பூஞ்சோலை - மணமும்,கசப்பும்

பூஞ்சோலை
மணமும், கசப்பும்

மார்ச்,2011.
சென்னை.
கரும்பலகையில் கடைசி வரி எழுதிக்கொண்டு இருந்த நிலவழகன், எழுதி முடித்ததும் திரும்பி தனக்கு எதிரில் அமர்ந்து இருந்த மாணவர்களை பார்த்து கூறினார். "ஸ்டுடென்ட்ஸ், இதோட இந்த யூனிட்ல கடைசி போர்ஷனும் முடிஞ்சிருச்சு. போர்டுல இருக்குறத காப்பி பண்ணிடுங்க" என்று கூறிக்கொண்டே தனது டைமெக்ஸ் வாட்சில் நேரம் பார்த்தார். மணி மதியம் 2:00 ஆகி இருந்தது.

இந்த பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பீரியட் முடிய இன்னும் அரை மணி நேரம் உள்ளது. "நான் சீக்கிரம் முடித்துவிட்டேனோ? இன்னும் சற்று நேரம் என்ன செய்வது?" என மனதிற்குள் நினைத்து கொண்டே மாணவர்களிடம், "எல்லாரும் காப்பி பண்ணிட்டிங்களா?" என கேட்டார்.

"பண்ணியாச்சு சார்" என அவ்வகுப்பறையில் இருந்த அனைத்து மாணவ மாணவியரும் கூறிய பிறகு, நிலவழகன் மாணவர்களை பார்த்து "இன்னும் நம்ம பீரியட் முடிய அரை மணி நேரம் இருக்கு, அதுவரைக்கும் என்ன பண்ணலாம்?" என கேட்டார். மாணவர்கள் என்ன செய்வது என தெரியாமல் திரு திருவென முழித்தனர். மதிவாணன் என்னும் மாணவன் மட்டும் துணிச்சலாக "சார், எதனா பேசலாம் சார்!" என்றான்.

“என்ன பேசலாம்“என அவர்களுக்கு ஆவலோடு பதிலளித்த ஆசிரியர் நிலவழகன், ஒரு ஆசிரியர் மட்டும் அல்ல. ஒரு நல்ல கவிஞரும் கூட. விரிவுரையாளர், பேச்சாளர் இன்னும் பல முகங்கள் உள்ளவர். சில நேரங்களில் தொலைகாட்சி பட்டிமன்றங்களிலும் கூட இடம்பெறுவார்.

“எதையாவது பேசலாம் சார் “என்று இரண்டு மூன்று மாணாக்கள் சேர்ந்து பதில் அளித்தனர். தனக்கு பிடித்த ஒன்றை மாணவர்கள் கேட்கும் போது மனதில் சிறு மகிழ்ச்சி என்றாலும், மாணவர்களிடம், வீம்பிற்காகவே “நான் நிறைய பேசி விட்டேன். இனிமேல் நீங்கள் யாராவது பேசுங்கள். உங்களை பற்றி,உங்கள் குடும்பத்தை பற்றி ஏதாவது பேசுங்கள், அல்லது நீங்கள் சென்று வந்த சுற்றுலா பற்றி இல்லைனா சமீபத்துல நீங்க பாத்த சினிமா பத்தி ஏதாவது பேசுங்க” என்றார்.

மாணவர்கள் சற்று திகைத்தனர்!. ஒரு ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களை பேசு என்கிறாரா? அதுவும் சினிமாவை பற்றியா?

ஆம். நிலவழகன் மாணக்கர்களிடையே நண்பர்களை போல பழகுவர்.30 வயதே ஆன அவர் பாடம் எடுக்கும் போதும், பேசும்போதும் இடையிடையே செந்தமிழ் நாக்கில் சுரக்கும்.

பேச்சாளர் ஆயிற்றே! ஆனால் சில நேரங்களில் பேசும் போது சாதாரணமாகவும், தூய தமிழ்மொழி கலந்தும் பேசுவார். அவரது பாடம் கற்பிக்கும் அணுகுமுறையால் மாணவர்களுக்கு அவரை பிற ஆசிரியர்களை விட நன்கு பிடிக்கும். சில மாணவிகளுக்கு அவர் தூயதமிழில் வேகமாக பேசும் போது இரவு நேரங்களில்” அலைவரிசையில் பேசும் காதல் நிகழ்ச்சி வானொலி தொகுப்பாளரை நினைவுபடுத்தும். அதற்கு காரணம் அவரின் தூயத்தமிழ் பேச்சில் உள்ள கவர்ச்சியாகவும் இருக்கலாம்.
மாணவர்கள் யாரும் ஏதுவும் பேசாததால், ஆசிரியர் ”சரி, நானே பேசுகிறேன்” என்று சொல்லி பேச ஆரம்பித்தார். மாணவர்கள் அவர் பேச்சை கேட்க சற்று உன்னிப்பாக முன்வந்தனர். “நான் சில வருடங்களுக்கு முன், என் நண்பர்களோடு நேபாளத்திற்கு சுற்றுலா சென்றேன். அதை பற்றி கூறுகிறேன்” என்றார்.

