கதையல்ல நிஜமே

மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களே!

நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .

ஆனால், நீங்கள் கேமராக்களை தவிர்த்து விட்டு கொஞ்சம் மனிதர்களைப் பார்த்திருந்தால் தமிழர்கள் யார் என்பதைப் புரிந்திருப்பீர்கள்.எங்கள் எதிர்கட்சித் தலைவர் அழுது வீங்கிய முகத்தோடு சகாக்கள் சூழ அஞ்சலி செலுத்தி விட்டு முதலமைச்சரின் கையைப் பற்றிக் கொண்டார்.அது வெறும் கை குலுக்கல் அல்ல; அரை நூற்றாண்டு தொப்புள் கொடி உறவு.ஆட்டுக்கறிக்கு அடித்துக் கொண்டு கோழிக்கறிக்காக கூடிக் கொள்கிற பங்காளிகளின் பாரம்பரியம்

. எத்தனை ஊர்களில் அனைத்துக் கட்சி இரங்கல் கூட்டம் நடைபெற்றது தெரியுமா?அரைக் கம்பத்தில் பறந்த திமுக கொடிகளைப் பார்த்திருந்தால் நீங்கள் ஆடிப் போயிருப்பீர்கள்.அழுகிற தொண்டனில் அவன், இவன் என்கிற பேதமே இல்லை. "அம்மா!நீங்கள் ஆளக்கூடாதென்றுதானே சொன்னேன். வாழக்கூடாதென்று சொல்லவில்லையே"என்று எங்கள் இரங்கற்பாக்கள் கூட இதிகாசத் தரத்திலிருந்தன.

உங்கள் கட்சியின் கேரளத்துகாரன் சொன்னது எங்கள் முதல்வரின் மரணம் பாஜவுக்கு நன்மையென்று. பணத்தையும் பிணத்தையும் வைத்து அரசியல் செய்யும் மனிதமற்ற நீங்கள்
எங்களை மாற்றுக் கட்சியை மதிக்கத் தெரியாத திராவிடர்கள் என்று அவமானம் செய்தீர்கள். நாடாளுமன்றத்தில் போலியாகக் கை கொடுத்து விட்டு "காங்கிரஸே இல்லாத இந்தியா "பற்றிப் பேசுகிற பச்சோந்திகள் இல்லை நாங்கள். எதிரி கூட முழுமையான வலிமையோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற புறநானூற்று வீரத்தின் எச்சங்கள். நாங்கள் முட்டினாலும்,முத்தம் கொடுத்தாலும் அது நிஜமாய்தான் இருக்கும். நாங்கள் டிஜிட்டல் இந்தியர்கள் அல்ல .உணர்வுகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள்.

ஏதோ கலவரம் நடக்கப் போவதைப் போல் துணை ராணுவத்தை இறக்கினீர்களே என்ன ஆயிற்று? தமிழகம் எப்போதும் அமைதிப் பூங்காதான். எங்கள் தலைவர்கள் யாருமே கலவரங்களால் உருவானவர்கள் அல்லர்.
உங்கள் துணை ராணுவப்படையின் பசியையும், தாகத்தையும் உணர்ந்து அவர்களுக்கு பிஸ்கெட்டும், தண்ணீரும் தந்து கொண்டிருந்தானே ஒரு இஸ்லாமியச் சகோதரன் அவனையாவது பார்த்தீர்களா? இதற்குப் பெயர்தான் 'தமிழ்நாடு மாடல்' .நாங்கள்' 56 இன்ச் மார்பு கொண்ட குஜராத்திகள்' அல்ல. இளகிய இதயம் கொண்ட திராவிடர்கள்.'திராவிடக் கட்சிகளால்தான் தமிழ்நாடு சீரழிந்து விட்டது'என்கிற தேய்ந்து போன ரிக்கார்டை இனிமேலாவது கைபர், போலன் கணவாய்களில் போட்டுக் கொளுத்துங்கள்.

அப்புறம் மோடிஜி!கண்ணீரோடும்,கவலையோடும் நின்றிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பார்த்தீர்களா? அவர்கள் பிரியாணிக்காகவோ,100 ரூபாய்க்காகவோ கிளம்பி வந்தவர்கள் அல்ல.அவர்கள் வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியைத் தொட்டு விட்ட தலைவியின் முகம் காண தவித்து ஓடி வந்தவர்கள்.அவர்களைத்தான் நீங்கள் 'இலவச முட்டாள்கள்'என்று அவமானப்படுத்தினீர்கள்.முன்யோசனை இல்லாத உங்கள் திட்டத்தால் ஒரு மாதமாக தவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்.அவர்களின் தலைவியைத்தான் நீங்கள் சந்திக்க வந்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கைப்படி எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும் உங்களவர்கள் வெறுத்து ஒதுக்குகிற அரக்கர்களின் தலைவிதான் அவர். நவம்பர் எட்டாம் தேதி அவர் நாற்காலியில் இருந்திருந்தால் இங்கு நிகழ்ந்தது வேறானதாகவே இருந்திருக்கும்.

நாங்கள் சென்டிமென்டுக்கு அடிமையாகிற முட்டாள் தமிழர்கள்தான்.ஆனால், ஆளுமையும். அன்பும் மிகுந்த தலைவர்களின் பின்னால் மட்டுமே அணிவகுப்போம்.அண்டாக்களை தூக்கி பிரியாணி திருடுகிற குண்டர்களை தலைவர்களாக அல்ல;மனிதர்களாகக் கூட மதிக்க மாட்டோம். உங்களோடு
தேசியகீதம் பாடுகிற போது மட்டுமே எங்களால் ஒன்றுபட முடியும்.எதையும் எதிர்பார்த்து இங்கு வராதீர்கள் .எங்களுக்கு பாணிபூரி கூட செய்ய வராது.

::::(((::::((((::::::((((((:(::::::::((((((((::::::::

முகநூலில் படித்தேன்...
உங்களுக்கு பகிர்ந்தேன்.!

எழுதியவர் : முகநூல் (7-Dec-16, 1:37 am)
சேர்த்தது : குமரிப்பையன்
Tanglish : kathayalla nijame
பார்வை : 462

மேலே