தனிமை

முகவுரை.
(தனிமை காதலுக்கு வித்திடுகிறது. தனிமையைப் போக்க விதவை கூட சாதி, இனம் வயது, பாராது காதலிக்கலாம்.; அக்காதல் ஒரு பிராமணப் பெண்;ணின் காதலாகில் ஏற்றுக் கொள்ளச்; சமுதாயம் தயங்குகிறது )

கனடா ஒன்றாரியோ மாகாணத்தில், பீல் பகுதியில் உள்ள மிசிசாகா நகரத்தில்>அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட பத்துமாடி அப்பார்ட்மென்ட் கட்டிடம் அது. அதில்; பிரதான வீதியை நோக்கியிருக்கும் 9ஆம் மாடியில் உள்ள ஒரு படுக்கையறை கொண்ட அப்பார்ட்மென்ட்டில் தனிமையில் விதவையாக வாழ்ந்து வந்தாள் மங்கையர்க்கரசி அம்மாள். “மங்கையம்மா”வை அவள் வாழும்; கட்டிடத்தில் மட்டுமல்ல பக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்டுகளில் வாழும் தமிழ்க் குடும்பங்களில் தெரியாதவர்கள் இல்லை. அதற்கு முக்கிய காரணம் மங்கை அம்மாவின் சுவை மிக்க மல்லிகைப் பூ இட்டலி
, மெது தோசை, வடை, உப்புமா போன்றவற்றோடு சேர்த்துக்கொள்ளும் சட்டினியும் ஆகும். சமையல் அவளது பொழுது போக்கு மட்டுமல்ல அவளது தனிமையை ஓரளவுக்குப் போக்கும் ஒரு தொழிலும் கூட. எல்லோருடைய ஓடர்களையும் அவள் ஏற்றுக் கொள்வது கிடையாது. பிராமண வீட்டுச் சாப்பாடு என்றால் அதுக்கு ஒரு தனி ருசி என நினைத்து வாங்குபவர்கள் பலர். இருந்தாலும் மங்கைஅம்மாள் தன்னால் முடிந்தளவு சிலருக்குத்தான் பலகாரம் செய்து கொடுப்பாள்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில், தனது பெயருக்கேற்ப அரசி போன்ற வாழ்க்கை வாழ்ந்தவள் மங்கை. அவளது பெயருடன் அம்மாளும் சேர்ந்தபடியால்> யாழ்குடாநாட்டில் உயர் குலமாகக் கருதப்பட்ட பிராமணக் குலத்தைச் சேர்ந்தவள் என்பது, அவள் பெயரில் இருந்தே சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருநெல்வேலி சிவன் கோயிலின் பிரதம குருக்களான சுவாமிநாதக் குருக்களின் சிரேஷ்ட புத்திரி என்ற கௌரவம் வேறு அவளுக்கு. இரு சகோதரிகளுடன் பிறந்தவள் அவள். அரசாங்கத்தில் கணக்காளராக இருந்த சொந்த அத்தை மகன் சுப்பிரமணிய ஐயரை காதலித்து திருமணம் செய்தவள். சுப்பிரமணியும் மங்கையும் குழந்தைப்பிராயத்தில் எல்லாச் சிறுவர்களும் விளையாடுவது போன்று அம்மா அப்பா விளையாட்டு விளையாடியபோது, தங்களுக்குள் காதல் மலரும், வருங்காலத்தில் தம்பதிகளாகுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சுப்பிரமணி படித்திருந்தாலும் திருவிழாக்கள், பிற விஷேட தினங்கள் வரும் போது கோவில் பூஜையில், மாமனுக்கு பக்கத்தில் நின்று தேவையான உதவிகள் செய்து, அவரது நல்மதிப்புக்கு பாத்திரமானான். அதுவே அவருக்கு மருமகனாகவும் உதவியது.

