ஆணாதிக்க அரசியலின் ஆன்மா

மாண்டியாவில் பிறந்த - எங்கள்
பாண்டிநாட்டு தங்கமே!
மீண்டு வருவாய் என நினைத்த வேளையில்
மாண்டு போனது சரிதானோ?

தைரியத்தின் மொத்த உருவமாய்
தரணியில் வலம் வந்தாய்!
தன்னிகர் இல்லா தலைவியாய்
தமிழகத்தை ஆட்சி செய்தாய்!

ஆயிரத்தில் ஒருத்தியாய் உன்னை
அறிமுகம் செய்து கொண்டாய்!
ஆணாதிக்க அரசியலிலே
ஆன்மாவாய் அவதரித்தாய்!

அம்முவாய் வளர்ந்த நீ
அம்மாவானாய் எங்களுக்கு!
அழும் கண்களை துடைக்காமல் - இன்று
அமைதியாய் படுத்திருப்பது ஏனோ?

ஒற்றை விரல் நீட்டி
ஒய்யாரமாய் பேசும் நீ!
ஓய்வு வேண்டுமென்றோ - இன்று
ஓய்ந்து படுத்து விட்டாய்!

இனி எத்தனை யுகங்கள்
இந்த உலகம் நிலைத்தாலும்
உன் போல் வீரத் திருமகளை - இந்த
உலகு காண கூடுமோ?

சந்தியாவை அழ வைத்து
பிறந்த நீ!
இந்தியாவை அழ வைத்து
பிரிந்து போனது தகுமோ?

மண்ணுலகம் ஆண்டது போதுமென்றோ
விண்ணுலகம் ஆள சென்றாய்!
ஈரேழுலகமும் நீ ஆள
ஈசன் திருவடி சேர்ந்தாயோ?

சங்கத் தமிழ் பேசி
எங்கள் தமிழ்த்தாய் மடி சாய்ந்தவளே!
சிங்கம் போல் வலம் வந்த உனக்கு - இனி
வங்க கடலும் தாலாட்டு பாடுமம்மா!......


த.மணிகண்டன்.

எழுதியவர் : தங்கமணிகண்டன (6-Dec-16, 1:30 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 160

மேலே