத்தை விடு என்று அவனுக்கு அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். வற்புறுத்தி ஒன்றும் மாற்றமுடியாது. அவனாகவே உணர்ந்து விட வேண்டும்” என்றார் வைத்தியர்.
காந்திமதிக்கு தனது மகனுககு வருங்காலத்தில கலியாணம் பேசும் போது அவனது மிதந்த முன் இரண்டு பற்களைப் பார்த்துவிட்டு மாப்பிளளை மம்பட்டி பல்லன் எனக்கு வேண்டாம் என்று சம்மதிக்காமல் போய் விடுவர்களோ என்ற கவலை ஒரு பக்கம். வேல் முருகுவுக்கு அதைப் பற்றிச் சொன்ன போது “உதுக்கேன் இப்ப கவலைப்படுகிறாய். அதுக்கு இன்னும காலம் இருக்கு. காலம் வரும் போது பல் வைத்தியரிடம் காட்டி திருத்திப் போடலாம். நீ அவன்டை விரல்சூப்பும் பழக்கத்தை மாற்றப்பார். அவனுக்கு இருக்கிற சொத்துக்காக பெண்கள் தானாகவே அவனை முடிக்க வருவினம். நாங்கள் என்ன அவையளிடம் சீதனமே கேட்கப் போகிறோம்”: என்பார்.
வகுப்பில் எப்பவும் சூப்பி எனக்குப் பக்கத்தில் தான் அமருவான். விரல் சூப்பும் போது தனது காதின் தோடு போடும் மிருதுவான பகுதியை நெருடியவண்ணம் இருப்பான். பாவம் என்று நானும் பொறுத்துக் கொள்வேன். “ஏண்டா உனக்கு பயித்தியமா?. அவனது விரல் சூப்பும் பழக்கத்துக்கு துணைபோகிறாயா”? என்று என் நண்பர்கள் என்னைத் திட்டுவார்கள். இது அவனுக்கு தாலாட்டுவது போல ஒரு நிலையை உருவாக்கிக் கொடுக்கிறது போலும். ஒரு நாள் எனது காதை வருடியபடியே விரலை சூப்பிய படி வகுப்பில தூங்கிவிட்டான் சுப்பிரமணி. நான் என்ன செய்வது என்று தெரியாது திகைத்தேன். அதுவும் தமிழ் வாத்தி தம்பிப்பிள்ளையரின் வகுப்பு. அவரோ கண்டிப்பான பேர்வழி.
“சுப்பிரமணியின் தலையிலை ஓங்கி ஒருகுட்டு வைத்து அவனை எழுப்படா” என்று எனக்கு கட்டளையிட்டார் தம்பிப்பிள்ளையர். நான் மெதுவாக அவனது விரல்களை எனது காதில் இருந்து எடுத்து அவனை நித்திரையில் இருந்து உசுப்பினேன். அவனோ ஏதோ கனவு கண்டவன் மாதிரி உளறிக் கொண்டு வாயில் இருந்து வழிந்த வீணியைத் துடைத்தவாறே எழும்பினாhன். அன்று அவனையும் என்னையும் வகுப்பில் இருந்து வெளியேற்றிவிட்டார் ஆசிரியர்.
வகுப்பில் இப்படித் தூங்கினாலும் பரீட்சையில் நல்ல புள்ளிகள் வாங்கினான் சுப்பிரமணி. அதுவும் கணக்கில் நூற்றுக்கு நூறு புள்ளிகள். ஆதனால் அவன் வகுப்பில் தூங்கினாலும் கணக்கு வாத்தியார் ஒன்றும் சொல்வதில்லை. எப்படி அவனுக்கு அப்படி தலை முட்டிய மூளை என்பது எல்லோருக்கும் புரியாத புதிராக இருந்தது. எந்தக் கடினமான கணக்கையும் விரல் சூப்பிய படி சிந்தித்து மற்றவர்களுக்கு முன்னர் விரைவில் விடை கண்டு விடுவான். அவனது மூளை துரிதமாக வேலை செய்வதற்கு விரல் சூப்பும் பழக்கம் துணைபோகிறதோ என்னவோ. புhடசாலையில் படித்த மாணவிகள் கூட அவனிடம் இருந்து ஒதுங்கியே போனார்கள. ஒன்று அவனது வாயில் அடிக்கடி வழிந்த வாய் நீர் காரணமாக இருக்கலாம். அடுத்தது அவனது மிதந்த பற்கள். சுப்பிரமணி அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவனுக்கு நான் மாத்திரமே நண்பனாக இருந்தேன். அதனால் அவனது தாயார் அவனைப்பற்றி என்னிடம் விசாரித்து அறிவாள். தன் மகன் படிப்பில் கெட்டிக்காரன் அதுவும் கணக்கில் விண்ணன் என்றறிந்ததும் அவளுக்கு அதை விட வேறு சந்தோஷமில்லை. சூப்பி அதிகம் பேசமாட்டான். அடிக்கடி எதூவது சிந்தனையில் ஒரு மூலையில் அமர்ந்தபடி விரல் சூப்புவான்.
