எசப்பாட்டு 2 நண்டுக்கறி வேணுமுன்னு

எசப்பாட்டு .. 2

நண்டுக்கறி வேணுமுன்னு
சொன்னதுமே வயசுப்பொண்ணு
வயக்காட்டு பக்கம் போச்சே
பொன்னம்மா .. நேத்து
வயக்காட்டு பக்கம் போச்சே
பொன்னம்மா

வெளக்குவைக்கும் வேளையிலே
பிடிக்கப்போன வயசுப்பொண்ணு
பிடிச்ச நண்ட என்னெ செஞ்சே
பொன்னம்மா - நீ
பிடிச்ச நண்ட என்னெ செஞ்சே
பொன்னம்மா

வெளக்குவைக்கும் வேளையிலே
வயக்காட்டில் பிடிச்சநண்டு
வயசுப்பொண்ணக் கடிச்சுடுத்து
பொன்னய்யா - நண்டு
வயசுப்பொண்ணக் கடிச்சுடுத்து
பொன்னய்யா

குடுச்சுப்புட்டு கழனியிலே
கிடக்குமொருவன் மேலவிழ
பிடுச்சுமுத்தம் கொடுத்துப்புட்டான்
பொன்னையா - அவன்
பிடுச்சுமுத்தம் கொடுத்துப்புட்டான்
பொன்னையா

கொடுத்தபய பேரச்சொல்லு
எடுத்துப்போறேன் அருவாள
தலையவெட்டி கொண்டாறேன்
பொன்னம்மா - அவன்
தலையவெட்டி கொண்டாறேன்
பொன்னம்மா

வலயவீசி புடிச்சவந்தான்
தலையவீசி எறிஞ்சுப்புட்டா
நடந்ததவறு மறஞ்சுடுமா
பொன்னையா - நேத்து
நடந்ததவறு மறஞ்சுடுமா
பொன்னையா

ஊருக்குள்ள தலகாட்ட
முடியாம போச்சுன்னா
ஆத்திரம்தான் பெருகுமடி
பொன்னம்மா - எனக்கு
ஆத்திரம்தான் பெருகுமடி
பொன்னம்மா

போதையிலே கொடுத்தமுத்தம்
ஞாபகமே இல்லாம
ஏதேதோ நினைக்கிறயே
பொன்னையா - நீ
ஏதேதோ நினைக்கிறயே
பொன்னையா

நண்டுக்கறி வெச்சுருக்கேன்
தின்னுப்புட்டு தாச்சிக்கலாம்
வெண்ணிலவப் பாத்துக்கிட்டே
பொன்னையா - நாம
வெண்ணிலவப் பாத்துக்கிட்டே
பொன்னையா

- தர்மராஜன் வெங்கடாச்சலம்

19-12-2016

எழுதியவர் : (19-Dec-16, 4:19 pm)
பார்வை : 103

மேலே