கௌதம் என்ற மாணவன் “சார், அது வடக்கு பக்கம் இருக்குற ஒரு மாநிலம்தானே” என்றான். ஆசிரியர் “இல்லை இல்லை கெளதம். அது ஒரு தனிநாடு” என்றார்.

கோமதி என்ற மாணவி “சார், சுற்றி பாக்க வேற ஒரு நாட்டுக்கே போனீங்களா? பாஸ்போர்ட், ப்ளைட் டிக்கெட், விசா னு நெறைய செலவு ஆயிருக்குமே?” என வினவினாள்.

நிலவழகன் பெயருக்கேற்ற மாதிரியே அவன் முகம் நிலவின் வெண்மை போன்ற அழகுடன் மிளிர, தன் வழக்கமான அழகிய புன்சிரிப்புடன், கோமதியை பார்த்து, “வெளிநாட்டுப்பயணம் என்றாலே உங்களுக்கு பிளைட் தான் ஞாபகம் வருமா? நேபாளம் என்னதான் தனிநாடு என்றாலும் கெளதம் சொன்ன மாதிரி அது நமக்கு கொஞ்சம் பக்கதுல இருக்குற ஒரு மாநிலம் மாதிரிதான்”. “அதனால் நாங்க ட்ரைன்ல தான் போனோம்”.”இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, நமக்கு பக்கத்து நாடு நேபாளங்குறதால, அங்க போறதுக்கு விசா எடுக்க தேவையில்ல, நானும் என் பிரண்சுங்களும் சேர்ந்து நேபாளத்துகுள்ள போகும் போது ஆளுக்கு 75 ருவா கொடுத்தோம் அவ்ளோதான் . ஆனா பாஸ்போர்ட் இருக்கணும்!”.

அப்போது நன்கு படிக்கும் ஒரு மாணவன் கேட்டான் ,”என்ன சார் சொல்றீங்க, விசா வேணாமா? அதற்கு “ஆமாம், இந்தியால இருந்து போனா விசா தேவ இல்லை. அதுமட்டுமில்லை இந்தியாவை விட அங்க எலெக்ட்ரானிக் பொருள் விலை எல்லாம் ரொம்ப கம்மி”. “ஆனா எங்க கிட்ட அப்ப கொஞ்சம் பணம் தான் இருந்துச்சு, ஏனா அங்க போனப்புறம்தான் எங்களுக்கு அந்த விசயமே தெரியும். சோ மனச கட்டுபடுத்திகிட்டு இரண்டு நாள் ஊர சுத்தி பாத்துட்டு மட்டும் வந்துட்டோம்”. என்றார்.

கயல்விழி என்ற மாணவி கேட்டாள்,”சார், கடைசியா நீங்க பட்டிமன்றத்துல டி.வில பேசுறத பாத்தேன். அந்த ஷோ பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்”என்றாள். நிலவழகன் சிறிது புன்சிரிப்போடு பதிலளித்தார்.”ஆமா அது ஒரு நல்ல பட்டிமன்றம், அதுக்கு சென்னைல இருந்து நான் மட்டும் தான் தேர்வானேன். தலைப்பு வந்து குடும்பச்சுமையை அதிகம் சுமக்கிறது ஆண்களா? இல்லை பெண்களா? என்பதை பற்றியது”.என்றார்.
“சார், நானும் பாத்தேன்” என்ற மதிவாணன் தொடர்ந்து கேட்டான்.”அதில் ஆண்கள் பக்கம் பேச மூணு ஆம்பளைங்க இருந்தாங்க. பொண்ணுங்க பக்கம் பேச இரண்டு பொண்ணுங்களும், நீங்களும் இருந்தீங்களே!” என்று மதிவாணன் ஏளனமுடன் வினவ, வகுப்பில் சற்று சிரிப்பு சத்தம் கேட்டது. அதுவும் ஆண் மாணவர்கள் அமர்ந்து இருந்த பகுதியில். நிலவழகன் முகத்தில் இன்னும் அந்த சிரிப்பே இருந்தது. தன் மாணவர்களிடம் ஆசிரியரை கேள்வி கேட்கும் குணம் இருப்பதே அவருக்கு மகிழ்ச்சியளித்தது.”ஆமா ஆண் சைடு பேச ஏற்கனவே மூணு பேர் வந்துட்டாங்க, அதேநேரம் பெண் சைடு பேச ஒரு பேச்சாளர் குறஞ்சிது. அதனால அங்க போயிட்டேன்”. என்று சாதரணமாக கூறினார்.