“ஏண்டா ராசா உன்ரை நண்பர்களோடை போய்; வெளியிலை விளையாடன்” என்று தாய் வற்புறுத்தினாலும் போகமாட்டான். எங்கே அவர்கள் தன்னைக் கேலிசெய்து ஒதுக்கிவைத்துவிடுவார்களோ என்ற காழ்ப்புணர்ச்சி. உயர்தர வகுப்புப் பரீட்சையில நான்கு பாடங்களிலும் நல்ல புள்ளிகள் அவனுக்குக் கிடைத்து கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு பட்டப்படிப்புக்;கு இடம் கிடைத்தும் அவன் போக மறுத்துவிட்டான். அதற்கு முக்கிய காரணம் எங்கே தாயை விட்டு பிரியவேண்டுமே என்ற கவலை. எனது ஆலோசனையின் பேரில் இங்கிலாந்து கணக்காளர் பரீட்சையான ஐ.சி.எம்.ஏ எழுதி ஐந்து பகுதிகளிலும் மூன்று வருடங்களுக்குள் திறமையாக அவன் சித்தி பெற்றது ஊரில் எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருபத்தி மூன்று வயதாகியும் களவாக விரல் சூப்பும் சுப்பிரமணிக்குள் இவ்வளவு திறமையிருக்கிறதா. “இவன் ஏன் பட்டப் படிப்பு படித்து உயர் அரச பதவி நாடிப் போகவில்லை? அதற்கெல்லாம் காரணம் காந்திமதியும் வேல்முருகுவும் தான். அவர்களுக்கு எங்கே மகன் தங்களைவிட்டு தூரத்துக்குப் போய்த் தனியாகச் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுவானோ என்ற பயம்;” என்று ஊர் பேசிக் கொண்டது. சுப்பிரணியின பிடிவாதக்குணமும் தாய்க்கு அருகே தான் எப்போதும் இருக்க வேண்டும் என்ற நிலையும் அவர்களுக்கு தெரியவா போகுது
ஒருபடியாக வேல்முருகு பாராளுமன்ற உறுப்பினரைப் பிடித்து, பணம் செலவு செய்து ஊருக்குள் உள்ள கூட்டுறவு ஸ்தாபனத்தில மகனுக்கு உதவிக் கணக்குப்பிள்ளை வேலை எடுத்துக்கொடுத்தார். எம் பி யின் ஆள் என்றபடியால் அலுவலகத்தில் அவனுக்கு அவ்வளவுக்கு கட்டுப்பாடு இருக்கவில்லை. அவனது பிரச்சனை உயர் அதிகாரிக்கு தெரிந்தபடியால் எம்.பியின் கட்டளைப்படி அவனுக்கு வேலை செய்ய ஒரு சிறு அறை ஒழுங்கு செய்து கொடுத்தார். அது அவனுக்கு தான் நினைத்த நேரம் யாரும் கவனியாதவாறு விரல் சூப்ப வசதியாக இருந்தது. சுப்பிரமணியன் நினைத்த நேரம் விரல் சூப்பினாலும் வேலையை மட்டும் சரிவரச் செய்து வந்ததால் அவனை உயர் அதிகாரிகளுக்கு அவனைப் பிடித்துக்கொண்டது. கணக்கில் உள்ள சில பிழைகளை கண்டுபிடித்துக் காட்டி தன் திறமையை வெளிக்காட்டினான்.
ஒரு நாள் சூப்பி எப்படி புது வேலையில் இருக்கிறான் என்று பார்க்க அவனது அலுவலகத்துக்குப் போனேன். அவனின் அறைக்குள் என்னைப் போக பியோன் விடவில்லை. “ஐயா ஏதோ பிசியாய் இருக்கிறாரார்” என்று என்னைத் தடுத்து நிறுத்திவிட்டான். நான் பக்கத்தில இருந்த போனில் சுப்பிரமணிக்கு நான் வந்திருப்பதாக அறிவித்ததும் உள்ளே போக அனுமதி கிடைத்தது.
