ஒரு கவிதை - சந்தோஷ்

ஒரு க(வி)தை
( ஊமையின் குரல் )
---------------------
வெங்காயத்தை நறுக்கும் வேலையிலிருந்து
விஞ்ஞானத்தை ஆராயும் வேலை வரை
யாவும் கிடைக்கலாமென
கிராமத்து பட்டதாரிப் பெண்ணொருத்தி
இந்த மாநகரத்தில் அடியெடுத்து வைத்தாள்.
நேரம் ஒரு இருட்டு நாழிகை..!

இரயில் நிலையத்திலிருந்து
வெளிப்பட்ட போதே அறிந்தாள்.
சுறுசுறுப்பாக ஓடுகிறார்கள்
எதற்கு ஓடுகிறார்களென புரியவில்லை.
ஆனால் ஓடியாக வேண்டிய நிலையில்லாவிட்டாலும்
ஓடுகிறார்கள்.. பரபரக்கிறார்கள்.

மாநகரப் பேருந்துகள் யாவும்
கர்ப்பிணி பெண்ணின் பிரசவ வலியினைப் போல
அலறி துடித்து ஹாரனில் அதற்றுகிறது.
ம்ம்ம் எந்திர கர்ப்பபை
எத்தனை மனிதப் பிண்டங்களை சுமக்கிறது .
பாவம்.. தான்... !

சுடிதாரும் துப்பட்டாவும் போடுமளவு
இவளும் இந்தகால நவயுவதி தான்.
இருந்தாலும் உடல் ஒட்டா உடையில்
நவநாகரிகம் கொஞ்சம் குறைந்துதான் போனது..!
பாரதி கண்ட புதுமைப் பெண்களை கண்டதில்
பெரு உவகை கொண்டவளுக்கு...
கொஞ்சம் திகட்டவும் செய்தது....

”ஆமாம்.. பாரதி எதில் புதுமை வேண்டுமென்றானோ..
ஆடையிலா.. ? இல்லை ஆளுமையில்தான்..!”
தன்னுள் விடைக் கண்டும் கொள்கிறாள்.
ஆகட்டும்.. விவாதத்திற்குரியது அல்ல
ஆடைக் குறைப்பு...
ஆடவர் மனநிலை உத்தமமாகவே இருக்கட்டுமென

ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள
மென் பொருள் நிறுவனத்திற்கு செல்ல
ஒரு வாடகை ஊர்தி அமர்த்தியவள்...
பின்னொருநாளில்....
ஆடைகளின்றி சதை பசியெடுக்கும் ஆடவர்களுக்கு
வாடகைக்கு(ம்) விடப்படுகிறாள்....
இந்த மாநகரம்
பெண் விடுதலையை எந்த அர்த்தத்தில்
எந்த மூடுமந்திரமாக
தன்னுள் ஒளித்திருக்கிறதோ...?
தாயே பராசக்தி.. நீதான் ஆராய வேண்டும்..!

**
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (13-Oct-16, 2:36 pm)
பார்வை : 97

மேலே