“அது எப்டி சார் பொண்ணுங்களுக்கு ஞாயமா ஒரு ஆம்பள பட்டிமன்றத்துல பேச முடியும்?” என சிறிய கோபம் கலந்து கேள்வியை மதிவாணன் வீசினான். “இங்க தான் ஒரு பேச்சாளரின் திறமை இருக்கு. ஒரு நல்ல பேச்சாளன், பட்டிமன்றத்துல என்ன தலைப்பு கொடுத்தாலும் அத முன்னிறுத்தி பேசி,நடுவரிடம் பேர் வாங்கணும். எனக்கு ஆண்கள் பத்தி பேசதான் முதல சொன்னாங்க. அதனால நான் ஆண்கள் தலைப்புல பேச தயார் பண்ணிட்டு போனன். ஆனா வேற வழி இல்லாம பெண்கள் தலைப்பு கெடச்சுது. இருந்தாலும் அதுல நல்ல பேசி ஜட்ஜ் கிட்ட பாராட்டு வாங்குனேன்”.

“நான் பெருமைக்க சொல்லல, ஒரு சிறந்த பேச்சாளன், அவன் எதிர்பார்த்தது இல்லாமல், அவன் திட்டமிடாத ஒரு தலைப்பு வரும் போதும், அதை எப்படி பேசி அவன் மீள்கிறான், என்பதிலேதான் அவன் திறமையே இருக்கு. இது பட்டிமன்றம் மட்டும் இல்ல. நீதிமன்றம்,அரசியல், நேரலை பேட்டிகள் என அனைத்திற்கும் பொருந்தும்” என்றார்.

வனிதா என்ற மாணவி,”சார், அப்ப டி.வி ல சொன்னது சும்மாவா, பொண்ணுங்க முக்கியம் இல்லையா? பசங்கதான் முக்கியமா?என ஏக்கத்துடன் கேட்டாள். நிலவழகன் தன் புன்சிரிப்பு மறைய பதில் அளித்தார்.”அப்டி இல்ல வனிதா, அது வெறும் பட்டிமன்றம். அங்க எனக்கு என்ன தலைப்பு கெடச்சாலும், அத மையமா வச்சுதான் நான் பேசி ஆகணும், அவ்ளோதான். முதல்ல எனக்கு ஆண்கள்னு தலைப்பு கொடுத்தாங்க,நான் அதுக்கு தயார் பண்ணிட்டு போனேன், அப்புறம் பெண்கள்னு தலைப்பு கொடுத்தாங்க, சோ அத பத்தி பேசுனேன். இதுல ஆணா பெண்ணாங்குறது முக்கியம் இல்ல, பேச்சாளரின் பேச்சுத்திறமைதான் முக்கியம்”. என்றார்.

மறுபடியும் மதிவாணன் குறுக்கிட்டான்,”சார், இப்ப சொல்லுங்க இந்த உலகத்துல பொண்ணுங்க அதிகமா உழைக்கிறாங்களா? இல்ல பசங்க அதிகமா உழைக்கிறாங்களானு?என்றான்.அதற்கு நிலவழகன் ”என்ன கேட்டால் என் மனசுல இருக்குறத சொல்றேன்”என்று கூறி சற்று இடைவெளிவிட்டு “பொண்ணுங்கதான்” என்றார். உடனே மாணவிகள் கைதட்டல்களோடு கரகோசம் எழுப்பினர். “எப்டி சொல்றிங்க” என மூன்று நான்கு மாணவர்கள் முகத்தில் பொறாமை கலக்க கேட்டனர்.

“ஆமாம். உண்மையிலே எந்த ஒரு ஆணுக்கும் மாசத்துக்கு மூணு நாள் வயித்து வலி வர்றதில்ல! எந்த ஒரு ஆம்பளையும் கருவோட வலிய சுமந்து நம்மள பெற்றெடுக்குறது இல்ல! அப்புறம் எப்டி உலகத்துல அதிகம் கஷ்டப்படுறது ஆண்கள்னு நாம சொல்ல முடியும்?பசங்க பெரும்பாலும் அலுவலக வேலைய மட்டும்தான் செய்வாங்க. ஆனா இந்த வலியெல்லாம் பொறுத்துகிட்டு உலகம் பூரா பொண்ணுங்க, ஆபீஸ் வேல அப்புறம் வீட்டு வேல என எல்லாத்தையும் செய்வாங்க. அப்புறம், இந்தியால எத்தன ஆம்பளைங்க வீட்டுல துணி துவைகுறாங்க? எத்தன பேர் அவங்க சப்பாட அவங்களே சமைக்குறாங்க?” என தான் அந்த பட்டிமன்றத்துக்கு தயார் பண்ணிய சில பாயிண்ட்டுகளை, மாணவர்கள் முன் வீசினார்.