“என்னடா சூப்பி. வேலை எப்படி போகுது. உனக்குத் தனி அறை கூட தந்திருக்கினம். இனி உன்பாடு குசால்தான”“ என்றேன். அவன் ஒன்றும் பேசாது இருந்தான்.
“என்னடா உனக்கு வேலை பிடிக்கவிலலையா?. நல்ல சம்பளம் கிடைக்குமே?” என்றேன்.
பதிலுக்கு அவன் “எனக்கு வீடு தான் பிடிக்கும். அம்மாவை பின்னேரம் மட்டும் பார்க்க முடியாது.” என்றான் அலுப்போடு.
“போகப் போகக் கலியாணம் முடித்ததும் எல்லாம் உனக்குச் சரியாகிலிடும். ஓன்றுக்கும் நீ யோசியாதே” என்று அவனுக்கு ஆறுதல் சொன்னேன். இந்தத் தாய்ப் பாசமும் விரல் சூப்பும் பழக்கமும் இவனை எங்கே கொண்டு போய் விடுமோ என்ற யோசித்தவாறு வெளியேறினேன்..
******
ஒரு நாள் சூப்பியின் தாய்காந்தமதியை சந்தித்த போது கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தாள்.
“ என்ன மாமி இப்படி இருக்கிறியள் ஏதும் மகனாலை பிரச்சனையா”? நான் கேட்டேன்.
“அதில்லை தம்பி. அவனது மதிந்த பல்லும் விரல் சூப்பும் பழக்கமும் அவனது திருமணத்துக்கு தடையாக இருக்கிறது. யாரும் பெண் கொடுக்க வரமாட்டினியமாம். இரணடொரு இடத்தில் அவனைப் பார்த்துவிட்டு எதோ சாக்கு பொக்குச் சொல்லிவிட்டினம். பிறகு தான தெரியவந்தது பெண் இவனை வேண்டாம் எண்டிட்டாள் எண்டு. நாங்கள் இரண்டு பேரும் கண்மூட முன் நல்ல ஒருத்தி கையிலை பிடித்துக்கொடுத்திட்டால் எஙகளுக்கு நிம்மதி” என்றாள் காந்திமதி.
எனக்கு என் தூரத்து சொந்தக்காரியான நிர்மலாவி;ன் நினைவுதான வந்தது. அவளும் சிறுவயதில விரல் சூப்பயவள் தான். அதனாலோ என்னவோ பற்கள் சற்று ஓழுங்கான வரிசையாக இல்லை. அவளை அழகி என்று கூறமுடியாவிட்டாலும். அமைதியானவள். வீணாகச் சண்டை சச்சரவுக்கு போகாதவள். தானும் தன்பாடும் என்று இருப்பாள். பாவம் நிர்மலா. லண்டன் மாப்பிளளை ஒருவனை ஒழுங்கு செய்து கடைசி நேரத்தில் அவன் இவளின் படததை பாhத்துவிட்டு முடியாது என்று மறுத்துவிட்டான். சூப்பியைப் போல் அவளுக்கும் நாலைந்து இடத்தில் திருமணம் பேசி வந்தும் சரிவரவில்லை. ஏன் அவள் சூப்பிக்கு பொருத்தமானவளாக இருக்கக் கூடாது என்று நினைத்தேன். நான் சொன்னால் அவளது பெற்றோர்கள் மறுக்கமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். என் மேல் நிரமலாவுக்குச் சகோதர பாசம் வேறு.
நான் எடுத்து முயற்சி வீணாகவில்லை. இரண்டு மாதங்களில சுப்பிரமணியன் நிர்மலா கழுத்தில் தாலியைக்கட்டினான். திருமணம் ஆடம்பரம் இன்றி சில பேர் முன்னிலையில இரகசியமாக கோயிலில் நடந்தேறியது. தாய் காந்திமதி நான் செய்த உதவிக்காக என் கைகளை பிடித்து கண்ணீர் விட்டபடி “ தம்பி நீ செய்த இந்த உதவியை நான் ஒருநாளும் மறக்கமாட்டன். ஏங்கே என் மகனுக்கு குடும்ப வாழக்கை இல்லாமல் போய் விடுமோ என்று நானும் அவரும் கவலை பட்டனாங்கள். இனியாவது அவன் திருந்துவானா பார்ப்போம்” என்றாள்.
திருமணம் நடந்து முடிந்து மூன்றாம் நாள் சுப்பிரமணியின் தாயை நான சந்தித்தபோது அவள் என்னைக கண்டவுடன விம்மி விம்மி அழத்தொடங்கினாhள்.