தனது தந்தையின் பூர்வீகத்தைப் பற்றி ஒரு காலத்தில் பெருமையாகப் பேசியவள் மங்கை. தென்னிந்தியாவில் உள்ள இராமேஸ்வரக் கோவிலின் பிரதம குருக்கள் பரம்பரையின் வழி வந்தவர் தன் தந்தை என்பது அவளது விளக்கம். அதனால் அதிகமாக ஆச்சாரமான வாழ்க்கை வாழ்ந்தவள். மற்றைய இரு சகோதரிகளும் நல்ல இடத்தில் திருமணம் செய்தாலும் கணவன்மார் கொழும்பில் வேலை செய்தபடியால். அவர்கள் தங்கள் நான்கு பிள்ளைகளுடன் சுவாமிநாத குருக்களின் நாற்சார் வீட்டிலேயே வாழ்ந்;தார்கள். பத்துப் பரப்புக் காணியில் அமைந்த, பூர்வீகத்தை ஞாபகப்படுத்தும் ஆறு அறைகளைக் கொண்ட பழைய ஓட்டு வீடு. மூன்று குடும்பங்களும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததினால் குழந்தைகள், பெரியவர்கள் என அந்தப் பெரிய வீடு எப்பொழுதும் நிறைந்திருக்கும். கலகலப்புக்குப் பஞ்சமில்லை!

மங்கைக்கு திருமணமாகி பத்து வருடங்களாகியும் குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம் அவளது சகோதரிகளின் நான்கு பிள்ளைகளும் மங்கைப் பெரியம்மா மேல் வைத்திருந்த அளவுக்கு மீறிய பாசம் தான். காலையில் பள்ளிக்கூடம் போவது முதல்> இரவு படுக்கைக்கு போவது வரை மங்கைதான் அவர்களுக்கு வேண்டியதைக் கவனித்தாள். அவளது தங்கைமார் இருவரும் கல்லூரி ஒன்றில் ஆசிரியைகளாகவேலை செய்த படியால் வீட்டுப் பொறுப்பை மங்கைமேல் போட்டுவிட்டார்கள். தாயின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டை நடத்தும் முழுப் பொறுப்பும் மங்கை மேல் விழுந்தது. பகல் நேரம் முழுதும் வீட்டு வேலை. மாலையில் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதும் அவள் பொறுப்பு. இரவு நேரத்தில் மட்டும் தான் கணவனுடன் பேசும் சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைக்கும். அதுவும் அதிக நேரம் அவனோடு பேசி உறவாட முன்னரே களைப்பு அவளைக் கண்ணயரச்செய்து விடும். அதிகாலையில் எழுந்து குளித்து, கோலம் போட்டு, பால் கறந்து, காலை உணவு தயாரிப்பது என்று அவள் கடமை தொடர்ந்து கொண்டே போகும். ஓய்வில்லாமல் மெசினைப்போல் வேலை செய்த அவளுக்குத் தனிமை என்பது என்ன வென்று தெரியவில்லை. தந்தையும் கணவனும் சகோதரி குடும்பத்தினரும் அவள் மேல் வைத்திருந்த அன்பும் மரியாதையும் அவளுக்கு வேலைப்பளு என்றால் என்னவென்று தெரியாமல் வாழச்செய்துவிட்டது. தான் இல்லாவிட்டால் இந்த வீடு இயங்காது என்ற நினைவில் வாழ்ந்தாள், உண்மையும் அது தான். நேரம் போவது தெரியாது வாழ்க்கை நடத்தினாள் மங்கையம்மாள். வீடடில் இருந்தவர்களுக்கு மட்டுமல்ல அவளது இனத்தவர்களுக்கும் அவளது சேவை தேவைப்பட்டது. சுப்பிரமணிக்கும் மங்கைக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பைக் கண்டு சுவாமிநாதக் குருக்கள் பூரிப்படைந்தார். தன் சகோதரியின் மகன் தனது மகள் மேல் காட்டும் பாசத்தைப் பற்றி பலருடன் பெருமையாக பேசிக் கொள்வார். ஆனால் அவர் மனதுக்குள் மட்டும் சுப்பிரமணி மங்கையம்மாள் தம்பதிகளுக்கு இன்னமும் பிள்ளைப் பாக்கியம் இலலையே என்ற மனக் குறை அவரை அணுஅணுவாகச் சிதைத்தது. ஒரு நாள் மதிய பூஜை முடித்துவிட்டு வீடு திரும்பிய சுவாமிநாதர் தலைசுத்துது தண்ணீர் கொஞ்சம் தா என்று மங்கையிடம் கேட்டு வாங்கி குடித்துவிட்டு கதிரையில் சாய்ந்தவர் தான்> பிறகு கண்ணைத் திறக்கவேயில்லை.