இந்நேரத்தில் ஆகாஷ் என்ற மாணவன் தன் நண்பனிடம் அமைதியாக ஒரு கேள்வி கேட்டான். “மச்சா முருகா”. “என்னடா” என்று முருகன் கேட்க, “அது என்னடா மூணு நாள் வயித்து வலி?” என்று ஆகாஷ் முருகனிடம் வினா எழுப்ப,முருகன் “இவன் இன்னும் எட்டாம் வகுப்பு மாணவனாகவே இருக்கிறான் என மனதில் நினைத்து கொண்டு, “டேய், அது பொண்ணுங்களுக்கு வர பீரியட்ஸ் டா”. என்றான்.

அதை கேட்ட ஆகாஷ், ஒரு மாக்கான் மாதிரி ஒரு கேள்வியை முருகனிடம் கேட்டான்.”டேய்! பொண்ணுங்களுக்கும், நமக்கும் ஒரே பீரியட்ஸ் தானடா வருது!!! நாமளும், அவங்களும் ஏழு பீரியடும் ஒண்ணாதானடா ஒக்காந்து இருக்கோம்!”, என்றான். இதற்கு மேல் இவனுக்கு என்ன சொன்னாலும் புரிய வைக்க முடியாது என நினைத்து கொண்டு, அவனை ஒரு முறை முறைத்து விட்டு, முருகன் ஆசிரியர் பேசுவதை கேட்க தொடங்கினான். ஆகாஷ் மனதிற்குள், “அப்டி நான் என்ன கேட்டுட்டனு இவன் இப்டி முறைக்கிறான்!!” என நினைத்தான்.

“சார், இவனுக்கு கூட ரெண்டு நாளா வயித்து வலி, சார்!” என மதிவாணன் சுட்டியாக, யுவராஜை தனது இரண்டு கைகளால் தொட்டு காட்டினான். யுவராஜை பார்த்த நிலவழகன், “அது அவன் அளவுக்கு அதிகமாக சாப்டதால் வந்து இருக்கலாம்!” என அவன் தொப்பையை கைகாட்டி கூறினார். வகுப்பே இப்போது யுவராஜை பார்த்து நகைத்தது.

இந்நேரத்தில் சுமத் என்ற மாணவன், காலையில் தான் செய்த ஒரு செயலை எண்ணி மனம் வருந்தினான். அருகில் இருந்த ஹரிஷ் அவனிடம்,”என்னாச்சுடா. ஏன் டல்லா இருக்க?” என கேட்டான்.”காலைல ஒரு சண்டைல கோவம் வந்து வனிதாவ அடிச்சுட்டேன் டா, இப்ப தான் தெரியுது பொண்ணுங்களுக்கு ஏற்கனவே நம்மள விட நெறைய கஷ்டம் இருக்குணு” என்றான் சுமத். உடனே ஹரிஷ் “சரி விட்றா, பாத்துக்கலாம்” என்றான்.
ஆசிரியர் நிலவழகன் தாமே தன் மாணவன் ஒருவனை கேலி செய்ததை குறித்து சற்று மனம் வருத்தம் அடைந்தார். உடனே யுவராஜுக்கு அருகில் சென்று, “யுவராஜ் சாரி” என்றார். பின்பு அவனிடம் “அளவுக்கு அதிகமா சாப்பிடுறதும், அதுவும் கொழுப்பு நெறஞ்ச பொருள வாங்கி சாப்புடுறதும் உடம்புக்கு கேடு” என்றார்.

யுவராஜ் அதற்கு, “சார், எப்பவுமே பசி எடுக்குது அதான் சாப்பிடுறேன்” என்றான். உடனே நிலவழகன் “சரி, இனிமே ஒரு மில்க் பிஸ்கட் பாக்கெட் வாங்கி பேக்ல வச்சிக்கோ, உனக்கு பசிக்கும் போது எல்லாம் அதுல ரெண்டு எடுத்து சாப்டு” என்றார்.

இதை கேட்ட அருகில் இருந்த மதிவாணன், “சார், ரெண்டு பிஸ்கட்லாம் எந்த மூலைக்கு பத்தும்” என்றான். இதை கேட்டு சற்று யோசித்த நிலவழகன் வகுப்பறையின் நடுவில் வந்து, “இப்பல்லாம் வர்ற மில்க் பிஸ்கட் அவ்வளவு தரம் இல்ல. ஒரு நாள் எங்க அண்ணன் சொன்னார், அந்த காலத்துல வந்த மில்க் பிஸ்கட்லாம் ரெண்டு சாப்டாலே வயிறு நெறஞ்சுரும்னு, ஆனா இப்ப வயிறு நெறயனும்னா ஒரு பாக்கெட் சாப்ட வேண்டியதா இருக்குது” என்றார் சற்று வருத்ததுடன்.

