ஒற்றுப்பெயர்த்தல் - பலவிகற்ப இன்னிசை வெண்பா
ஆடி வருகின்ற ஆறே அரவமாய்
நாடி யுனையும் நனிமகளும் சேர
அகத்தை அணியென ஆளும் கவியே
இகத்தின் சுருதியென ஈர்த்து .
பொருள் :- அசைந்தாடும் நதி பாம்பு போல் நெளிந்து கொண்டே செல்லும் அழகுடையது . நதி தான் வந்தடையும் இடத்திற்கேற்ப வரிசையாய் தன்னை மாற்றிக்கொள்ளும் குணமுடையது . என் பாடலுக்குச் சொந்தமான ஆறே ! இருப்பிடம் தேடி இசையோடு இழுப்பாயாக !. என்று ஒரு பொருள் பாடவும்
ஆடி மாதத்தில் தங்களின் அன்பானக் தலைவனை விட்டுப் பிரிந்து தன்னுடைய பிறந்தவீட்டில் இருக்கும் தலைவியே ! ஆற்றாமையால் மிகுதியாகப் பெருக்கெடுக்கும் கண்ணீர் மல்க , அதனைத் துடைத்து மனத்தில் ஆறுதலை ஆழமாய் அழகுற பாதிக்கும் வகையில் இவ்வுலகில் வேதங்களின் ஈர்ப்பினால் நீயும் பாடல்கள் புனையும் கவியாவாய் என்று மற்றொரு பொருள் பாடவும் ஒற்றுப் பெயர்த்தலாம் .
அருஞ்சொற்பொருள் :-
ஆடி - அசைந்து , ஆடிமாதம்
ஆறே - நதி , ஆறுதல்
அரவம் - பாம்பு , ஆற்றாமை
நாடி -- தேடி , வந்து
நனிமகள் - அழகுடைவள் , மிகுதியான
சேர - சேர்ந்து கொள்ள , துடைத்தல்
அகம் - இடம் , மனம்
அணி - அழகு , வரிசை
ஆளும் - ஆளுதல் , சென்றடைதல்
கவி - பாடல் , கவிஞன்
இகம் - இருப்பிடம் , உலகம்
சுருதி - வேதம் , இசை
ஈர்த்து - இழுத்தல் , ஈர்த்தல் .