தனது மகிழ்ச்சியான வாழ்க்கையில் தந்தையின் மறைவினால் அப்படி திடீரென்று மாற்றம் ஏற்படும் என்று மங்கை எதிர்பார்க்கவில்லை. சுவாமிநாதரின் மறைவு சுப்பிரமணியையும் பாதித்துவிட்டது. ஊரில் இருக்க அவனுக்கு பிடிக்கவில்லை. யுத்த நிலையும் அவனுடைய முடிவுக்கு துணைபோயிற்று. சுப்பிரமணி, தனது நண்பன் ஒருவனுடைய உதவியுடன் அரைமனதான மங்கையோடு கனடாவுக்கு புலம் பெயர்ந்தான். சகோதரிகளையும் அவர்களது பிள்ளைகளையும் விட்டு பிரிந்து கனடா போவதற்கு மங்கைக்கு விருப்பமில்லை. ஆனால் கணவனையும் பிரிந்து வாழவும் மனம் இடம் கொடுக்கவில்லை.

“அக்கா நீயும் அத்தானும் கனடாவுக்கு போனால்தான் எங்களையும் ஸ்பொன்சர் செய்து அழைக்கலாம்” என்று சகோதரிகள் அவளுக்குப் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

*****

தினமும் வேலை செய்த களைப்பில் ஜன்னல் ஓரமாகப் போய் அமர்ந்தபடி வீதியில் போவோர் வருவோரையும், வாகனங்களையும் பார்த்தபடியே இருப்பது மங்கையின் பொழுதுபோக்கு. ஏதோ மனிதர்களைப் பார்த்தாவது தனிமையில் இருந்து விடுபட முயற்சி செய்தாள். அதுவும் பிள்ளைகளுடன் குடும்பமாகப் போவோரைக் கண்டதும் அவளுக்கு ஊரில் வாழ்ந்த கலகலப்பான வாழ்க்கை நினைவுக்கு வந்துவிடும். அவளையறியாமலே கண்களில் நீர் வந்து முட்டிக்கொள்ளும். தொடர்ந்து அவளிடம் இருந்து பெருமூச்சுக்கள். ஹால் சுவரில் மாலையுடன் மாட்டப்பட்டிருக்கும் கணவனின் படத்தை பார்த்து திரும்பவும் பெருமூச்சுக்களோடு கண்ணீரும் வெளியாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் வாகன விபத்தொன்றில் சுப்பிரமணியின் உயிர் பிரிந்தபோது மங்கை தனிமரமானாள். அவர் இருக்கும் போது நான் வாழ்ந்த வாழ்க்கை வேறு> இப்போது நான் வாழும் தனிமையான வாழக்கை வேறு. ஓவ்வொரு நாள் இரவும் இருவரும் உணவருந்திவிட்டு உலாவி விட்டு வந்து பின்னர் ஒன்றாக இருந்;து தமிழ்ச்; சினிமாப்படங்கள் பார்த்து, கருத்துக்களைப் பரிமாறி, வாய்விட்டுச் சிரித்த நினைவுகள் அவள் மனதை விட்டுப் போகாமல் தேங்கி நின்றது. குழந்தை ஒன்று தனக்கு இருந்திருந்தால் தன் நிலமை வேறு. தனக்கு பிள்ளையில்லாத குறையினை அவளது தனிமை அப்பொழுது தான் அவளுக்கு உணரவைத்தது. தீடிரென தனக்குச் சுகயீனம் வந்தால் உதவிக்கு ஒருவரும் இல்லையே என நினைத்த போது அவள் மனதில் ஒருவித பீதி உருவாகிற்று.

