மார்ட்டின் லூத்தர் கிங்கின் கனவு

அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்த மாமனிதர் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் தன் கனவு இன்னது என பிரகடனம் செய்தார்.

"எனக்கென ஒரு கனவு உள்ளது. இன்றைய கறுப்பின அடிமையின் மகன், இன்றைய உரிமையாளர் வெள்ளையரின் மகன் - இவ்விருவரும் ஒரே மேசையில் அளவளாவி உணவருந்தும் காலம் வரவேண்டும்."

தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்ட நம் மகாத்மா காந்தி தான் இம்மாமனிதரின் முன்மாதிரி மனிதர். 1959 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த மார்ட்டின், "நான் மற்ற நாடுகளைக் காணச் சென்றேன்.. ஆனால் காந்தி பிறந்த இந்தியாவை தரிசிக்க வந்துள்ளேன்" என்றார்.

மார்ட்டின் தனது 26 ஆம் வயதிலேயே கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராட்டக் களத்தில் இறங்கினார். காந்தியடிகள் போல மார்டினும் துப்பாக்கியால் சுடப்பட்டு 45 ஆம் வயதில் இறந்தார்.

அவர் கண்ட கனவு 2009 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் நிறைவேறியது. அன்றுதான் ஒரு கறுப்பின இளைஞரான பராக் ஒபாமா அமெரிக்க நாட்டின் 44 ஆவது குடியரசுத் தலைவரானார்..

மார்ட்டின் லூத்தர் கிங்கின் கனவு நனவானது போல், நாமும் விடாது முயன்றால் நமது கனவும் நிச்சயம் நனவாகும்..!

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்."
- குறள் 619

எழுதியவர் : ரசீன் இக்பால் (12-Dec-16, 5:20 pm)
பார்வை : 255

மேலே