மீண்டும் மாணாக்களை பார்த்து ஆசிரியர் ,“அது சரி, ஏன் எல்லாரும் அவன பாத்து சிரிச்சீங்க? அவன் குண்டா இருக்குறான், அவ்வளவுதானே, அது அவன்கிட்ட இருக்குற ஒரு சின்ன குற. ஆனா அவன்தான் கிளாஸ் பஸ்ட். அது அவனோட பெரிய நிறை. அதை தெரிஞ்சிக்கோங்க” என்றார்.

மறுபடியும் மாணவர்கள் பலர் சிரித்தனர்!!

இப்போது ஆசிரியர் நிலவழகன் சற்று இறுக்கத்துடன் பேசினர், ”ஸ்டுடண்ட்ஸ் இப்ப நா சொல்றத கவனமா கேளுங்க, இப்ப நான் சொல்ல போறது அட்வைஸ் இல்ல, என் வாழ்கைல பல வருஷம் நான் ஆராய்ச்சி பண்ணி கத்துகிட்டது, அதாவது எப்டி வாழ்ந்தா, நல்ல உயர்ந்த வாழ்க்கைய அடையளாம்னு கத்துகிட்டது.

வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் ஆவலோடு “சொல்லுங்க சார்” என கூறினர்.”சரி, அதற்கு முன்னாடி இரண்டு பெரிய மனுசங்க பெயர சொல்லுறேன், அவங்கள பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லணும்”என்றார். மாணவர்களும் “சரி சார்” என்றனர்.

“அதில் ஒருவரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். மற்றவரை பற்றி ஓரளவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்றார் நிலவழகன்.

முதல் பெயரை சொன்னார்.”மாகாத்மா காந்தி!”.வகுப்பில் பலர் அவரை பற்றி பல விவரங்கள் கூறினர்.அவர் தேசத்தந்தை எனவும் , அறப்போரட்டங்களில் ஈடுபட்டவர் எனவும், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு என இருபதாண்டுகால வரலாற்றை ஒப்பித்தனர்.

இரண்டாவது பெயரை சொன்னார்,”ஸ்டீவன் ஹாக்கிங்!”. இதை கேட்டதும் வகுப்பில் பல மாணவர்களுக்கு முழி பிதிங்கியது. ஆனால் யுவராஜ் மட்டும் பதிலளித்தான்.”அவர் ஒரு ஐரோப்பிய இயற்பியல் விஞ்ஞானி” என்றான். ”சரியான விடை!” என நிலவழகன் கூறிய மறு வினாடியே மொத்த வகுப்பறையும் யுவராஜை பார்த்தது! யுவராஜ் தன் மனதில் பெருமை மாலை சூடிக்கொண்டான்.

நிலவழகன் தொடர்ந்தார், “நான் முதல்ல ஸ்டீவன் ஹாக்கிங் பத்தி சொல்றன், நம்மள்ள நெறைய பேர் ஏதாவது ஒரு விசயத்துல தோத்து போறப்ப மத்தவங்க கிட்ட இந்தமாதிரி குற சொல்றத கேட்டு இருப்போம். “எனக்குணு கடவுள் எதுவும் கொடுக்கல!, நான் எப்டி சாதிக்கிறதுணு!”. ஆனா அவனுக்கு தெரியாது கடவுள் அவனுக்கு இரண்டு கை, இரண்டு கால், தலை, கண்ணு, மூக்கு, காது எல்லாம் ஒழுங்கா கொடுத்துருக்காருணு” என்றார் நிலவழகன்.

இதை கேட்ட மாணவர்களிடம் வெளியில் சிரிப்பும், மனதில் சிந்திப்பும் தோன்றின. தொடர்ந்த நிலவழகன் “ஆனால் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் ஹாக்கிங் எனும் இவர் சிறுவயதிலேயே நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். அதாவது கண்ணசைவை தவிர உடம்பில் எந்த பாகமும், கை,கால் உட்பட செயல்படாத நிலையிலும், அண்டத்தில் உள்ள கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக உழைத்து இரண்டாவது நோபல்பரிசு பெற்றார்”. என்றார்.

“இதிலிருந்து வாழ்கையில் குறைகளை எண்ணி கொண்டு இருந்தால் வெற்றிகள் பெறுவது கடினம் என நாம் உணரலாம்” என்றார் நிலவழகன். மாணவர்கள் தங்கள் மனதில் தற்போது முன் பின் அறியாத ஒரு உற்சாகத்தை பெற்றனர்.

“சரி, அடுத்ததாக மகாத்மா காந்தி!

ஸ்டீவன் ஹாக்கிங் தனது குறைகளை சுமையாக கருதாமல் தனது நிறைகளை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றவர். ஆனால் காந்தியடிகள் தனது குறைகளை தனது பெரிய நிறைகளின் மூலம் மறைத்து வெற்றி பெற்றவர்!!” என்றார் ஆசிரியர்.

