நினைப்பவனும் வந்திடுவான்
நங்கையவள் முகத்தில்
-- சோகத்தின் நிழலெதற்கு !
மங்கையின் மதிமுகத்தில்
-- கவலையும் தெரிவதெற்கு !
மயக்கிடும் விழிகளில்தான்
-- தடைமீறிய தாபம்தானோ !
தயக்கமேன் சொல்லிடுவாய்
-- விரக்தியும் குறையுமன்றோ !
தனித்திங்கே நிற்பதுவும்
--தணியாத ஏக்கத்திலா !
அலங்கரித்தக் கோலமும்
--அடங்காத ஆசையிலா !
நிலவொளி நேரத்திலும்
-- ஒளிரும் கதிரொளியே !
நிலைக்கொள்ள வைத்திடு
--நிலையிலா மனதையும் !
கொடியிடைக் கோமகளே
--வடிவழகில் வானவில்லே !
இடிந்திட்ட இதயத்தால்நீ
--வடித்திடாதே வருத்தத்தை !
நினைப்பவனும் வந்திடுவான்
--நின்மனதை நிறைத்திடுவான் !
உனதுள்ளம் விரும்பியபடி
--உரைத்திடுவான் மகிழும்படி !
பழனி குமார்