ராணுவ சகோதரா - என் சக உதிரா

சகோதரா!

தேசம் என்னும்
தாயின் கருவறைக்குள்
உதித்த
என் சக உதிரா...

நீ தோளில் சுமப்பது
துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அல்ல
ஒட்டுமொத்த தேசத்தையும்
அதன் நிம்மதிப் பெருமூச்சையும்...

தாயின் கருவறைக்குள்
பத்திரமாக இருப்பதைப்போல
உன் நேசத்தால் தான்
நாங்கள்
நாட்டின் வரையறைக்குள்
பத்திரமாக இருக்கிறோம்...

பனிமலையின் உச்சிமுகட்டில்
நீ மூச்சிறைப்பதால் தான்
நாங்கள்
சுதந்திரம் என்னும்
சுகந்தக்காற்றை
ஓரளவு சுவாசிக்கிறோம்....

அடர்வனக்காட்டில்
நீ வாழ்ந்து கொண்டிருப்பதால்தான்
அதர்வண வேதம் கூட
தன்னை இங்கு
வார்த்தைகளால் விவரித்துக்கொண்டிருக்கிறது....

பேதம் பாராது
நீ ஓதும்
தேசியம் என்னும் கீதம் தான்
ரிக் யசூர் சாம அதர்வணம்
அனைத்தையும் தாண்டிய
உனக்கான வேதம்...

கரடு முரடான பாதைகளில்
உன் பாதம்
நடைபோடும் போது
எழும் நாதமே
அதன் சங்கீதம்...

உன்னை இழந்து
எங்கள் வீட்டின்
விளக்காகிறாய்...

நரகாசுரன்களை
தீப்பந்தமாகி
நீ தான் அழிக்கிறாய்...
ஆனால்;
அதை தீப ஒளியேற்றி
நாங்கள் கொண்டாடுகிறோம்....

இன்று முதல்
'நாங்கள் ஏற்றும்
தீப ஓளி
உன் பாதத்தில்
பள்ளிகொள்ளட்டும்...

தேசத்தை
பாதுகாக்கும் காவலனே!
உன் பாதுகையை
தொழுது வணங்குகிறேன்....

உனக்கும் உன் குடும்பத்தார்க்கும் இதயம் கனிந்த நன்றிகள்...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : மலைமன்னன் (29-Oct-16, 1:28 am)
பார்வை : 138

மேலே