“மாணவர்கள் மறுபடியும் குழம்பினர். என்.சி.சி. இல் இருக்கும் பிரபு என்ற மாணவன், சற்று அதிருப்தியோடு ஆசிரியரிடம் வினவினான், “சார்ர்! காந்தி ஒரு சுதந்திர போராட்ட தலைவர், அவர் அப்பழுக்கற்றவர், அவர நீங்க குற சொல்றத நான் ஒத்துக்க முடியாது சார்” என்றான். நிலவலகனுக்கு தான் கூறிய கருதிற்கு என்ன விளைவுகள் வரும் என்பது நன்றாக தெரியும். மேலும் தன் தேசப்பிதாவை ஒருவன் சிறு கருத்து கூறினாலும், அது ஆசிரியராக இருந்தாலும் பொங்கும் தேசப்பற்றும், இரண்டாவது முறையாக மாணாக்கள் கருத்து வாதம் புரிகிறார்கள், என்ற மகிழ்ச்சியும் அடைந்தார்.

“தான் கூறியதை யாரும் தவறாக எடுத்துக்கு கொள்ள வேண்டாம். பொதுவாகவே இந்த உலகத்துல உள்ள மனுஷங்க அப்புறம் இதுக்கு முன்னாடி வாழ்ந்த மனுசங்க எல்லார்கிட்டயும் இருக்கும் குணம். அதாவது மனுஷகுணம்னு ஒண்ணு இருக்கு. இது நம்ம எல்லார்க்கிட்டயும் இருக்கு!”

“இங்க நான் மனுஷகுணம்னு சொல்றது ஒவ்வொரு மனுஷன்கிட்டையும் இருக்குற நல்ல குணங்களையும், கெட்ட குணங்களையும். அதாவது பாசிடிவ் அண்டு நெகடிவ். இதுல நாம என்ன செய்யணும்னா, அதாவது நம்ம சந்திகுற,பேசுற,பழகுற ஒவ்வொருத்தர்கிட்டயும் இருக்குற நல்ல குணங்களும், கெட்ட குணங்களும் நமக்கு தெரிய வரும். அப்ப அவங்ககிட்ட இருக்குற நல்ல விசயங்கள மட்டும் முடிஞ்ச அளவுக்கு நாம எடுத்துக்கிட்டு, அதாவது காப்பி பண்ணிக்கிட்டு, கெட்ட விசயங்கள, இப்படியும் ஒரு குணம் இருக்குதானு, தெரிஞ்சிகிட்டு விட்டுறணும்”. என்று முடித்தார் நிலவழகன்.

ஆரம்பத்தில் அவர் “நான் அறிவுரை கூறுவதாக எண்ண வேண்டாம்” என கூறி இருந்தாலும் தற்போது அவர் கூறியது முழுக்க முழுக்க அறிவுரையே! மாணவர்கள் சற்று விளக்கி கூறும்படி ஆசிரியரிடம் கூறினர். நிலவழகன் சாந்துக்கட்டியுடன், கரும்பலகையின் அருகில் சென்று, காந்தி என எழுதினார். பின்பு அதற்கு கீழே நிறை மற்றும் குறை என இரண்டு தலைப்புகளை இடைவெளி விட்டு எழுதினார். நிறை என்ற தலைப்பின் கீழ் மாணவர்கள் சொன்ன வாக்கியங்களை எழுதினார். குறை என்ற தலைப்பின் கீழ் “அழகில்லாத கையெழுத்து” அதாவது “பேட் ஹேன்ட்ரைட்டிங்” என ஆங்கிலத்தில் எழுதினார். முந்தைய நொடி வரை இறுக்கத்துடன் இருந்த பிரபு, சட்டென இறுக்கம் விலகி சற்று சிரிப்புடன் ஆசிரியரிடம் கேட்டான், ”சார், இது என்ன பெரிய குறையா!” நிலவலகனும் இந்த பதிலுக்காக தான் காத்திருந்தான். மறுபடியும் கரும்பலகையில் அதற்கு கீழே தொடர்ந்து, “காந்தியடிகளின் நிறையில் “95%”எனவும், குறையில் “5%” எனவும் எழுதினார்.

தற்போது மாணவர்களுக்கு முதல் இரண்டு பத்தியில் சொன்ன விஷயங்கள் சற்று பிடிபட்டன! இப்போது நிலவழகன் மாணவர்கள் முன் திரும்பி. தன் வலது கையை கரும்பலகையின் மீது காட்டி “காந்தியடிகள் நிறை நீங்கள் கூறிய நற்பண்புகலான 95%ல் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டும். அவரது குறை 5%ஐ நாம் நிராகரிக்க வேண்டும்”. என்றார்.

