பராசக்தி விளக்கம்
கவிஞர் விவேக்பாரதி :
ஆற்றைப்போல் பொங்கியெழும் அவளருளா லேகவிதை
மாற்றுக் கருந்துண்டோ மண்மேலே சொல்லண்ணா
கவிஞர் சுந்தரராஜன் :
காற்றினிலே தவழ்ந்தென்றம் காதோராம் கவிசொல்லிப்
போற்றுதலை நமக்களித்துப் போய்வருவாள் தினம்தம்பி!
(இது போல் முறையே, முதலிரண்டடி என் கேள்வியாக அதற்குப் பின்னிரண்டடி பதிலாக அமைந்து வருகிறது)
அவளேதான் நம்மைதின மாட்டுவிப்பாள் என்றறிந்தும்
தவழநிதம் அழவிட்டுத் தவிக்கவிடல் ஏனண்ணா ??
துவளாமல் தடைதாண்டித் துன்பியற்கை நாம்வெல்ல
அவம்மாற்றும் திறனிருந்தும் அவள்காப்பள் பொறைதம்பி
பொறையிருக்குங் காரணத்தால் போற்றுதலைக் கேட்டிடினும்
குறைகேளாச் செவிடைப்போல் குந்துவளே ஏனண்ணா ??
நிறைநிலையை தம்மக்கள் நேர்ந்திருந்து காண்பதற்கே
குறைகளையக் கூப்பிட்டும் குந்திநின்றாள் தாய்தம்பி!
குந்தியபின் நாம்கதறக் குறைகளைய வந்தவளும்
வந்தவிடர் மீண்டுசெய வைக்கின்றா ளேனண்ணா ?
முந்திடுநம் வினைத்தொடர்பு மூண்டாங்கே நிற்கையிலே
சந்தியிலே கதிரவன்போல் சற்றுமறை வாள்தம்பி
சற்றவளும் மறைந்துவிட்டால் சாமான்யன் செய்தவற்றை
மற்றவரா துடைத்தெறிவார் மண்மேலே சொல்லண்ணா !
உற்றபடி காலையிலே ஓடிவரும் கதிரவன்போல்
பெற்றவளும் மீண்டுவந்து பேணிநிற்பாள் நமைத்தம்பி
நம்மைத்தான் அவள்காப்பள் நம்பிக்கை உண்டண்ணா
அம்மையைநாம் பூஜிக்க அமைந்தவழி ஏதுரைப்பாய் ??
சிம்மத்தில் வீற்றிருக்கும் செந்தணலை நெஞ்சிருத்தி
நம்முள்ளே வணங்குதலே நற்பூசை யாம்தம்பி
பூசைக்கு நாம்கொடுக்கும் பூசனைகள் ஏதண்ணா ?
ஆசைக்கோர் மலர்தரவா ?/ஆயிரமாய்ப் பொன்தரவா ?
மாசழிக்குந் தாய்க்கேநாம் மனம்மெய்வாய் மொழியாலே
நேசமுடன் தருவதெலாம் பூசனைகள் தாம்தம்பி
வன்சொற்கள் பலசொல்லி வஞ்சம்செய் வாயாலே
என்சொன்னா லும்தாயார் ஏற்றிடுவ ளோவண்ணா ?
என்சொற்கள் என்செயலாய் ஏதுமிலை எனப்பணிய
தன்சொல்லாய் இன்சொல்லித் தாயேற்பாள் பார்தம்பி!
துதித்திடவே வழிசொன்னாய் தூயவளை எங்குகண்டு
மதிப்புடன்தாள் வணங்குவது ?? மாகாளி எங்குறைவாள் ??
மதிப்புடைய கலையுளத்தில் மழலையரில் மாதர்களில்
சுதிப்பொழிவில் சுடரசைவில் சூழ்ந்துள்ளாள் உணர்தம்பி
திக்கெட்டும் நிறைந்தாளோ ? தீக்குள்ளே இருப்பாளோ ?
மக்களுக்குள் இருந்தசையும் மந்திரமும் அவள்தானோ ?
அக்கிரமக் காரர்தம் ஆசையிலும் இருப்பவளாம்
இக்களவும் அவளில்லா இடமில்லை அறிதம்பி
கொடுமைசெய் வோருள்ளில் குடியிருப்ப தவளென்றாள்
கொடுமைதனை ஏன்செய்து கொடுக்கின்றாள் சொல்லண்ணா ?
கொடுமையிலும் நன்மையிலும் கொலுவிருக்கும் அன்னையவள்
நடுநிலையில் நிற்பவளாம் நமக்குத்தான் குணம்தம்பி
எடைபார்த்தே தராசுவிழும் எப்பக்கம் நியாயமென
நடைபார்த்து வீழாளொ நடுநிலையாள் சொல்லண்ணா:
மடைபார்த்து விடும்வெள்ளம் வருமாப்போல் வினைக்கணித
விடைபார்த்து அருள்வேகம் விடுத்திடுவாள் அவள்தம்பி
பரசக்தி விளக்கத்தைப் பகர்ந்தாயே என்னண்ணா
கரமேந்தும் சூலத்தின் காரணமு மென்னண்ணா ??
