வாழ்க்கை

அறியாப் பாதையில் ஆரம்பம்
முடிவினைத் தெரியாத பயணம்
இடையில் நடைபெறும் நிகழ்வுகள்
சந்திக்கும் விந்தைமிகு மனிதர்கள் !
இடையூறாய் நடந்திடும் விபத்துகள்
விழிகளுக்கு விருந்தாகும் காட்சிகள்
விழிநீர் வரவழைக்கும் சோகங்கள்
மகிழ்ச்சியைத் தந்திடும் தருணங்கள் !
புரட்டிப் போடுகின்ற சம்பவங்கள்
வாட்டி வதைக்கின்ற வருத்தங்கள்
தென்றலாய் தீண்டிடும் வசந்தங்கள்
புதுமையாய் தோன்றிடும் செய்திகள் !
ஆனந்தத்தில் கூத்தாடும் பொழுதுகள்
முடிவுரை வாசித்திடும் வினாடிகள்
வாழ்வெனும் நூலின் அத்தியாயங்கள்
வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் !
கூறியவை யாவும் வசனங்களல்ல
கூர்ந்து கவனிக்கத் தேவையுமல்ல
வாழ்க்கைத் திரைப்பட விமர்சனமல்ல
வாழ்ந்தவரைப் பெற்ற அனுபவங்களே !
கவிதையாய் வடிப்பதல்ல வாழ்க்கை
கற்பனையில் வாழ்வதல்ல வாழ்க்கை
வையகம் வாழ்த்துமளவு வாழ்ந்திடுக
மறைந்தும் போற்றுமளவு வாழ்ந்திடுக !
சோர்ந்துப் போகாமல் வாழ்ந்திடுங்கள்
வாழ்ந்துக் காட்டிடுவோம் பாரினில் !
பழனி குமார்