மாணவர்கள் அனைவரும் கைதட்டினர். நிலவழகன் தொடர்ந்தார்.” பிரபு சொன்ன மாதிரி பெரிய நிறைகளால் அவரது சின்ன குறைகள் எடுபடவில்லை. சோ நம்மளும் நம்மோட நிறைகளை அதாவது நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால், நம்மிடம் இருக்கும் குறைகள் பெரியதாக தெரியாது. “அதாவது அவை சிறுகுறைகள் ஆகிவிடும்” என்றார். மாணவர்களுக்கு அவர் சொல்வதின் சாராம்சம் விளங்கியது.
யுவராஜ் சந்தேகத்துடன் தன் ஆசிரியரை பார்த்து ஒரு கேள்வி கேட்டான். “சார், அது எப்டி? நாம பெரிய,பெரிய ஆளுங்கள முன்னோடியா வச்சு இருக்குறதே,

அவங்களோட நல்ல குணங்கள் நமக்கு வரணும்னுதான், அதாவது அவங்கள மாதிரி ஆகணும்னுதான். அவங்க குறைகளை நாம பெருசா கண்டுக்குறது இல்லையே!” என்றான். அதற்கு நிலவழகன் “அப்டினா, தனக்கு பிடித்த நடிகர் சிகரட் பிடிப்பதால், அவனும் சிகரட் பிடிக்கிறானே அவன் யார்?தனக்கு பிடித்த நடிகர் எகிறி, பறந்து சண்டையிடும் காட்சியை பார்த்து, தானும் அதுபோல சண்டை போட்டு ஜெயிலுக்கு போறானே, அவன் யார்? என கேள்விகளை அடுக்கினார். யுவராஜ் பதில் சொல்ல முடியாமல் பேந்த பேந்த முழித்தான். நிலவழகனே தொடர்ந்து பதிலும் கூறினார். “இவங்களாம் அவங்க அவங்களோட முன்மாதிரியோட குறைகளை அதாவது நெகடிவ் திங்க்ஸ்-ஐ பாலோ பண்ணவங்க” என்றார். மறுபடியும் கைதட்டல்.

“அதாவது கெட்டவனா இருந்தாலும் அவனுக்குள்ள ஒரு சின்ன பாசிடிவ் இருக்கும், நல்லவனா இருந்தாலும் அவனுக்குள்ள ஒரு சின்ன நெகடிவ் இருக்கும். இதுக்கு யாரும் விதிவிலக்கு இல்ல! சோ நம்ம பண்ண வேண்டியது, எல்லா மனுஷங்க கிட்டயும் இருக்குற நல்ல பண்புகளை பார்த்து, ஆராய்ஞ்சு, அத நம்ம லைப்லையும் அப்ளை பண்ணனும், அப்டி பண்ணா, நாம பெரியாள் ஆக வாய்ப்பு இருக்கு!” “அதேசமயம் எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் சில குறைகள் நம்மள விட்டு போகாது!” என்றார். மாணவர்கள் சற்று உண்ணிப்புடன் கவனித்தனர்.

“அதனால் சற்று விழிப்போட இருக்கணும்! எதனாலனா, எப்டி காந்தியோட சின்ன குறைய நான் பெருசா சொன்னேனோ, அதேமாதிரி நீங்க வளரும்போது உங்க வளாச்சி பிடிக்காத நண்பர்கள் சில பேர், உங்க குறைய தேடி கண்டு பிடிச்சு, வீண்பழி பரப்புவாணுங்க! அப்ப உங்க நிறைகள் அதிகமா இருந்தா, அதுல இருந்து தப்பிச்சு மேல வரலாம். இல்லனா அதோட உங்க வளர்ச்சி நிண்ணு போறது மட்டும் இல்லாம, குறையவும் செய்யும்!” என்று கூறி முடித்தார் ஆசிரியர் நிலவழகன்.

இப்போதுதான் மதிவாணனுக்கு புரிந்தது. எப்டி இந்த ஆசிரியர் பல மேடைகளில் கைதட்டல்களும்,பரிசுகளும் வாங்குறார்ணு. இருந்தாலும், அவரை சும்மா விட மனமில்லாமல், ‘எதையாவது கொளுத்தி போடுவோமே’! என்று நினைத்து ஒரு கேள்வி கேட்டான். “சார் நான் ஏன் அடுத்தவங்கள பாத்து காப்பி அடிக்கணும்? பாலோ பண்ணனும்? நான் நானாக இருந்தா என்ன தப்பு! அப்டி இருந்தா முன்னேற முடியாதா?” என்றான்.