“ என்ன மாமி ஏன அழுகிறீhகள. என்ன நடந்தது”?, நான் அவளைக் கேட்டேன்.
“அதையேன் தம்பி கேக்கிறாய். உவன் சுப்பிரமணி முதல் இரவண்டே மனைவியோடை படுக்காமல் எங்கடை அறைக்குள் வந்து முந்திபோல எண்டை கட்டிலிலை படுத்திட்டான். நானும் அவரும் எவ்வளவு மன்றாடி கேட்டும் அவன் அசையவில்லை. மனுசிக்கு முன்னாலையும் வெட்கமில்லாமல குழந்தை பிள்ளை போல் விரல் சூப்பிகிறான். பாவம் பெடிச்சி. அதையெல்லாம் என்னிடம் வந்து குறைபடவில்லை. முகத்தையும் நீட்டிக் கொண்டிருக்கவில்லை. அவனோ அவளோடு கதை குறைவு. கேட்டதுக்கு மாத்திரம் ஒரு சில வார்த்தைகளில் பதில் சொல்லுகிறான். அவன் போக்கு எனக்கு பிடிக்கவில்லை”இ காந்திமதி மகனைப் பற்றி குறைப்பட்டாள்.
“ஒன்றும் யோசியாதையுங்கோ மாமி. போகப் போக எல்லாம் சரி வரும். நிர்மலா ஒரு நல்ல பொறுமையுள்ள பெண். அவளும் பத்து வயுது மட்டும் விரல சூப்பினவள் தான். தாயோடை தான் அவள் பெரியபிளiளாயாகும் மட்டும் படுத்தவள். காலப் போக்கில் மாறிவிட்டாள். அவளுக்கத் தெரியும் எப்படி உங்கடை மகனை தன் வழிக்கு கொண்டு வருவது என்று”, நான் சொன்னேன்.
“ அப்படியா. ஏதும் பிரச்சனையால இரண்டு பெரும் பிரிந்து வாழாமல் இருந்தால் சரி.”
காந்திமதி யோடு கதைத்துவிட்டு திரும்பிய நான் போது சாய்மானக் கதிரையில் சுப்பிரமணி புத்தகம் ஒன்றை வாசத்தபடி விரல் சூப்பிக்கொண்டிருந்ததைக் கண்டேன்;. எனக்கு அவனை பார்க்க எரிச்சலாக வந்தது.
“ என்னடா சுப்பிரமணி நீ இப்போ புது மாப்பிள்ளை என்றதை மறந்திட்டியா. நீ இன்னும் குழந்தை பிள்ளை என்ற நினைவா உனக்கு. உதையேல்லாம் மறந்திடு. உன்னைக் கவனிக்க நல்ல மனைவி ஒருத்தி கிடைத்திருக்கிறாள் என்று சந்தோஷப்படு;. அவள் மனம் நோகாமல் நடக்கப்பார்”, என்றேன்.
“ அவரை ஒன்றும் சொல்லாதையுங்கோ. நானும் முந்தி உப்படிதான் பதினாறு வயது மட்டும் இருந்தனான் என்று உங்களுக்கு தெரியுமே. அப்போது ஒரு நாள் எனது சினேகிதியின் அண்ணர் தனக்கு தெரிந்த இரண்டு விரல் சூப்;பிய ஒருவருக்கு விரலில கட்டி வந்து பரிசோதித்து பார்த்தபோது கன்சர் என்று விரலை எடுக்க வேண்டி வந்ததாம் என்று சொன்னார். சினேகிதியன் அண்ணர்; ஒரு வைத்தியர். எனக்கும் அப்படி நடக்கலாம் என்ற பயத்தில அன்றிலிருந்து விரல் சூப்புவதை விட்டனான்” என்றாள் நிர்மலா.
அவளது கதையில் உண்மையில்லை எனபதும் கணவனை மாற்றவே கனசர் கதையை சொல்லுகிறாள் என்று எனக்கு விளங்கியது. அவள் சொல்வதைக் கேட்டு வாசித்த புத்தகத்தை கீழே போட்டுவிட்டு விரலை வாயில் இருந்து எடுத்து விட்டு என்னைப் பார்த்தான் சுப்பிரமணி. இவள் கதை உண்மையா எனபது போலிருந்து அவனது பார்வை.
