சிறிதும் பெரிதுமாய்

சிறிதம் பெரிதுமாய்
வாழ்வின் கணங்களில்
ஒளி சுரந்து ஊற்றுகிறது
பகலின் இழைகள்.

தீ முளைத்து விரிகிறது
உயிர்த்தலின் இமைகள்.

வாசத்தின் அடர்த்தியில்
அறிவின் திசுக்களில்
படைப்பின் சிசுக்கள்.

நகரும் காலத்திரையில்
மௌனம் புதைய
புரளும் துடுப்பாகிறது
இரவில் விரியும் கனவுகள்.

பயணிக்கையில்...
சிலுவையின் முடிச்சாய்
சிறகின் திசைகள்.

வழிதோறும்...
வாழ்வின் வளர்சிதையாய்
கணத்தில் நிகழ்கிறது
நிகழ்வின் கண்ணீர் சுமக்கும்
வானவில் அதிர்வுகள்.

தொடுவான் நிழலாகிறது
நினைவின் நெகிழ்ச்சிகள்.

இரவின் பிம்பக்கிணற்றிலோ
பரிதியின் ஒளிவிரல்.

புரியாது கழிகிறது
பழங்கதை நாட்கள்.

இரவின் செதில்களாய் நீள்கிறது
தொலைந்த நாட்களும்
தொலையாத பொழுதுகளும்.

இந்தக் கணத்தின்
நிகழ் கணப் பொழுதில்,,,
மின்மினிச் சிறகாய்
காலப் பறவையின் கனவுகள்.

புன்னகைத்து மறைய
விகசிக்கிறது வாழ்வின் கணங்கள்

விடியலின் பனித்துளி மலரில்
சிறிதும் பெரிதுமாய்.

எழுதியவர் : rameshalam (26-Oct-16, 6:33 pm)
பார்வை : 80

மேலே