தரங்குன்றும் கீழெண்ணம் தனைக்குத்திப் பொடியாக்கும்
உரங்காட்ட மூவிலைவேல் உவந்தேற்றாள் தாய்தம்பி!
பெண்மைகுலம் வன்முறையைப் பேணுவதோ ? ஈங்கதற்கே
கண்ணனவன் தங்கையுமே காட்டுவதோ சூலத்தை ?
பெண்மையென்றும் ஆண்மையென்றும் பேதமெல்லாம் உடலத்தே!
அன்னையள் ஆன்மவொளி அவட்கேது பால்தம்பி!
மூன்றுகொங்கை வைத்தகதை மூத்தவனே நீயறிவாய்
தோன்றுமுடல் பெண்ணன்றோ தூயவள்பின் ஒளியாமோ ?
வேண்டுமெனக் கேட்டதற்கே வேடமொன்று புனைந்துவந்தாள்!
தாண்டியவள் ஒளியுணரும் தகுதிதனை வேண்டுதம்பி
அவள்மார்க்கம் ஏதுரைப்பாய் அரிமார்க்க நெறியாமோ ?
சிவமார்க்க முறையாமோ ? சிவசக்தி யார்பக்கம் ?:
நவமார்க்கம் அவள்மார்க்கம் நல்லோரின் கூட்டாக்கம்
பவமார்க்கம் துடைப்பதெலாம் பராசக்தி யவள்மார்க்கம்
புதுமார்க்கம் புகல்கின்றாய் புவனத்தின் ஈஸ்வரியின்
பொதுமார்க்கம் நாற்பேறும் பொழிந்திடுமோ ? அதுமொழிவாய்
சதுரார்த்தம் மட்டுமென்ன சக்தியவள் பாதையிலே
விதம்நூறு பேறுறலாம் விழியோரப் பார்வையிலே!
உலகத்தில் பலயிலைகள் உவந்திருக்க உமைவிரும்பி
பலகசப்பு வேப்பிலையில் படருவது மேனண்ணா ?
சலசலக்கும் வாழ்வினிலே சமைவதெலாம் துன்பமென
உளகசப்பே எனக்கதைநீ உவந்தளியென் றாள்தம்பி!
:
அமுதமெனப் பலவிருக்கக் ஆடிமாத கூழினைப்போய்த்
தமக்கிடவு மேன்சொன்னாள் தாயவளும் ? சொல்லண்ணா
நமதுவினை கூழாக்கி நலம்தருவாள் அன்னையென்று
நமதறிவில் நன்குறையும் நலம்விழைந்தே தான்தம்பி
கந்தனுக்குக் கைவேலைக் காத்யாய னிகொடுத்தாள்
இந்தநாள்நம் கவலையற இதுபோலே செய்வாளோ ?
உன்றன்நா தனில்தமிழை உமையளித்த தென்னேயோ?
என்றன்நா தமிழுமவள் இசைந்தளித்த வொன்றற்றோ!
மல்லிகையில் மகிழ்வாளே மக்களவர் துதியெல்லாம்
சொல்லுவிதம் கேட்டென்ன சொக்குவளோ சொல்லண்ணா
அல்லழிக்கும் பகலவனுக் களிக்குங்கற் பூரம்போற்
சொல்லெடுத்துப் போற்றுகின்றோம் சொல்லுமவள் தான்தம்பி!
இங்குள்ள தெல்லாமே இயங்குகின்ற அவளென்றால்
தங்குகின்ற நாம்யாரோ ? தனையறிதல் என்னவண்ணா ?
நன்கிதனைக் கேட்டறிந்தாய் நாமுமவள் துளியேயாம்
இங்கிதனை உணர்ந்தாற்பின் ஏதுமிலை கேட்பதற்கே
ஒன்றுண்டிங் கவளைநா னோருதலும் எக்காலம் ?
இன்றோடென் ஐயங்கள் இடிந்தனவே பாரண்ணா
நன்றந்தக் கணம்நோக்கி நம்சன்னல் திறந்துவைப்போம்
தென்றல்வரும் வேளையதைத் தேவியன்றி ஆரறிவார்?
(இப்படியாக அரைமணி நேரம் கழிய.....ஒரு வழியாக முடிப்பு)
ஒரிரவில் என்னிடத்தில் ஓர்வினவாய்த் தோன்றிமற்று
மோரிடத்தில் விடையாகி யொளிர்ந்தனையே தாய்சக்தி
ஆரறிவர் உன்திறத்தை ஆட்டுவிப்பாய் ஆடுகின்றோம்
பேரருளே பெருங்கருணைப் பேராறே வாழியநீ!
-சுந்தரராஜன் & விவேக்பாரதி