நிர்வாண நிலங்கள்
பச்சைநிற ஆடைப் போர்த்திய பதுமையாய்
பசுமை நிறைந்திட்ட நிலங்களின் காட்சியும்
முதிர்ந்த கதிர்களைத் தாங்கி நாணத்தால்
முக்காடு அணிந்து முகங்கள் கவிழ்ந்ததாய்
விழிகளைக் குளிர்வித்த எழிலும் மறைந்து
விழிகள் குளமாகி வழிகிறதே வருத்தங்கள் !
ஆடையிலா மனிதனின் நிர்வாணக் கோலமாய்
பயிர்களே இல்லாத பாலைநிலமாய் உருமாறி
முற்றும் களைந்த முழுநிர்வாணக் காட்சியது !
உழுதிட்ட விவசாயி அழுதிடும் அவலங்களும்
வாய்க்கரிசியும் வாங்கிட இயலா நிலையாகி
காய்ந்திட்ட நிலங்கள் தேய்ந்திடும் நிலவாகுது !
மும்மாரி பொழியாத இயற்கையே காரணமா
வெள்ளம் பெருகிட்டும் தேங்கிநிற்க இடமின்றி
விதிமீறி விளைந்திட்ட களையாக கட்டிடங்கள்
இடையூறாய் தடுத்திட வீடுகளில் வீதிகளில்
நுழைந்து வெளியேறி கடல்நீரில் கலந்ததும்
நிலங்களும் நிர்வாண நிலையானது இங்கு !
பழனி குமார்