கனவு நனவானது
கனவு நனவானது,
கற்பனை நிகழ்வானது,
காத்திருப்பு கனிந்தது ,
அமைதி கவ்வியது,
ஆனந்தம் பொங்கியது,
ஆர்ப்பரிப்பு மனதிலே,
ஆரவாரம் வதனம் அதிலே,
அனைத்தும் சுமூகம்,
அணைப்போ சுகம்.
களைப்பு கண்ணை கவ்வ,
அழைப்பு அதையும் மிஞ்ச,
கெஞ்சிய காலம் கடந்த காலமாய்,
அஞ்சிய நாட்கள் அரிதென ஆக,
மிஞ்சிய நாழிகை மோகத்தில் மூழ்க,
எஞ்சியது என்ன? இன்னும் நான் சொல்ல!
கண்கள் கதை கதைக்க,
கைகள் கலை நடத்த,
களவு உடன்பாட்டோடு அரங்கேற,
லகர மருவலுடன் மொழிவதும் அதனாலோ ?
நேற்றைய கனவு இன்றைய நடப்பு ,
நாளைய எதிர்பார்ப்பு, நிறைவேறும் நம்பிக்கையில் ,
வேண்டியது என்ன? இன்னும் நான் சொல்ல !
சண்டைகள் அது சகஜம்,
மோதல்கள் அது முரண்பாட்டில்,
சாடல்கள் அது சாதாரணம்- இருந்தும்
காதல் அது மிதம் மிஞ்சியே !!
நாட்டம் அது நாள் தோறும்,
வாட்டம் அது அவன் இல்லை எனில்,
காட்டம் அது அவன் புரியாமையில்,
ஊட்டம் அது அவன் அருகினில் !!
அடுக்கி கொண்டே போக,
அடுக்கடுக்காய் கதைகள் பல
துடிப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று-
எடுத்து சொல்ல, கவி இது போதுமோ ?!!!