காற்று

காற்றே ! ஏ காற்றே !
உன்னை நான் கண்டதில்லை
வேறு யாரேனும் கண்டார் உண்டோ
நான் அறிந்தேன் இல்லேன்

நீ என்னைத் தொடுகின்றாய்
உணர்கின்றேன்
உன் காணா விரல்களால்
என்னை வருடுகின்றாய்
அது என் இதயத்திற்கு
ஓர் இதம் தருகின்றது -உணர்கின்றேன்
நீ தானே அந்த தென்றல் காற்று ?


காற்றே ! ஏ காற்றே !
உன்னை நான் கண்டதில்லை
நீ தாங்கி வரும் அந்த
புது மண் வாசனையில்
பாலைக்கும் மழை தரும்
அந்த சுகந்த மண் வாசனையில்
உன்னை முகர முடிகின்றது
ஆனால் உன்னைக் காண முடியவில்லை !


காற்றே ! ஏ காற்றே !
அது என்ன
ஆயிரம் ஆயிரம்
கறு வண்டுகள்
எழுப்பும் பேய் ஓசை !
சிவந்த மண்ணும் மணலும்
விண்ணில் ஏறி விண்ணை
போர்க்களம் ஆக்கியதேனோ?
அதில் கொடி மின்னல்
வாட் போர் புரிவதேனோ ?
பெருத்த மரங்கள் வேரோடு
வீழ்வதேனோ ?
பனிக் கட்டிகள்
மழையாய்ப் பொழிவதேனோ ?
இதுதான் புயல் காற்றா ?
காற்றே ! ஏ காற்றே !
இப்போது உன்
பெரும் சீற்றத்தையும் பார்த்தேன்
உணர்ந்தேன் , கேட்டேன் !
ஆனால் உன்னை பார்க்க முடியவில்லையே !
காற்றே! ஏ காற்றே!
உன்னை நான் கண்டதில்லை
வேறு யாரேனும் கண்டார் உண்டோ
நான் அறியேன் !

பார்க்க முடியாதவை
உணரவைக்கும் இறைவன்
பார்க்க முடியாத காற்றில்
தான் இருப்பதை
தென்றலாய் ,புயலாய்
வீசி உணர்த்துகின்றானோ ?
இல்லை இவை
இயற்கையின் அரவணைப்போ
சீற்றம் என்று அறிந்தாலும்
அந்த இயற்கை
இறைவன் தானோ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Oct-16, 12:29 pm)
Tanglish : kaatru
பார்வை : 182

மேலே