போர்க்களத்தில் ஒரு பூவிதயம்

போர்க்களத்தில் ஒரு பூவிதயம்....

உள்ளத்தால் இரு உயிர்களில்
சங்கமித்த காதல்...
உணர்வுகளை தொட்டு
ஒரு உயிராக கலந்து
காதல் வானில் இறக்கையின்றி
பறந்திட வைத்தது....

அநாதரவான ஆண்மை அவனுக்கும்
அனைத்துமாகி நின்றாள் பெண்மை..
அன்பென்ற சொல்லையே அறியாது
வளர்ந்தவனை தன் காதல் கொண்டு
கருவாக நெஞ்சுக்குள் சுமந்தாள்...

கடமை அவனை அழைக்க
விதியின் விளையாட்டை அறியாது
ஆயுதமேந்தி விடைபெற்றுச்சென்றான்
இவனும்....
நாட்டின் எல்லையில் இராணுவவீரன்
இவனும் தோட்டாக்களோடு
தினம் தினம் யுத்தம் செய்ய...
வீட்டின் எல்லையில் பெண்மை இவளும்
விழிகளில் வழியும் கண்ணீரோடு
யுத்தம் புரிந்துகொண்டு இருந்தாள்...

இரு வருடங்களாகியும் சென்றவன்
திரும்பவில்லை....
அவன் நினைவுகளும் நெஞ்சை விட்டு
நீங்கவில்லை....
விடியலின் கனவில் தோளோடு சுற்றிய
கொடியோடு இவளை மார்போடு
இறுக்கி அணைக்கிறான் இவனும்...
இதுவரை காத்திருந்த உள்ளம்...
இனியும் பிரிவினை தாங்காது...
எல்லை நோக்கி சென்றது இதயம்
வடித்த உதிரத்தோடு.....

இராணுவமுகாமில் தன் விழிகளை அவளும்
வழியெங்கும் உலாவவிட்டாள்...
அவன் விழிகளிற்கு பதில்
அவள் கரங்களில் கிடைத்தது
அவன் தன் உதிரத்தால் நிரப்பிய
இறுதிக்கடிதம்....

நெஞ்சில் தோட்டா பாய்ந்து
என்றோ அவனும் இறைவனடி சேர்ந்துவிட்டான்...
தன் இதயத்தை மட்டும் தன்னவளுக்காய்
குருதி வழிய விட்டுச்சென்றுவிட்டான்...
என் இதயத்தில் என்றும் நீ என உரைத்தவன்
மரணத்தின் பின்னும் அதை அவளுக்காய்
விட்டே உயிரின்றி அவனும்
விண்ணுலகம் சென்றுவிட்டான்....

கரத்தில் அவன் பூவிதயத்தோடு
போர்க்களத்தில் பூ இவளும்
பனிப்பொழிவின் நடுவில் உறைந்து நின்றாள்...
மண்ணில் மண்டியிட்டு விண்ணை நோக்கி
விழிகள் பார்க்க கண்ணீர் மழை பொழிந்தாள்...
வார்த்தைகள் அங்கு ஊமையாக
பேசாத காதலிற்காய் பேதை இவளும்
ஊமையாகி துடித்தாள்....
இதயம் கொடுத்தவன் மீண்டும்
உயிர்த்தெழுவானா என்ற ஏக்கத்தோடு....?

இது சர்பானின் எண்ணத்தில் உதித்த கவிதை.....

எழுதியவர் : அன்புடன் சகி (22-Oct-16, 9:35 pm)
பார்வை : 501

மேலே