தான் வசிக்கும் அப்பார்ட்மென்ட் கட்டிடத்தில் ஐந்தாம் மாடியில் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு தனித்து வசித்த ஒரு வெள்ளைக்கார வயோதிபப் பெண் திடீரென்று மரணத்தை தழுவியது யாருக்கும் தெரியாது. இரு நாட்களுக்குப் பின்னர் அந்த மாடியில் வீசிய துர்நாற்றம், கட்டிட சுப்பிரீண்டன்டனை அப்பார்ட்மென்ட் கதவை உடைத்து உள்ளே செல்ல வைத்தது. அந்த சம்பவம் மேலும் மங்கைக்கு பயத்தைக் கொடுத்தது. எவருடனும் தொலைபேசியில் தேவையில்லாமல் பேசமாட்டாள். நண்பர்கள் என்று சொல்லுமளவுக்கு எவரும் அவளுக்கு இல்லை. உணவு தயாரித்து கொடுப்பவர்களுடன் கூட அளவோடுதான் பேசுவாள் அதனால் அவர்களும் இவளுடன் அவ்வளவாகப் பேசுவது கிடையாது. வாசலில் வைத்தே பணத்தை வாங்கிக்கொண்டு உணவைக் கொடுத்து அனுப்பிவிடுவாள்.

மங்கை ஆசாரம் பார்ப்பவள். அதுவும் சாதி, மதம் என்ற கோட்பாட்டிற்குள் ஊரில் வாழந்தவள். அதுவும் அவளைத் தனிமைப் படுத்தியது. அந்தக் கட்டிடத்தில் உள்ள எத்தனையோ தமிழ்க் குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுக்கு தமிழும் தேவாரமும் சொல்லிக் கொடுக்கும் படி எவ்வளவோ கேட்டும் அவள் மறுத்துவிட்டாள். அதற்கு காரணம் பல சாதிமக்களை தனது வீட்டுக்குள் அனுமதிக்க அவள் விரும்பியதில்லை. தனிமை அவள் மனதில் பயத்தை உருவாக்கியது. அறுபது வயதாகி விட்டது. எந்த நேரமும் ஏதும் நடக்கலாம். எவர்கள் இருக்கிறார்கள் தனக்கு உதவிக்கு? தினமும் சிந்தித்தாள் மங்கை. ஆனால் தன் தனிமையைப் போக்க அவளுக்கு வழி தோன்றவில்லை. அப்படி அவள் திண்டாடிக் கொண்டிருக்கும் போது தான் வாரப்பத்திரிகை ஒன்றில் வந்த தனிமையை பற்றிய கட்டுரை அவள் கண்களுக்குப் பட்டது. அதில் குறிப்பிட்ட சில கருத்துக்கள் அவளை சிந்திக்க வைத்தது.

“உங்கள் தனிமையை நீங்களே உருவாக்குகிறீர்கள்! தனிமை உங்களை அணுவணுவாகச் சித்திரவதை செய்கிறது! மனதில் தேவையில்லாத பயத்தையும் கவலையையும் தோற்றுவிக்கிறது! நேரத்தை எப்படிப் போக்குவது என்று தெரியாது திகைப்பீர்கள்! பல காலம் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாது தம்பதிகளாக வாழ்ந்து பின்னர் கணவனையோ அல்லது மனைவியையோ இழந்தால் நீங்கள் செய்வது அறியாது கலங்;குகிறீர்கள்! தனிமை படிப்படியாக உங்களைத் தழுவிக் கொள்கிறது! இதற்கு பரிகாரம் காண பல வழிகள் உண்டு. ஒன்று தன்னம்பிக்கை> இரண்டாவது தினமும் தியானம் செய்வது> மூன்றாவது நேரத்தைப் புத்தகங்கள் வாசிப்பதிலும் எழுத்துத்துறையிலும் தம்மை ஈடுபடுத்துவது> நான்காவது பலருடன் மனம் விட்டுப் பேசி நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்வது போன்ற வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் மனக் கவலைகளை நீக்குவதோடு தனிமைக்கும் இடமில்லாது செய்து விடலாம்” என விரிவாகப் பல விடயங்கள் அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

மங்கை திரும்;பத்திரும்ப அக்கட்டுரையை வாசித்தாள். அதில் எழுதப்பட்டவை தனக்கே பொருந்துவது போல் உணர்ந்தாள். நல்ல ஒரு நட்பைத் தேடுவது என தீர்மானித்தாள். தனது கொள்கையையும் மாற்றிக் கொள்வது என முடிவு செய்தாள். அந்த நிமிடத்தில் தான் புதிதாய்ப் பிறந்தது போல் உணர்ந்தாள்.