“ என்னடா பார்க்கிறாய் சுப்பிரமணி. அவள் சொன்னத உண்மைதான். எனக்குத் தெரிந்த இரண்டு பேருக்கு உதே மாதரி நடந்திருக்கு . அதில் ஒருவனுக்கு கன்சர் பரவி வலது கையில் மூன்று விரல்களையும எடுத்திட்hர்கள். இரண்டு விரல்களை ஓரே சமையம் வாயுக்குள் வைத்து சூப்பியதால் அவனது விரலுக்கு இரத்த ஓட்டம் குறைந்த காரணத்தால் அப்படி நடந்தது என்று சில கற்பனையும் கலந்து, நிர்மலா சொன்ன கதையை பெரிதாக்கி சுப்பிரமணிக்குச் சொன்னேன். ஒரு நல்லகாரியம் நடப்பதற்காக பொய் சொல்வதில் குற்றமில்லை என்றது என் மனது.
“ இந்தாருங்கோ மணி. இந்த கோப்பியை குடியுங்கோ என்று தான் கொண்டுவந்த கோப்பியை கணவனிடம் கொடுத்தான நிர்மலா. தூன் சூப்பிய விரலலை விறைதபடி பார்த்துக்குகொணடடிருந்து சுப்பிரமணி அவளிடம் இருந்து கோப்பியை வாங்கினான். அவனுக்கு கிடைத்த புது பெயர் “மணி”. தூரத்தில் கோயில் மணி ஓசை கேட்டது. இனி ஒருவரும் அவனை “சூப்பி” என்று பலர் கூப்பிடும் விதத்தில அவன் நடக்கமாட்டான் எனற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.
“சரி மணியான நிர்மலா எனக்கு நேரமாச்சு நான் வாறன்” என்று சிலேடையாக சொல்லிவிட்டு அவர்களிடம் இருந்து விடை பெற்றேன்.
******
இரண்டு வருடங்களுக்கு மேல் எப்படி உருண்டோடியது என்றே எனக்கே தெரியவில்லை. துபாயுக்கு ஓரு வேலை கிடைத்து போய் இரண்டு வருடத்துக்கு பின்னர் ஊர் திரும்பிய எனக்கு ஒரு பெரிய அதிர்;ச்சி காத்திருந்தது. முருகன் கோயில் வாசலில் சுப்பரமணயையும், நிர்மலாவையும் ஒரு கொழு கொழுவென்ற கன்னங்களும் , உருண்டையான விழஜகளும், வாழைப்பழம் போன்ற விரல்களோடு ஒரு குழந்தையnhடு பார்த்தபோது எனக்கு மனதுக்குள் ஒரே சநதோஷம். குழந்தை தனது விரலை பொககை வாயுககுள வைத்து சத்தம் போட்டு சுப்பிக் கொண்டிருந்தது.
“ குழந்தைக்கு எத்தனை மாதம் நிர்மலா?” என்றேன்.
அவள் பதில் அளிக்கமுன் சுப்பிரமணி முந்திவிட்டான். கார்த்தகேயனுக்கு இப்பொ நான்கு மாதம். இவன் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் அது தான் அந்தப் பெயர் வைத்தோம். ஆனால் இந்த விரல் சூப்புவதை மட்டும் பிறந்த நாளில் இருந்து இவன் விடுகிறதாக இல்லை என்றான் சுப்பிரமணி.
எனக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் சிரிப்புத்தான வந்தது. “ அதெல்லாம் அவன் கலியாணம் முடித்து உனக்கு கிடைத்த மாதரி நல்லமனைவி கிடைத்தும் சரியாகிவிடுவான். நீ ஒன்றக்கும் யோசிக்காதே. இதோ குழந்தைக்கு எனது பரிசு” என்று இரண்டு ஆயரம் ரூபாய் நோட்டுகளை குழந்தையினுடைய கையுக்குள் திணித்தேன். விரல் சூப்புவதை விட்டு விட்டு நோட்டை இறுகப்பற்றிக் கொண்டான் கார்த்திகேயன்.
நான் சிரித்தபடி “ என்ன சொன்னாலும் கணக்காளன் மணியின் மகனல்லவா. மணியின்pன்; அருமை இப்பவே இவனுக்கு தெரிகிறது போல என்றேன் சிலேடையாக.
இருவரும் வாய்விட்டு சிரித்தபோது என் மனதுக்குள் நிறைவான பூரிப்பு ஏற்பட்டது. நிர்மலா குழநதை திரும்பவும் வரல் சூப்புவதைத் தடுக்க ஒரு சூப்பியை வாயுக்குள் திணித்தாள். எனக்கு ஒரு காலத்தில் சூப்பியாக இருந்த மணியின் நினைவுதான வந்தது
******