“குட் கொஸ்டின் மதி! பட் நீ நீயா இருக்குறத நான் வேணாம்னு சொல்லவேயில்லையே! நான் வாழ்கையில் முன்னேற நான் ஆராய்ந்து கண்ட ஒரு வழிய சொன்னேன், அவ்ளோதான். கண்டிப்பா நீ நீயாக இருந்தாலும் முன்னேற முடியும் ஆனா உன் நிறை 95% ஆகா இருந்தால். ஆனால் இல்லையே! அதுதானே இங்க பெரும்பாலோரின் பெரும் பிரச்சனையே! அப்புறம் காப்பி அடிகிறத பத்தி சொன்னியே, கரெக்ட்டுதான்!” சற்று இடைவெளி விட்டு எல்லா மாணவர்களையும் பார்த்து நிலவழகன் சொன்னார் “இங்க இருக்குற எல்லாருக்கும் நான் ஒண்ணு சொல்லிக்க விரும்புறன். மனிதர்களாகிய நாம் குரங்கில் இருந்து வந்தவர்கள், அதனால் நம்ம உடம்பே காப்பி அடிக்காம வரல!! அப்புறம் நம்ம அப்பா,அம்மா டி.என்.ஏ ல இருக்குற திசுக்கள் மாதிரி, அப்டியே நம்ம உடம்புல திசுக்கள் இருக்குது! சோ நாம பிறக்கும் போதே அம்மா, அப்பா கிட்ட இருந்து காப்பி அடிக்கிறோம்!! பிறந்தப்புறம் எப்டி நடக்குறது, எப்டி சாப்புட்றது, எப்டி விளையாடுவதுணு எல்லாத்தையும் வேர ஒருத்தர பாத்து காப்பி அடிச்சுதான் வளர்றோம்” என்றார் நிலவழகன்.


“இப்டி வாழ்க்கையின் அடிப்படைகளையே காப்பி அடிக்கிற நாம ஏன் நல்ல விசயங்கள, நற்பண்புகள, ஹுமன் பீயிங் பாசிடிவ்கள, நல்ல ஆளுங்ககிட்ட இருந்து காப்பி அடிச்சு நம்ம தரத்த மேம்படுத்தக்கூடாது?” என ஆசிரியர் கூறிய உடனேயே இடிமுழக்கம் போல கைதட்டல்கள் விழுந்தன!!

2:30 மணி ஒலித்தது:-
பீரியட் முடிய நிலவழகன் இறுதியாக “ஸ்டுடண்ட்ஸ், இன்னிலேர்ந்து உங்க ரப் நோட்லையோ இல்ல வேற நோட்லையோ, உங்க நிறை (+) அப்புறம் குறை (-) இரண்டையும் ஒரு லிஸ்ட் போடுங்க. எதுவா இருந்தாலும் எழுதுங்க! நிறைகளை எப்டி மேம்படுத்தனும்னு பாருங்க. அதே சமயம் குறைகளை எப்புடி களையலாம்ணு முயற்சி எடுங்க” என்று கூறியபடியே வகுப்பறையை விட்டு வெளியே செல்லும் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நடக்கும் போது திடீரென்று நின்ற ஆசிரியர், திரும்பி விந்தையுடன் பிரபுவை நோக்கி, “மறுபடியும் ஞாபகப்படுத்துறேன் பிரபு!! மறக்காம நான் கொடுத்த கொஸ்டின் பேப்பரை நாளைக்கு வரும்போது 53 காப்பி போட்டு எடுத்துட்டு வா”. என்றார். உடனே மதி “பிரபு எனக்கு கொஞ்சம் சக்கர கம்மியா போட்டு எடுத்துட்டு வா” என கேலி செய்ய, அடுத்த நொடியே “ஆமா சார், ஏனா மதிக்கு சக்கரை வியாதி!!” என யுவராஜ் கவுன்ட்டர் கொடுக்க, வகுப்பறையில் இருந்த எல்லாரும் சிரிக்க, நிலவழகன் அதே புன்சிரிப்புடன் வகுப்பறையில் இருந்து வெளியேறினார்.

மாலை நேர இடைவேளையில்,
“வ.., வ...., வனி......, வனிதா!” என சுமத் சற்று நடுக்கத்துடன் அழைத்தான். “சொல்டா” என்று சற்று கோவத்துடன் கூறிய வனிதாவை பார்த்து, “சாரி” என கூறிவிட்டு, அவள் பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி வேகமாக நடந்தான், சுமத். சற்றும் எதிர்பார்க்காத இந்த நிகழ்ச்சியினால் தற்போது, வனிதா மனதில் கோபத்திற்கு இடையில் ஒரு சிறு மகிழ்ச்சி!.

-தொடரும்.

***நன்றி***



"என் பெற்றோர், என் அக்காள், எனது அனைத்து ஆசிரியர்கள், நண்பர்கள், தோழிகள்,
சொந்தங்கள், என் பணியிட மேலாளர் மற்றும் என் சக பணியாளர்கள் மற்றும் என்னோடு
இந்த வாழ்கையில் பயணித்த அனைவருக்கும் இந்த முதல் கதை சமர்ப்பணம்”.




இவண்,
இஸ்மாயில் அக்பர்,
வியாசர்பாடி,
சென்னை-600039.
கைபேசி: 9941189319.

எழுதியவர் : இஸ்மாயில் (8-Dec-16, 10:29 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 397

மேலே