******

அவள் வாழ்ந்த கட்டடத்தின் ஹாலில் ஒவ்வொரு கிழமையும் தியான வகுப்புகள் நடப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஒருநாளாவது அவ்வகுப்புகளுக்குச் செல்ல அவள் விரும்புவதில்லை. ஆனால் அன்று நடந்த வகுப்பிற்கு மங்கை அம்மாள் சமுகந்தந்திருந்தது அங்கு வந்திருந்தோருக்கு அதிசயமாக இருந்தது. ஒரு ஓரமாக இருந்தவள் பலரின் கவனத்தை ஈர்ந்தாள். அவள் முகத்தில் ஒரு அமைதியின்மையும் தெளிவில்லாத நிலையும் பொதிந்து கிடப்பதை தியானம் நடத்துபவர் உணர்ந்து கொண்டார். ஒவ்வொருவருடைய பிரச்சனைகளையும் கேட்டறிந்தார். சிலருக்குத் தேகநலப்பாதிப்பு, ஒரு சிலருக்கு தாம் செய்யும் தொழிலில் பிரச்சனை, பலருக்கு குடும்ப பிரச்சனையால் கணவன் மனைவிக்குள் பிரிவு. கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் கூட அங்கிருந்தனர். மங்கையின் முறை வந்தவுடன் அவர் பேசத்தொடங்க முன்பே அவள் விம்மி விம்மி அழுதே விட்டாள். தியான வகுப்பு நடத்தும் ஆன்மீகவாதி ஒருவர் அவளை வற்புறுத்திக் கேள்விகளைக் கேட்டகவில்லை. ஆனால் அவளை உற்று நோக்கிவிட்டு ஒரு கேள்விமட்டுமே கேட்டார்.

“அம்மா நீங்கள் யாருடன் வந்தீர்கள்?”; அமைதியாக ஸ்வாமி கேட்டார்.

“தனியாகவே வந்தேன் ஸ்வாமி;”, அடக்கமான குரலில் மங்கை பதில் சொன்னாள்.
அவள் நெற்றியில் குங்குமம் இல்லை! கழுத்தில் தாலிக்கொடியோ வேறு நகையோ இல்லை! நேற்றியில் மெல்லிய கோடாய் இடப்பட்ட திருநீறு மட்டுமே பிரகாசித்தது. வெள்ளை பருத்திச் சேலை உடுத்தியிருந்தாள். பார்த்தாலே அவள் ஒரு விதவை என்பதும்> பிராமணர் குலத்தைச்; சேர்ந்தவள் என்பதையும் கணிக்க ஸ்வாமிக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவளது மனதை அவரது எண்ண அலைகள் தொட்டு, அலசி ஆராய்ந்து விட்டு வந்தது

“அம்மா! உங்களுக்குப் பிரச்சனை தனிமை தானே? நான் சொல்வது சரியா?”
ஆம்! என்று தலையாட்டினாள் மங்கை.

“உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா அம்மா?” என்று அவளது ஆழ்மனதை ஸ்வாமி கொஞ்சம் அசைத்துப் பார்த்தபோது, மங்கையம்மாள் திரும்பவும் அழத்தொடங்கினாள்.

“என்னைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கு ஸ்வாமி? நான் இப்போ யாருமில்லாத ஒரு தனி மரம்” என்றாள் மங்கையம்மாள் கண்களை தன் சேலை முந்தானையால் துடைத்தவாறே.

“சரி… சரி… அமைதியை நாடி நல்ல இடத்துக்குத்தான் அம்மா வந்திருக்கிறீர்கள்…” என்று தொடங்கி அவருக்கே உரிய பாணியல் கனிவான சொல்கோர்த்து மங்கையம்மாவிடம் ஸ்வாமி பேசத் தொடங்கினார்.

