பெண்ணியம்

பெண்ணியமும் ஓர் மனித உரிமையே......
சுதந்திரம் என்பதும் சமத்துவம் என்பதுமே பெண்ணியம்.
பெண்ணியம் என்றாலே ஆணுக்கு எதிரானது,ஆண்களை அடக்கியாள நினைப்பது அல்லது ஆண்களை முழுவதுமாக வெறுத்து ஒதுக்குவது என்ற கருத்து பரவலாக உள்ளது.
பெண்ணியம் என்றால் என்ன...??
நடைமுறை சார்ந்து இதை பார்ப்போமேயானால்,இன்று ஒரு பெண் படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்கிறாள் என்றால்,அதில்கூடப் பெண்ணியம் இருக்கிறது.ஏனென்றால் அந்த உரிமைகூடத் தொடர்ச்சியான சமூக சீர்திருத்தச் செயல்பாடுகளின் விளைவே....
நடைமுறை வாழ்க்கையில் பேரூந்தில் தன்னை உரசிக்கொண்டே வரும் வக்கிர மனம் கொண்டவனை எதிர்கொள்ளும் நிலையில் அவளுக்குப் பெண்ணியம் உதவிக்கு வருகின்றது.இன்றும் அவள் நள்ளிரவில் தனியாகச் செல்ல முடியாத நிலையுள்ளது.
அந்த நிலையில் பெண்ணைத் தாயாக,தெய்வமாக வர்ணிக்கும் வெற்று வர்ணணைகளை புறந்தள்ளி நிஜத்தை உணரக்கோருகிறது பெண்ணியம்.இப்படியான யதார்த்தங்கள்,புத்தகங்களில் இருக்கும் பெண்ணியத்திற்கான வரையறைகள்,அரசியலமைப்பு பேசும் சமநீதி ஆகியவற்றைப் புறக்கணிக்கும் அல்லது கேலி செய்யும் நிலை சமூகத்தில் பலரிடம் உள்ளது.
மறுபுறம் அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்து,அண்ணாவின் பாசத்தில் நனைந்து,கணவனின் காதலில் துளிர்த்து வாழும் பெண்கள் பெண்ணியமே தேவையில்லை என்கின்றனர்.இவர்கள் அனைவரும் ஆண்கள் கொடுத்த சுதந்திரத்தைக் கொண்டு வாழ்பவர்கள்.தங்கள் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ள விரும்பாதவர்கள்.ஆனால் அரவணைக்கும் அப்பாவும்,பாசம் பொழியும் சகோதரனும்,காதல் கணவனும் எடுத்துக் கொடுக்கும் யதார்த்தமான விடயங்களை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமானது.
இவ்வுலகில் இன்று அனைத்து துறைகளிலுமே பெண்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர்.ஆனால் அவர்கள் சமூக கட்டமைப்புகளை உடைத்துத்தான் வெற்றி கண்டார்கள் என்றால் அது தவறு.அவர்கள் சமூக கட்டமைப்புக்களை மதித்தனர்.அவற்றினை தமக்கு சாதகமாக பயன்படுத்தினர்.தமது வாழ்வியலில் மாற்றத்தினை கொண்டு வந்தனர்.அதனூடாக வாழ்க்கையில் வெற்றி கண்டனர்.பல விமர்சனங்களை அவர்கள் தாண்டினார்கள்.
ஓர் ஆண் சினிமா பார்க்க இரவு நேரத்தில் தன் நண்பர்களுடன் செல்லமுடியும்.ஆனால் இன்றைய சூழலில் ஒரு பெண்ணால் அது முடியாது.ஓர் இளைஞன் தன் நண்பர்களுடன் வெளியூர் சென்று எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம்.ஆனால் ஓர் இளம்பெண் அவ்வாறு செல்லமுடியாது.
வேலை நிமித்தமாகவோ கல்லூரிச் சுற்றுலாவுக்காக சென்றாலும் கூட அதற்கான பயண உரித்துகள்,அவளுடன் செல்பவர்கள் குறித்த விடயங்கள் ஆகியவை அவளின் பெற்றோர் கையில் இருக்கும்.இது சின்ன விடயம்தானே என்று புறக்கணித்துவிடலாம்.
ஆனால் இதில் நுட்பமான உடல் அரசியல் அடங்கியுள்ளது.
ஒரு பெண்ணிண் உடலானது குடிப்பெருமை,சமயம்,குலப்பெருமை,சமுதாயம் ஆகியவற்றின் பெருமை அனைத்தையும் சுமந்து திரியும்.ஆனால் ஆணுக்கு அப்படியில்லை.
பொருளாதார ரீதியில் குடும்பத்தைக் காக்க ஓர் ஆண் மகன் வேலைக்குச் சென்றால்,அந்தக் குடும்பம் தலையெடுத்துவிட்டது என்கிறது சமுதாயம்.அதே குடும்ப சுமை போக்க பெண் வேலைக்குச் சென்றால் அது சமுதாயத்தால் பரிதாபத்திற்குரிய நிலையாகப் பார்க்கப்படுகிறது.
19ஆம் நூற்றாண்டு வரை பெண்கள் கல்வி கற்பதே மிகப் பெரிய விடயமாக இருந்தது.இன்று 21ஆம் நூற்றாண்டில் கல்வியும் வேலைவாய்ப்பும் பெண்களுக்கு கிடைத்துள்ளன.இந்த மாற்றங்களை பலர் எரிச்சலோடும் சிலர் நிறைவோடும் பார்க்கிறார்கள்.ஆனால் பெண்கள் போக வேண்டிய தூரமோ ஒளிவேகப் பயணத்தை கோருகின்றது.
பெண்ணுரிமை,பெண்நிலைவாதம்,பெண்ணியம் என்பவை அடிப்படையில் சம உரிமைக்கான குரல்கள்தான்.இதைப் பெண்கள் மட்டும்தான் எழுப்ப வேண்டுமென்றில்லை.கல்வி,வேலை,இலட்சியம்,பொழுதுபோக்கு,திருமணம்,பாதுகாப்பு,நடமாட்டம் என அனைத்திலும் ஆணுக்கு கிடைக்கும் உரிமைகளும் சுதந்திரமும் பெண்ணுக்கு கிடைக்க வேண்டும்.இது ஆண்களின் உரிமையைப் பறிக்கும் நோக்கம் கொண்டதல்ல.ஆணுக்கு எதிரானதுமல்ல.
இது சராசரியான மனித உரிமையே.
பெண்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்து,சமுதாயத்தில் அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும்,பால் சமத்துவத்திற்காக போராட உதவும் ஒரு வழிகாட்டியே பெண்ணியம்.நியாய உணர்வும் சமத்துவத்தில் நம்பிக்கையும் கொண்ட ஆண்களும் இணைந்து பாடுபட வேண்டிய யதார்த்தம் இது.சராசரியாக பார்த்தால் பெண்ணியமாக தெரிந்தாலும் அடிப்படையில் மனித உரிமையே பெண்ணியம்.
இது "அடையாளம்" எனும் இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.......