நதிக்கரை ஞாபகங்கள்

கால்சராய் முட்டி தாண்டிடா
பாலகப் பருவம்
அத்வைதம் புகன்ற மகான்
அவதரித்த நிலம்
'காலடி' தழுவிச் செல்லும்
பாரதப் புழையின் ஈரம்

நாற்பது படிகள் மேலும்
நானிறங்கி வரவே என்
காலடி ஒற்றிய குளிர்நீர்

அகண்ட நதி நடுவே
பொன்னிற மணல் திட்டு
நடந்தே செல்லலாம் நக
இடுக்கில் மீன் முட்டு
மணல் திட்டிற்கப்பால் ஆழமதில்
சலனமில்லாத் தோணி ஒன்று
சலசலப்பும் ஏதுமின்றி சில
சத்தமில்லா மரங்களும் கரை
நெடுகக் காவலிருக்க

கும்மாளமிட்ட குளிரலையும்
கூழாங்கல் வழவழப்பும்
கையெடுத்த மணல் குறுகுறுப்பும்
கால்நகம் முட்டிய மீனும் இன்றும்
கனவுகள் பல கலைத்தாலும்
கனவுகளிலா நதிகள்..?
விழித்திரு...!
---- முரளி

எழுதியவர் : முரளி (8-Jan-17, 9:45 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 1209

மேலே