கனவு

காலை வேளையில்
கிழக்கில் கதிரவன் உதிப்போமா?
வேண்டாமா? என்று சந்தேகிக்க
பனிமூட்டம் சூரியக்கதிரை சிறைப்பிடிக்க
தின்று கொழுத்த தோளைக் குறை
என்று அன்னை உரைக்க
நித்திரை கலைந்துவிட்டதே என்ற
ஏக்கம் எம்மனதைப் பற்றி
ஓடத்துவங்கினேன் தெப்பக்குளத்தை சுற்றி
கண்டேன்!
பாசம் பிடித்த குளத்தின் ஓரத்தை
மழைச்சாரல் பொழிய சித்தமாகும் மேகத்தை
வர்ணன் இன்றாவது மதுரைக்கு
வழிவிடுவாரா? என்ற மானுடனின் தாகத்தை
கேட்டேன்!
'சற்று அமர்வாயா' எனும் ஒலியை
உணர்ந்தேன்!
வெளியிலிருந்து வரும் சப்தமல்ல
மனசாட்சியின் கூக்குரல் என்று
சட்டென்று இரு கண்கள் விழித்தன
கனவுக்காட்சியை கண்காட்சியாக
மாற்ற தேகம் துடித்தன
ஆஹா! என்னே ஒரு அற்புத கனவு.