வரமாகும் வரண்
அழைப்பிதழ் இல்லாத
அந்தக் கோயில் கல்யாணத்துக்கு
அழைத்துப் போயிருந்தாள்
அவள் அம்மா.
இந்தக் கல்யாணத்திலாவது
அவளுக்கு வரதட்சினை இல்லா
வரனொன்று அமையக்கூடும் என்ற
அம்மாவின் ஆசை மேல்
அவளுக்கும் ஆசைதான்..
வந்திருந்த பட்டு வேட்டிகளில்
காணப்பட்ட தங்கச் சரிகைகள்
எல்லாமும் காஞ்சிப்புரங்களால்
கவரப்பட்டு ஈர்த்துச் செல்ல
இம்முறையும் தோற்றுப்போனது
அவளுடைய நூல்சேலை.
ஒரே நேரத்தில்
இரண்டு கழுத்தில் மாலையிட்ட
திருக்கல்யாணத்தில்
முருகனுக்கு மூன்றாம் தாரமாய்
ஆக மனமின்றி வெளியேறும்
அவளின் எதிர்பார்ப்புகள்
மறுபடியும் தவமிருக்கின்றன
வரமாகும் வரணுக்காய்.
*மெய்யன் நடராஜ்