“உங்களைப் போன்றவர்களுக்குத் தன்னம்பிக்கை கட்டாயம் தேவை அம்மா. பாசத்திலிருந்து விடுபடுங்கள் அம்மா! இந்த உலகத்திற்கு நாம் வரும்போது எதுவுமே எங்களுடன் வந்தது இல்லை! அதே போலத்தான் நாங்கள் இந்தப்பூவுலகை விட்டு போகும் போதும் எம்முடன் கூட வருவது நாம் செய்த பாவங்களும் புண்ணியங்களுமே தவிர பொன்னோ. பொருளோ அல்லது உறவுகளோ இல்லை. இவற்றைப் புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுங்கள். தனிமையைப் போக்குவதற்கும் மனம் தெளிவு கொள்வதற்கும் தியானமும் ஒரு சிறந்த வழி. எப்போதும் உங்கள் கணவரின் இழப்பையும். கடந்தகால வாழ்க்கையைப் பற்றியும் சிந்தித்து கொண்டே இருக்காதீர்கள். சென்றது சென்றதாகவே இருக்கட்டும். நடப்பதை பற்றிச் சிந்தியுங்கள்.” என்று தியான வகுப்பு நடத்தும் ஸ்வாமி பேசிக்;கொண்டே போகப் போக மங்கையம்மாளின் உள்ளம் தெளிவு கொள்வது போல் ஒரு மாற்றம் அவள் முகத்தில்; தோன்றியது.

தனது வார்த்தைகளில் உள்ள உண்மைத் தன்மைகளை மங்கையம்மாளின் உள்ளம் உள்வாங்கிக் கொள்வதை உணர்ந்த அவர்,
“அம்மா!.. உங்;களைப் போல் பலர் இவ்வுலகில் வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதைப் பற்றி சிந்தியுங்கள். உங்களுக்காக வாழாமல் பிறருக்காக வாழுங்கள். பழைய சாதி, சமய, மூட நம்பிக்கைக் கோட்பாடுகளில் இருந்து சற்று விலகி வாழுங்கள். வாசிப்பது மூலம் அறியாமையைப் போக்கி, அறிவை விருத்தி செய்யுங்கள். மனதில் பட்டதை எழுதுங்கள். உங்களுக்குள் தனிமையால் துவண்டு கிடக்கும் சக்தியை தியானத்தின் மூலம் உசிப்பி விடுங்கள். இது ஒரு மந்திரமோ தந்திரமோ அல்ல. ஒரு சில நாட்களில் பெறும் பயனுமல்ல. தொடர்;ந்து தவறாது தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் அமைதியையும் மாற்றத்தையும் காண்பீர்கள். கவலைகள் போய்விடும். எல்லோருடனும் சாதி, மதம் பாராது இனிமையாக பேசப் பழகுங்கள். தனிமை ஓடி மறைந்துவிடும்” என்று புன்சிரிப்போடு ஒரு சிறு அறிவுரையை எடுத்து சொன்னார் தியான வகுப்பு நடத்தும் ஆன்மீகவாதி.;
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த மங்கை அம்மாளுக்குத் தான் பத்திரிகையில் வாசித்ததும் இவர் சொல்வதும் பொருத்தமாக இருந்தது.
“நிட்சயம் நான் ஒவ்வொரு தியான வகுப்பிற்கும் வருவேன் ஸ்வாமி.. என்னைப் படிப்படியாக மாற்றிக் கொள்கிறேன்” என்றாள் மங்கை.

*****

மாதங்கள் மூன்று உருண்டோடியது. மங்கை தவறாது தியான வகுப்புகளுக்குப் போய் வந்தாள். அவள் முகத்தில் பயம் மறைந்தது. பிரகாசம் தோன்றியது. ஒரு வித சந்தோஷம் தெரிந்தது. அவளுக்குள் துவண்டு கிடந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியது. சந்தோஷத்தின்;, மெய்யறிவின் எல்லையைக் காண தனது பயணத்தை ஆரம்பித்தாள். வந்திருப்பவர்களிடம் சிரித்துப் பேசினாள். தான் ஒரு உயர் குலப் பெண் என்பதை படிப்படியாக மறந்தாள். கவிதைகள் இயற்றினாள். அவளுக்குள் மறைந்திருந்த திறமை படிப்படியாக வெளிவரத் தொடங்கியது. தியான வகுப்பில் அவள் பாடும் தேவாரங்களில் ஒரு இனிமை தொனித்தது. தியானத்தின் மூலம் மங்கை புதுமனுசியானாள்.

