மூன்றாம் கண்
![](https://eluthu.com/images/loading.gif)
அடியெடுத்து வைத்தாலே அண்டங்கள் அதிரும்
விழித்திருந்து பார்த்தாலே விண்மீன்கள் சிதறும்
உண்மைகள் உரைக்கத்தான் உதிரங்கள் துடிக்கும்
ஊடகங்கள் கர்ஜித்தால் பொய்மைகள் அடங்கும்..!
உண்மைகள் உரைக்காத ஊடகங்கள் எல்லாம்
முள்ளிருந்தும் எழுதாத மையில்லா பேனா..!
சாவுகண்டு அஞ்சாத சரித்திர எழுத்துக்கள்
செதுக்கியவர் சிதைந்தாலும் செதுக்கிவிடும் பலபேரை..!
சிவன்நெற்றி கண்திறந்தால் சவமாகும் தீமை
இவன்நெற்றி கண்களில் ஒளிப்பதிவாகும் தீமை
கவண்நெஞ்சில் தாக்கும் அதைப்பார்க்கும் போது
சிவன்தோன்றி வருவான் சினத்துடனே நம்முள்..!
தீமைகள் பலரூபம் கொண்டிங்கு இருக்கு
ஆமைபோலே நடவாதே இரையாவாய் அதற்கு
உண்மைகள் உணர்ந்ததும் உரைத்துவிட துணிவு
உரித்தானால் நீயுமோர் ஊடகம்தான் இங்கு...!
மூன்றாம்கண் இப்போது முரண்பட்டோர் பக்கம்
முடிசூட்டினர் மக்களுக்கு முட்டாளெனும் பட்டம்..!
இவர்கூறும் உண்மைகள் அவருக்கு பொய்மை
சுவர்மீது அடித்த பந்தாக உண்மை..!
ஆபாசம் பொங்கிட ஆடைகளை குறைத்து
அரிவையின் அங்கத்தில் அகழ்வாராய்ச்சி செய்து
பார்ப்பவர் நெஞ்சின் பகுத்தறிவை கொய்து
பணம்குவிக்கும் எத்தனையோ மனமறுத்த ஊடகங்கள்..!
புகுவோம் நாமும் பகுத்தறிவு பாசறைக்குள்
வகுப்போம் வாழ்விற்கு முறையான நெறிகள்
வரையறுப்போம் புதுசட்டம் ஊடகத் துறைக்கு
அதைமீறும் ஊடகத்தை அனுப்புவோம் சிறைக்கு...!