உள்ளம் எட்டிப் பார்க்கிறது

உழுதிடும் வயலில் விளைந்த நெல்மணி...
அழுதிடும் நேரத்தில் தூங்காது கண்மணி...
நழுவியே செல்லும் வாழ்க்கையை நினைத்து
பொழுது விடிந்தும் இருளில் கிடக்கிறாள்......


கரைகள் உடைத்த காட்டாற்று வெள்ளமாய்
திரைகள் விலக்கி உள்ளம் பார்க்கிறாள்...
விரைவில் கழுத்திற்கு மணமாலை வருமாயென்று
வரைந்த ஓவியத்திலே வாழ்க்கை நடத்துகிறாள்......


கூலி வேலையில் குளித்து வளர்ந்தவள்...
வாலிப மோகத்தில் விழுந்திடத் துடிக்கிறாள்...
தாலிக் கொடியோடு நாயகன் வருவானென்று
வேலித்தாண்டும் ஆடாக உள்ளந்தாவிப் பார்க்கிறாள்......


வரம்தந்த இந்த மருதநில இறைவன்
வரன் கொடுக்க மறந்து விட்டானோ?...
கரம்பிடிக்க புதுக்கைகள் தருவானோ யென்று
மரத்தின் தளிராய் மனம் துளிர்விடுகிறாள்......


கன்னியின் இதயம் தேகம்விட்டு வரநினைக்கிறாள்...
அன்னத்தை மறந்து பறக்க விளைகிறாள்...
மன்னவன் முகம் காண சிறகுவிரிக்கிறாள்...
கன்னலாய் உள்ளுக்குள்ளே கசிந்து வாழ்கிறாள்.......

எழுதியவர் : இதயம் விஜய் (3-Dec-16, 8:38 pm)
பார்வை : 582

மேலே