மாதங்கள் பல சென்றன. இயற்கையோடு உறவாடி தன் தனிமையை நீக்க நினைத்தாள் மங்கையம்மாள். வீட்டுக்கு அருகேயள்ள பூங்காவைத் தழுவியபடி ஒரு நீரோடைக்கு மேல் ஒரு சிறிய பாலம். அந்த பாலத்தின் மேல் நின்றபடி தினமும் நீந்தி தனிமையை போக்கியபடி செல்லும் வாத்துக்களும்> அதன் குஞ்சுகளும் அவளைக் கவர்ந்;தது. அவளோடு சேர்ந்து கனேடிய வெள்ளையின முதியவர் ஒருவரும் வாத்துக்களை இரசித்தபடி நின்றபதை அவள் கவனித்தாள். முதியவருக்கும். தன்னைப்போல் பாலத்தில் நின்ற பெண்ணுக்கும் பறவைகள் மீது ஆசை உள்ளது போல் தோன்றியது.

“ அம்மா என்ன நீங்கள் வாத்துகளோடு தனிமையைப் போக்க உறவாடுகிறீர்கள் போல் எனக்குத் தெரிகிறது” என்றார் ஆங்கிலத்தில புனனகையோடு அம்முதியவர்

“ ஆம் வாத்துக்கள் சுதந்திரமாய் தன் குஞ்சுகளளோடு நீந்துவதை பார்த்து இரசிக்கிறேன். தினமும் அவைக்கு உணவு கொண்டுவருவேன். அந்த புதிருக்கள் முயல்கள் குட்டிகளோடு ஓடி விளையாடுவதையும் பார்த்திருக்கிறேன்” என்று மங்கை பதில் அளித்தாள்; ஆங்கிலத்தில். கனடா வந்தபின் அவள் ஆங்கிலத்தில் பேசக் கற்றுக்கோண்டாள்.

“ அப்படியா? எனது பெயர் ஜோன். நான் ஓரு இளப்பாறிய பொலீஸ்காரன். சோந்தத்தில் இரண்டு அறைகள் கொண்ட வீடு உண்டு. பிள்ளைகள் இல்லை. என் மனைவி பல வருடங்களுக்கு முன் புற்று நோயால் இறந்துவிட்டாள். என் சொந்தக்காரர்கள் என்னை கவனிப்பதில்லை. தனிமையாக வாழ்கிறேன்”, என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அவ்வெள்ளைக்கார முதியவர்”.

“ என் பெயர்; மங்கைஅம்மாள். மங்கை என்று என்னை கூப்பிடுவார்கள்” என்று பதிலுக்கு தன்னை அறிமுகப்படுத்தினாள் மங்கை. ஜோனின் அமைதியான பேச்சும்> சிரித்த முகமும் அவளுக்கு மிகவும் பிடித்துக்கொண்டது.

சுருக்கமான அறிமுகத்தோடு ஆரம்பித்த அவர்கள் இருவரும்,; தினமும் பாலத்தில சந்தித்து உறவாடத் தொடங்கினார்கள். மங்கையம்மாள் தான் ஒரு பிராமணப் பெண் என்பதையும், கட்டுப்பாடுகளொடும். தமிழ் கலாச்சாரத்தோடும் வாழ்ந்தவள் என்பதையும், இப்போது கணவனை இழந்து தனிமையாக வாழ்வதை ஜோனுக்கு எடுத்துச் சொன்னாள்.

“ஏன் நீர் உமது தனிமையைப் போக்க என்வீட்டுக்கு வரலாமே. நான் நன்றாக சமைப்பேன். பியானோ கூட வாசிப்பேன்”.

சற்று சிந்தித்துவிட்டு ஜோனின்’ அழைப்பினை மங்கையம்மாள் ஏற்றுக்கொண்டாள். தனது தோட்டத்து அப்பில் ஒன்றை அவளுக்கு ஜோன் கொடுத்தார். அவளும்; தான் சுட்ட வடையைக் ஜோனுக்கு கொடுத்தாள்”.

வடையைப் பார்த்த ஜோன் “இதன்ன கனேடியன் பேகல் போலிருக்கிறதே” என்றார்.

“ ஆமாம் இது தமிழர்களுடைய பேகல்” என்றாள் மங்கை சிரித்தபடி.
வடை> அப்பில் பரிமாற்றத் தோடு ஆரம்பித்து> அவர்களது உறவு படிப்படியாக வளர்ந்தது. தான் கனடாவுக்கு வந்தபின்னரே இ.எஸ்.எல் (ESL) வகுப்புக்குப் போய்; ஆங்கிலம் கற்றதாக அவள் ஜோனுக்கு சொன்னாள். தான ஒரு பிராமணத்தி என்றும் அதனால் பழமைவாதியாக வளந்ததாகவும் சொன்னாள்.

“பரவாயில்லை நல்லாகத்தான் ஆங்கிலம் பேசுகிறீர். எனக்கு நீர் தமிழ் சொல்லித் தாரும்”. நான் ஓரு கத்ததொலிக்கன்> முன்பு அடிக்கடி சேர்ச்சுக்போவேன். ஆனால் என் மனைவி இறந்தபின் சேர்ச்சுக்குப் போவதை நிறுத்திவிட்டேன்” என்றார் ஜோன்.

பலர் அவர்களது உறவைப்பற்றிப் பல விதமாகப் பேசிக்கொண்டார்கள்.
“இதென்ன விதவை பிராமணப் தமிழ் பெண்ணுக்கு வெள்ளைக்காரனோடு காதல் வேறா. இதுக்கே கனடாவுக்கு வந்தவ?” என்று வதந்தி பேசியவர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.
“நான் தனிமையாக இருக்கும் போது என்னை கவனிக்காதவர்களுக்கு இப்போது அப்படி என்மேல் அச்கரை”> மங்கை சிலரிடம் சொல்லி முறைப்பட்டாள். மங்கையம்மாளும் ஜோனும்> தங்கள் உறவைப்பற்றி வந்த விமர்சனங்களைக் கவனத்தில் எடுக்கவில்லை.
மங்கை தான் வாழ்ந்த அப்பாரட்மெணட்டில் வசித்த தமிழ் குடும்பங்களின் தனக்கும் ஜோனுக்குமிடையேலான நட்பைப் பற்றிய விமர்சனங்களையும்> வதந்திகளையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“இந்த வயதிலும் இந்த பிராமண விதவைக்குக் காதலா? அதுவும் ஒரு வெள்ளைக் காரனோடு” என்று பல குடும்பங்கள் பேசிக்கொண்டார்கள். மங்கையிடம் ஓடருக்கு உணவு வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கூட வருவதை நிறுத்திக்கொண்டார்கள். தன்னிலையை ஜோனுக்குச் சொல்லி மங்கை வருந்தினாள்.

“நீர் ஏன் இதற்கு யோசிக்கிறீர். உமது இன மக்கள் எமது நட்பைப் பற்றி இழிவாகப் பேசினால் பேசி விட்டுப் போகட்டும்;. அவர்களை நம்பியா வாழ்கிறீர்? உமக்கு அப்படி அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை பிடிக்காவிட்டால் என் வீட்டில் வந்து வாழலாம். ஒரு தனி அறைவேறு இருக்கு. எங்கள் இருவரதும் தனிமை போக அதுவே சரியான வழி. என்ன சொல்லுகிறீர்“ ? ஜோன் மங்கையைக் கேட்டார்.

மங்கைக்கு அது சரியான வழியாகப் பட்டது. மறுக்காமல் ஜோனின் வேண்டுகோளை மங்கை ஏற்றுக்கொண்டாள்.

ஜோனும்> மங்கையும் ஜோன் வீட்டில் புது வாழ்வை> தனித்தனி அறைகளில் ஆரம்பித்தனர். ஓன்றாகவே சமைத்து உண்டார்கள். வெளியே போய் உலாவி வந்தார்கள். அவர்கள் இருவரது தனிமை படிப்படியாக மறைந்தது. கணவன் மனைவி என்ற உறவு இல்லாமல் நண்பர்ளாக ஜோனும் மங்கையும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (22-Sep-16, 3:47 am)
Tanglish : thanimai
பார்வை : 5233

மேலே